சங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர்.
தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஏழாவது நாளாக இந்தத் தலைப்பில் தியானிக்கிறோம்.
நாம் கடைசியாக ஏதேன் என்னும் பரிபூரண அழகானத் தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார்.
வேதம் ஆதியாகமம் 3 ல் சொல்கிறது தேவன் உண்டாக்கின சகல ஜீவன்களையும் விட சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்தீரியிடம் , கர்த்தர் புசிக்கக்கூடாதென்று சொன்ன அந்தக் கனியை புசிக்கும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் தேவர்களைப் போல இருப்பீர்கள் என்று பொய் கூறியது.
ஆதாமும் ஏவாளும் சர்ப்பத்தினுடைய பொய்யென்னும் ஞானத்தில் சிக்கிவிட்டனர். அன்று சர்ப்பம் மட்டும் அல்ல இன்றும் எத்தனைபேர் நம்மை பொய் சொல்லி வலையில் சிக்க வைக்கிறார்கள். நம்முடைய சமுதாயத்தில், நாம் வேலை செய்யும் இடங்களில் நாம் பொய்யை பார்க்க வில்லையா. சில நேரங்களில் நமக்கு நாமே பொய் சொல்லி நம்மை ஞானவான் என்று ஏமாற்றிக் கொள்வதில்லையா?
அதுமட்டுமல்ல! அந்த சர்ப்பம் ஏவாளிடம் கர்த்தர் கூறிய வார்த்தைகளை எப்படி புரட்டுகிறது பாருங்கள்! கர்த்தர் நீங்கள் சாகாதபடிக்கு அந்தக் கனியை புசிக்க வேண்டாம் என்ற வார்த்தைகளை,
ஆதி: 3: 4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி நீங்கள் சாகவே சாவதில்லை என்று புரட்டிப் போட்டது.
நாம் தாவீதைக் குறித்தும் அவன் தன் தேவனாகிய கர்த்தருக்கு எழுதிய அன்பின் கடிதத்தைக் (சங் 51) குறித்தும் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் ஆதியாகமத்தில் வலம் வருகிறேன் என்று நினைக்கிறீர்களா?
பாவம் முதன்முதலில் இந்த பூமியில் தலைகாட்டிய தருணத்தை சற்று நினைத்துப் பார்க்கத்தான்!
அது ஏதேனாயிருக்கட்டும், தாவீதின் அரண்மனையாயிருக்கட்டும் பாவம் ஒரே மாதியாகத்தான் தலையைக் காட்டுகிறது. இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது இரண்டு வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார். அவை உண்மை,ஞானம் என்ற வார்த்தைகள்.
பாவத்தின் வடிவமைப்பே முதலில் பொய், பின்னர் அந்தப் பொய்யை உண்மையைப் போல புரட்டும் ஞானம்!
தாவீது இங்கு தேவனாகிய கர்த்தரிடம் அவர் தன்னிடம் உண்மையை அல்லது நேர்மையைத் தான் விரும்புகிறார் என்று சொல்கிறான். கர்த்தர் போலியான வேடத்தை அல்ல, தவறை மறைக்காத நேர்மையை, உண்மையை விரும்புகிறார்.
ஆனாலும் இங்குதான் தாவீதுடைய பிரச்சனையும், ஏன் உன்னுடைய, என்னுடைய பிரச்சனையும் வருகிறது. நாம் வாழும் இந்த உலகத்தில், உண்மையை ஆராய்ந்து அறிவது சுலபம் அல்லவே அல்ல! நாம் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் சிக்கி விடுகிறோம். அதனால் தாவீது தன்னுடைய அன்பின் கடிதத்தில், தன்னுடைய அன்பின் தகப்பனிடம், ஐயா! நான் உண்மையை அறிந்து கொள்ள முடியாத இடத்தில் எனக்கு
அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர், உம்முடைய ஞானத்தை எனக்குத் தாரும் என்கிறான்.
அன்று ஏதேனில் ஒரு பொய்யனுடைய ஞானத்தை நம்பி ஏமாந்தாள் ஏவாள். தேவனாகிய கர்த்தர் உரைத்த உண்மை வார்த்தைகளை நம்பாமல், அவருடைய ஞானத்தைத் தேடாமல், பொய்யாலும், பொய் ஞானத்தாலும் ஏமாந்து போனாள்.
தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ன ஆச்சரியம் தாவீது அவரை விட்டு வழிவிலகி அலைந்து திரிந்தாலும், தன்னுடைய உள்ளத்தின் உட்புறத்தில் அவருக்கு முன் உண்மையாக வாழவும், அதற்கேற்ற ஞானத்தை அவர் அருளும்படியும் ஜெபிக்கிறான்.
விசுவாசமே ஞானம் என்னும் புத்தகத்தின் முதல் அத்தியாயம்.
உன்னுடைய உள்ளத்தைத் திறந்து தாவீதைப் போல என்னில் உண்மையைத் தாரும், உண்மையை நான் அறிந்து கொள்ள உம்முடைய ஞானத்தைத் தாரும் என்று ஜெபிப்பாயானால் கர்த்தர் தாவீதை நேசித்தது போல உன்னையும் நேசிப்பார்! ஆமென்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்