யாத்தி:15: 20, 21 “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
மிரியாம் அவர்களுக்கு பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.”
இன்று காலையில் எப்பொழுதும் எழும்புகிற நேரத்தைவிட சிறிது அதிக நேரம் படுத்திருக்க என் சரீரம் ஆசைப்பட்டது. ஆனால் என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பறவைகளின் சத்தம் என்னை நிச்சயமாக தூங்க விடவில்லை. எழும்பி சிறிது நேரம் அவைகளை கூர்ந்து கவனித்தேன்.
மழை மேகம் மூடிக்கொண்டிருந்தது. ‘சில்’ என்று வந்த காற்று தென்னை ஓலைகளை ஊடுருவி சென்றது. தென்னை மரத்தில் இருந்த காக்கைகளும், கிளிகளும் உற்சாகமாய் குரல் கொடுக்க, சிறிய குருவிகள் உற்சாகமாய் குரல்களை உயர்த்தின! அவைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எனக்கு வெட்கம் உண்டாயிற்று! இந்தப் பறவைகள் காலையில் தங்கள் குரலை உயர்த்தி, தன் சிறு உடம்பையும், சின்னம்சிறு கால்களையும் ஆட்டி, இறக்கைகளை அடித்து, உற்சாகமாய் தேவனை துதிக்கும்போது நான் ஏன் அப்படி செய்யக்கூடாது என்று சிந்தித்தேன்!
தேவன் எனக்கு கொடுத்திருக்கிற ஜீவன், சுகம், பெலன் இவற்றை எண்ணும்மோது, என் உடலின் ஒவ்வொரு நரம்பும் தேவனை துதிக்கும் துதியால் அல்லவா நிரம்ப வேண்டும்! நாம் கடந்த சில நாட்களாக படித்துக் கொண்டிருக்கிற மிரியாமின் வாழ்க்கை துதித்தலுக்கு உதாரணமான வாழ்க்கை!
கடந்த வாரம் நாம் மிரியாமின் இரண்டு அருமையான குணநலன்களைப் பற்றிப் பார்த்தோம். அவள் ஞானமுள்ள பெண், திட நம்பிக்கையுள்ள பெண் என்று பார்த்தோம். சிறுவயதிலேய தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசமும், அவர் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்ற நம்பிக்கையும் அவளுக்குள் இருந்ததால், மிகுந்த ஆபத்தான வேளையில் தேவன் அருளிய ஞானத்தினாலும், தைரியத்தாலும், ராஜ குமாரத்தியின் முன் நின்று, அவளை ஒரு சிறு பெண் தானே என்று ராஜ குமாரத்தி நினைத்து விடாதபடி பேசி தன் தம்பியின் உயிரைக் காத்தாள்.
நாம் எப்பொழுதும், கர்த்தர் மோசேயை உபயோகப்படுத்தி இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் என்று தான் நினைக்கிறோம். ஆனால் மோசேயை உருவாக்குவதற்கு , தங்கள் உயிரைப் பணயம் வைத்து எபிரேய ஆண் பிள்ளைகளை சிசுகொலை செய்யாமல் காத்த சிப்போராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளையும், எபிரேயக் குழந்தை என்று தெரிந்தும் இரக்கம் காட்டிய அந்நிய நாட்டு ராஜகுமாரத்தியையும், ஞானத்தோடும் விவேகத்தோடும் நடந்து தம்பியின் உயிரைக் காத்த மோசேயின் தமக்கை மிரியாமையும் கர்த்தர் கருவிகளாக உபயோகப்படுத்தினார்.
அதுமட்டுமல்ல, மோசே பார்வோனின் அரண்மனையில் 40 வருடங்கள் வளர்ந்து, எல்லா கலைகளையும் கற்றறிந்து, இஸ்ரவேலின் தலைவனாக உருவாகிக் கொண்டிருந்த வேளையில், கர்த்தர் ஆரோனையும், மிரியாமையும் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தலைவர்களாக உபயோகப் படுத்தி வந்தார். அவர்கள் இஸ்ரவேல் மக்களை உற்சாகப்படுத்தி, கர்த்தர் அவர்களை நிச்சயமாக இரட்சிப்பார் என்ற நம்பிக்கையூட்டினார்கள்.
மோசே பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்த 40 வருடங்கள் மட்டுமல்ல, அவன் மீதியான் வனாந்தரத்தில் வாழ்ந்த 40 வருடங்களும் சேர்த்து 80 வருடங்கள் வரை , கர்த்தர் ஆரோனை மீதியான் வனாந்தரத்தில் மோசேயை சந்திக்க சொன்ன நாள் வரைக்கும் அவர்கள் நம்பிக்கை இழக்காமல், இஸ்ரவேலின் தலைவர்களாய் வாழ்ந்தனர்.
தேவனாகிய கர்த்தர் மோசேயின் மூலமாய் இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, செங்கடலை இரண்டாய் பிளந்து, இஸ்ரவேலை வழிநடத்தி, எகிப்தியரை வீழ்த்திய போது, வேதத்தில், மிரியாம் தம்புருவை தன கையில் ஏந்தி, சகல ஸ்திரிகளையும் தம்புருவோடும், நடனத்தோடும் துதி பாடல் ஆராதனையில் நடத்தினாள் என்று பார்க்கிறோம்.
அதுமட்டுமல்ல யாத்தி: 15: 20 நாம் இன்று வாசிக்கிற வேத பகுதி, மிரியாமை தீர்க்கதரிசி என்று கூறுகிறது. வேதத்தில் முதல் முதலாக ‘தீர்க்கதரிசி’ என்று மிரியாமுக்கு தான் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆபிரகாமுக்கு அல்ல, யோசேப்புக்கு அல்ல, மோசேக்கு கூட அல்ல, ஆனால் தேவ செய்தியை மக்களுக்கு அறிவித்த ஒரு பெண்ணாகிய மிரியாமே முதன் முதலில் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்டாள். அடிமைத்தனத்திலிருந்த இந்த இஸ்ரவேல் ஜனத்துக்கு மோசே தலைவனாக செயல் பட்டான், ஆரோன் அவர்களின் ஆசாரியனாகவும், மிரியாம் தீர்க்கதரிசியாகவும் செயல் பட்டனர். சிறு வயதிலேயே பார்வோன் குமாரத்தியுடன் தெளிவாக செய்தியை அறிவித்தவள், நிச்சயமாக தேவ செய்தியை தெளிவாக மக்களுக்கு அறிவிக்கும் வரம் பெற்றிருந்திருப்பாள்.
செங்கடல் கரையில் இந்தப் பெண்கள் தேவனை துதித்து ஆடி , பாடி, மெய் சிலிர்க்க வைத்த ஆராதனையில் கலந்து கொண்ட பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் வேதத்தின் மூலமாய் நம் மனக்கண்களால் அதைப் பார்க்கும் கிருபையை தேவன் நமக்கு அருளியிருக்கிறார். செங்கடலைப் பிளந்து, நம்மையும் நம் பிள்ளைகளையும் வழிநடத்தி, எகிப்தியரை முறியடித்ததால், கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று மிரியாம் பாடியது நம் காதுகளில் தொனிக்கிறது!
ஒருவேளை உன்னுடைய வாழ்க்கையில் ஒரு பக்கம் அலைவீசும் கடலும், மறுபக்கம் முறியடிக்க வரும் எதிரிகளும் நெருக்கிக் கொண்டிருக்கலாம். துதியா??? நான் எப்படி துதிக்க முடியும்? என்னைப் போல கஷ்டங்கள் இருந்தால் என் நிலைமை புரியும் என்று நீங்கள் எண்ணலாம்.
ஆனால் உன் வாயிலிருந்து துதி புறப்படும்போதே தேவன் தன் வல்லமையை புறப்படப் பண்ணுவார் என்று அறிவாயா? செங்கடலைப் பிளந்து உன்னை வழி நடத்துவார். மிரியாமைப் போல தேவனைத் துதித்து பாடு! கர்த்தர் வல்லமையான காரியங்களை செய்வார்!
உன் வாழ்க்கை இன்று துதியால் நிரம்பியிருக்கிறதா? என்று சிந்தித்து பார்!
ஏசா:12: 5 கர்த்தரை கீர்த்தனம் பண்ணுங்கள்; அவர் மகத்துவமான கிரியைகளை செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்;
ஜெபம்: நீர் செய்த அதிசயங்களை எண்ணி உம்மை துதிக்க, ஆராதிக்க எனக்கு உதவி தாரும். என்னுடைய வாழ்க்கை எல்லா சூழ்நிலைகளிலும் துதி ஸ்தோத்திரங்களினால் நிறைந்திருக்க உதவி தாரும்! ஆமென்!
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.