2 சாமுவேல் 14: 1- 2 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து..
இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயைப் இதுவரை வேதத்தில் படித்ததாக ஞாபகமே இல்லை! உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் பற்றி பிரசங்கம் கேட்டிருக்கிறோமா? நான் கேட்டதே இல்லைங்க! வேதத்தை வாசிக்கும்போது அல்லது வேதாகமக் கல்லூரியில் படிக்கும்போது இந்தப் பெண்ணைப் பற்றி ஒருவேளை படித்திருந்தாலும் இவள் என் மனதில் தங்கவே இல்லை என்பதுதான் என்னைப் பொறுத்தவரையிலான உண்மை.
அதனால்தான் இந்தப் பெண்ணைப் பற்றி சற்று நாம் அலசிப் படித்து விடலாமே என்று யோசித்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது எப்படி கர்த்தரின் வார்த்தைகளில் பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன என்று!
இந்தக் கதை ஆரம்பிக்கும் இடத்தில் தாவீதும் அவனுடைய குமாரனான அப்சலோமுக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் இருந்தது. நாம் இதற்கு முன்பு படித்த மாதிரி அப்சலோம் தன்னுடைய சகோதரனாகிய அம்னோனை கொலை செய்து விட்டான். அவனுடைய அழகிய தங்கை தாமாரை அம்னோன் கற்பழித்ததை பழிதீர்த்து விட்டான். நமக்கு அவன் செய்தது சரி என்று தோன்றலாம் ஆனால் அது தாவீதினுடைய வீட்டுக்குள் பெரிய பிளவை ஏற்படுத்தியிருந்தது.
தாவீதினுடைய நெருங்கிய நண்பனும், இஸ்ரவேலின் சேனைத்தலைவனுமாகிய யோவாப் நடந்த எல்லாவற்றையும் அறிந்தவனானதால் இந்த பிரச்சனைக்கு முடிவு காண ஏதாவது செய்ய நினைத்தான். ஒருவேளை இதைப்பற்றி தாவீதிடம் பேச முயற்சி செய்தாலும் அதில் பிரயோஜனம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இந்த சூழ்நிலையை சமாளிக்க அவன் தெக்கோவாவிலிருக்கிற ஒரு புத்தியுள்ள ஸ்திரீயை வரவழைக்கிறான். இந்தப்பெண் ஒரு புத்தியுள்ள ஸ்திரீ என்று வேதம் சொல்கிறது. அவளுடைய ஞானம் நன்மை தீமையை பகுத்தறியும் ஞானம்! இது தேவனாகிய கர்த்தர் அவளுக்கு அளித்த ஞானம் என்று பின்னர் படிக்கலாம்!
இந்த ஞானம் வேண்டுமென்று நான் கூட அதிகமாக ஜெபிப்பதுண்டு. தேவனுடைய கிருபையால் உண்மையை அறிந்து தீமையை விட்டு விலகும் ஞானம். இதைதான் அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 2: 14,15 ல்
ஜென்மசுபானமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றப்பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கபடுகிறவைகளானதால் அவைகளை அறியவுமாட்டான்.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
என்று கூறுகிறார். அப்படியானால் கர்த்தரை அறியாதவனோ ஆவிக்குரிய காரியங்களை ஆராய்ந்து நிதானிக்கமாட்டான் என்று பார்க்கிறோம். ஆனால் நாம் தேவனாகிய கர்த்தரிடம் இந்த தெய்வீக ஞானத்துக்காக ஜெபிக்கும்போதுதான் இது நமக்கு அருளப்படுகிறது. நம்முடைய கண்கள் இருளடைந்து இருக்கும்போது நம்மால் தேவனுக்குரிய காரியங்களை நிதானிக்க முடியாது.
நாம் தேடும்போது கண்டடைவோம் என்று கூறும் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். கர்த்தராகிய இயேசுவைத் தேடி வந்த சாஸ்திரிகள் மூவர் ராஜாவின் அரண்மனையில் அவரைத் தேடினபோது அவரை எதிர்பாராத இடத்தில் கணடடைந்தனர்.
புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும். மூடரின் வாயோ மதியீனத்தை மேயும். ( நீதி: 15:14)
தேவனே எல்லாவற்றையும் நிதானித்து நன்மை தீமையை பகுத்தறியும் ஞானத்தை பரிசுத்த ஆவியின் கிருபையினால் எங்களுக்குத் தாரும் என்று ஜெபிப்போமா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்