சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும்.
தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற தலைப்பின் பன்னிரண்டாம் பாகம் இன்று!
கடந்த வாரத்தில் கர்த்தர் நம்மோடு பண்ணின உடன்படிக்கையில் மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார்.
இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில் கொண்டு இந்த வசனத்தை நாம் மறுபடியும் படிக்கப்போகிறோம். தாவீது தான் தேவனாகிய கர்த்தருடன் கொண்டிருந்த அந்த உறவு மறுபடியும் தனக்கு கிடைக்க வேண்டுமென்று விரும்பினான். சங்:23 ல் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் என்று எழுதின தாவீது இப்பொழுது இல்லை! ஏத்தியனான உரியாவை யுத்தத்தின் முனையில் நிறுத்தி கொலை செய்த தாவீது தான் இன்று இருக்கிறான். அதனால் தான் அவன் ஆண்டவரே எனக்கு சந்தோஷத்தைத் திரும்பத் தாரும் என்று ஜெபிக்கிறான்.
அதன் பின்னர் தாவீது இன்னொரு வாசகத்தையும் இங்கு எழுதுகிறான்!அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். நான் இதைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தபோது அநேக வேத விரிவுறைகள் இதை பெரிது படுத்தி எழுதவில்லை!
தாவீது சந்தோஷத்தை இழந்ததினால் அவன் தன்னுடைய எலும்புகள் நொறுங்கிபோனது போன்ற வேதனையை அனுபவித்தான். கர்த்தரின் கோபாக்கினைக்கு பயந்து அவன் எலும்புகல் நடுங்குவதாக எழுதுகிறான்.
சங்: 6: 1, 2 கர்த்தாவே உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
என் மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே நான் பெலனற்றுப் போனேன், என்னைக் குணமாக்கும் கர்த்தாவே என் எலும்புகள் நடுங்குகிறது.
இன்றைய வேதாகமப் பகுதியோடு மிகவும் சம்பந்தம் கொண்ட இந்தப் பகுதி, இரண்டு காரியங்களை விளக்கியது.
முதலில் கர்த்தர் நிச்சயமாக தாவீதின் வழிதவறிப்போன வாழ்க்கையில் பிரியப்படவில்லை! இரண்டாவது எந்த வலியும், நோயும் கர்த்தரால் வரும் தண்டனை என்று எண்ணப்பட்ட கால கட்டம் அது!
இங்கு தாவீது என்ன சொல்கிறான் பாருங்கள்! ஆண்டவரே உம்முடைய சந்தோஷம் இல்லாமல் நான் நொறுங்கிய எலும்புகளால் வரும் வேதனையை நான் அனுபவிக்கிறேன். நீர் என்னை குணமாக்காமல் என்னால் தாங்கமுடியாது!
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை நம் சரீரத்தை பெலவீனப்படுத்துமா? நம்முடைய நோய் இன்று கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தண்டனையா? இப்படியெல்லாம் உங்கள் மனதில் எண்ணம் வரலாம்?
இந்த உலகத்தில் சிலருக்கு எந்த நோயும், துன்பமும், வறுமையும், வராமல் வாழ்க்கையை கடத்தி விடுகின்றனர். ஆனால் சில பரிசுத்தவான்களுக்கோ வீடு வெள்ளத்தில் அடிபட்டு போகிறது, அல்லது புற்று நோய் திடீரென்று தாக்குகிறது. இவர்கள் தண்டனையையா அனுபவிக்கிறார்கள்? இன்று நான் கூட மருத்துவரின் பார்வையில் ஒரு இருதய நோயாளி தான்! ஆனாலும் மல்கியா தீர்க்கதரிசி எழுதும் இந்த வசனம் ஒவ்வொருநாளுக்கும் உரிய பெலத்தைக் கொடுப்பதை நான் அனுபவித்திருக்கிறேன். என்ன அருமையான வாக்குத்தத்தம்!
மல்கியா 4:2 ஆனாலும் என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்.
இந்த தீர்க்கதரிசனம் கடைசி காலத்துக்குரிய வாக்குத்தத்தம்! இந்தக் காலத்துக்குக்காகத்தானே ஒவ்வொரு விசுவாசியும் காத்திருக்கிறோம். அன்று தீர்க்க முடியாத எந்த நோயும் இந்த பூமியில் இருக்காது!
சரீர வேதனைகளால் அவதிப்படும் சகோதர சகோதரிகளுக்கு ஒரு வார்த்தை! தேவனாகிய கர்த்தர் நம்மோடு பண்ணியிருக்கும் இந்த வாக்குத்தத்தம் இம்மைக்கு மட்டும் அல்ல மறுமைக்கும் உரியது. இந்த பூமியில் வாழும்போது நம்முடைய நொறுங்கிய வாழ்வில் தம்முடைய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தந்து நம்மை பெலப்படுத்துவது மட்டுமன்றி, மறுமையில் பரிபூரண சுகமான வாழ்க்கையை நமக்கு அருளுவார்!
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்