யோவான்:13: 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்.
அன்பின் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள்!
கடந்த 2009 லிருந்து, 2019 வரை 42 நாடுகளிலிருந்து உங்களில் அநேகர் ஒவ்வொரு நாளும் இந்த தோட்டத்துக்கு வருகை தருவதைப் பார்த்து கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை மலர்களாக செலுத்தினேன். இது உங்கள் ஒவ்வொருவரிலும் உள்ள வேதத்தைக் குறித்த தாகத்தைத் தான் எனக்கு வெளிப்படுத்தியது.
நான் இந்த தின தியானத்தை மொத்தமாக எழுதி வைத்து பதிவிடுவது இல்லை. உங்களைப் போலவே நானும் என்னுடைய ஆத்தும நன்மைக்காக ஒவ்வொருநாளும் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்து கற்றுக் கொள்பவைகளை பதிவிடுவேன். இதை வாசிக்கும் ஒவ்வொரு அன்பின் சகோதர சகோதரிக்காகவும் ஜெபித்த பின்னரே பதிவிடுவதும் என்னுடைய வழக்கம். உங்களில் அநேகர் என்னைப் பாராட்டி எழுதுகிறீர்கள்! என் மேல் நம்பிக்கை வைத்து ஜெபக் குறிப்புகளும் அனுப்புகிறீர்கள்! உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன். தயவு செய்து http://www.rajavinmalargal.com என்ற link ஐ உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் அனுப்பி வையுங்கள்! உங்கள் கருத்துகளைத் தவறாமல் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்! கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
நாம் எபிரேயக் குழந்தைகளை சிசுகொலையினின்று காத்த சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளை சந்தித்தோம்! பார்வோன் குமாரத்தியைப் பற்றியும், மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றியும் அறிந்து கொண்டோம். சில நாட்களாக மோசேயின் சகோதரி மிரியாமை சந்தித்து, தேவனால் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட, இஸ்ரவேல் மக்களுக்கு துதி ஆராதனை நடத்திய பெண்ணைப் பற்றி பல காரியங்களை கற்றுக்கொண்டோம்.
இன்று முதல் மோசேயின் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த, அவன் மனைவியாகிய சிப்போராள் என்ற பெண்ணைப் பற்றி படிக்கலாம்.
நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றி படிக்கும்போது அவள் பிள்ளைகளுக்கு கர்த்தராகிய தேவனைப் பற்றி கற்றுக் கொடுத்ததால் அவளுடைய மூன்று பிள்ளைகளும் இஸ்ரவேலின் தலைவர்களானார்கள், அவள் குடும்பம் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று பார்த்தோம். அதனால் குடும்பத்தில் எல்லாமே வெண்ணெயும், சர்க்கரையும் போல இருந்தது என்று எண்ணிவிடாதீர்கள்!
நாம் விசுவாசிகளாய் இருந்தால் நம் குடும்பத்தில் எல்லாமே சந்தோஷமாக அமையவேண்டும் என்று எண்ணுகிறோம்! கிறிஸ்தவர்களாக இருப்பதால் நம் குடும்பத்தில் உள்ள எல்லோரின் எண்ணங்களும் ஒன்று பட்டு விடுமா? எல்லோரும் எல்லா காரியத்திலும் ஒன்று பட்டு செயல்படுவார்களா? புதிய ஏற்பாட்டின் இரு பெருந்தலைவர்கள் பவுலும், பர்னபாவும், மாற்கு என்றழைக்கப்பட்ட யோவானை தங்களுடன் ஊழியத்துக்கு அழைத்து செல்லும் விஷயத்தில் கருத்து வேறு படவில்லையா? அதனால் அவர்கள் பிரிந்து வேறு வேறு திசைக்கு சென்றனர் என்று வேதத்தில் வாசிக்கிறோமே!
நம் குடும்பங்களிலும் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமே!
வீட்டில் உள்ள பெரியவர்கள் மறைந்து போவதும், புதிய நபர்கள் திருமணத்தின் மூலம் குடும்பத்தில் இணைக்கப்படுவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிற சம்பவம் தான்! சில நேரங்களில் வேறே கலாச்சாரத்தில் உள்ள பெண்களோ அல்லது ஆண்களோ நம் குடும்ப உறுப்பினராகும்போது நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்! அவர்களை நாம் கிறிஸ்துவின் அன்போடு ஏற்றுக் கொள்கிறோமா?
அனுபவம் இல்லாமல் பேசாதீர்கள், வேறு கலாச்சாரத்திலிருந்து ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் என்ன குழப்படிகள் நடக்கும் தெரியுமா? என்று யாரோ என்னைப் பார்த்துக் கூறுவது போல உள்ளது.
அனுபவத்துடன் தான் பேசுகிறேன்! எங்கள் குடும்பத்தில், கிறிஸ்தவ குடும்பம், இந்து குடும்பம், தமிழ் நாட்டு கலாச்சாரம், வட நாட்டு கலாச்சாரம் , மேலை நாட்டு கலாச்சாரம் என்று எல்லாம் ஒன்றாகி உருகி ஒரு குடும்பம் என்ற பாத்திரமாகியிருக்கிறோம்!
நாம் கிறிஸ்துவைப் போல அன்பினாலும் அரவணைப்பினாலும் குடும்பத்தைக் கட்டும்போது நம் குடும்பத்தில் அமைதி காணப்படும், கலாச்சாரங்களும், ஜாதி, மத வேறுபாடுகளும் பிரிவினையைக் கொண்டு வர முடியாது.
அடுத்த வாரம் சில நாட்கள் நாம், மீதியான் தேசத்து வனாந்தரத்தில் வளர்ந்த சிப்போராள் என்ற பெண்ணுக்கும், எகிப்திய நாட்டில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் அரண்மனை சுகத்தில் வாழ்ந்த மோசேக்கும், இடையில் வளர்ந்த காதல் திருமணத்தையும், பின்னர் பெண்களாகிய நாம் கர்த்தருடைய கிருபையால் நம்முடைய குடும்ப நலனுக்காக வளர்க்க வேண்டிய குணாதிசயங்களையும் பற்றி படிக்கப் போகிறோம்.
2009 ம் வருடம் நாங்கள், கென்யா தேசத்தில் உள்ள நைரோபிக்கு சென்றிருந்தபோது ‘பிஷப் டெஸ்மண்ட் டுடு விருந்தினர் விடுதியில்’ தங்கினோம். அங்கே கண்ட “ நீ உன் குடும்பத்தை தெரிந்துகொள்ளவில்லை, உன் குடும்பத்தார் கர்த்தர் உனக்கு கொடுத்த பரிசு , நீ அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு ” என்ற அவருடைய வாசகம் உள்ளத்தில் நிலைத்தது.
நாம் குடும்ப உறவுகளைப் பற்றி படிக்கப் போகிற இந்த நாட்களில் தேவன் நமக்கு பரிசாக அளித்திருக்கிற நம் குடும்பத்துக்காக தேவனுக்கு நற்றி செலுத்துவோம்!
ஜெபம்: நல்ல ஆண்டவரே! என்னுடைய குடும்பத்துக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் குடும்பத்தில் என்றும் சந்தோஷமும் சமாதானமும் நிலைத்திருக்கட்டும். ஆமென்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்