ஆதி:41: 39” பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை”
Wishing all my family who visit this garden from various countries a VERY BLESSED CHRISTMAS! May the joy of Christmas fill your hearts!
யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி சில நாட்கள் நாம் தியானித்துக் கொண்டு இருக்கிறோம். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஆதி 29:3 ல், வேதம் கூறுகிறது, யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப் பட்ட பின், எகிப்தை வந்து அடைகிறான். ஒரு பணக்கார வாலிபனாய் வாழ்ந்தவன், இப்பொழுது போத்திபாரின் வீட்டில், ஒரு அடிமையாக வேலை செய்கிறான். இந்த அதிகாரத்தில், இரண்டே வசனங்கள் வந்தவுடன், கர்த்தர் அவனோடிருந்தார் என்று போத்திபார் அறிந்ததாக வாசிக்கிறோம். யோசேப்பு அங்கிருந்தவர்களை விட அதிகம் படித்ததினாலோ அல்லது அழகுள்ளவன், பணக்காரன் என்பதாலோ அல்ல, அவனுடன் கர்த்தர் இருக்கிறார் என்பதே அவன் எஜமானாகிய போத்திபாரின் கண்களில் பட்டது.
அவன் காரியசித்தியுள்ளவனாய் எல்லா காரியங்களையும் சிறப்பாக செய்தது, கர்த்தர் அவன் செய்கிற யாவையும் வைக்கப் பண்ணுகிறார் என்று போத்திபாரின் வீட்டில் பறைசாற்றியது. நாம் செய்த வேலையை யாராவது பாராட்டினால் உடனே நாம், நம்முடைய கல்லூரி படிப்பிற்கோ அல்லது நம்முடைய கடின உழைப்பிற்க்கோ மகிமையை கொடுப்போம்!
ஆனால் இங்கு யோசேப்பு அமைதியாக, அடக்கமாக தேவன் தன்னோடிருப்பதை பறை சாற்றினான். எப்படி ஐய்யா இப்படி அருமையாய் செய்தாய்? என்று கேட்டால், பதில் கர்த்தர் என்னோடிருப்பதால் என்று வரும்!
அங்குமட்டுமல்ல, யோசேப்பு, சிறையில் தள்ளப்பட்டபோது, அங்கும் சிறைச்சாலையின் தலைவன் எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்புக்கொடுத்ததின் காரணம் கர்த்தர் அவனோடிருந்ததுதான்!
பின்னர் சிறையில், பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கியபோதும் கர்த்தர் அவனோடிருந்தார்.
ஆதி: 41: 25 ல் பார்வோன் முன்பாக அழைக்கப்பட்டு, அவனுடைய நித்திரையை கெடுத்த சொப்பனத்தின் அர்த்தத்தை தெளிவாக விளக்கியபோது, யோசேப்பு பார்வோனை நோக்கி, “தேவன் தாம் செய்யப் போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்” என்றான்.
பார்வோன் தன் சொப்பனத்தின் விளக்கத்தை கேட்டபோது, ‘உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் ஒருவனும் இல்லை என்று கூறி, யோசேப்பை பார்வோனுக்கு அடுத்தபடியாக எகிப்தை ஆளும் அதிகாரியாக்கினான்.
ஒரு உலகப்பிரகரமான ராஜா, கர்த்தரை அறியாத ஒரு மனிதன், அப்படி எதை யோசேப்பின் வாழ்வில் கண்டான்? அவனுடைய கல்லூரிப் படிப்பையா, அவன் வாங்கியிருந்த பட்டங்களையா? அழகையா? திறமையையா? குடும்ப பின்னணியையா? சிறிது நேரம் அவனுடன் இருந்த எல்லாரும் உணர்ந்த ஒரு காரியம் கர்த்தர் அவனோடிருந்தார் என்ற உண்மையே!
என்னைத் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்! படிப்பும், பட்டங்களும், திறமையை வளர்ப்பதும் நிச்சயமாக நமக்கு தேவையே! ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! பெரிய பட்டப் படிப்பு இருக்கலாம், உலகம் போற்றும் அழகு இருக்கலாம், விதவிதமான துணிமணிகள் உடுத்தலாம், ஆனால் கர்த்தர் உன்னோடு இல்லாவிடில் நீ உலகத்தை ஆதாயப்படுத்தினாலும் உன் ஆத்துமாவை இழந்து போவாய்!
சங்கீ:111: 10 கூறுகிறது, கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று.
தன்னுடைய பதினேழு வயதில் தன் குடும்பத்தை பிரிந்து த தேசத்துக்கு அடிமையாக வந்த யோசேப்பு தன் கண்களை ஏறேடுத்துப் பார்த்து கர்த்தரை நோக்கி அவர் தன்னோடு இருக்கும்படி அழைத்தான்! கர்த்தர் அவனோடு இருந்தார். அவன் தனிமையை அனுபவிக்கவில்லை. அவனை சுற்றி இருந்தவர்கள் சில நொடிகளில் அவனோடு கர்த்தர் இருந்ததை உணர முடிந்தது!
என்ன அற்புதமான சாட்சி? உன்னையும், என்னையும் அறிந்த நம் நண்பர்கள், நம் குடும்பத்தினர் , நம்முடன் கர்த்தர் இருப்பதை உணர்கிறார்களோ?
பரிசுத்த தேவன் நாம் அவரைப் பற்றி பேசுவதை விட பரிசுத்தமாய் நாம் வாழ்வதையே விரும்புகிறார்.
ஜெபம்: நல்ல ஆண்டவரே! நீர் என்னுடன் இருப்பதை இந்த உலகம் அறியும்படி நான் வாழ எனக்கு உதவி தாரும். ஆமென்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ or ‘ follow என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.