யோசுவா: 15: 14 “அங்கேயிருந்து சேசாய், அதீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்தி விட்டு,”
நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம்.
முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.
இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.
மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.
நான்காவதாக உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் கண்டது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை!
இன்று நாம் தொடர்ந்து காலேபின் வாழ்க்கையைப் படிக்கப் போகிறோம்.
நல்லதொரு தகப்பனை பரிசாகப் பெற்ற எந்த மகளும் தன்னுடைய வாழ்க்கையில் தன் தகப்பனைத்தான் ஒரு கதாநாயகனாகப் பார்ப்பாள். காலேபுடைய வாழ்க்கைதயைப் பற்றி படித்த பின்னர், காலேபுடைய மகள் அக்சாள் அவனை எப்படிப்பட்ட நாயகனாகப் பார்த்திருப்பாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
காலேப் என்னும் தகப்பனிடம் நம் பரம தகப்பனிடமிருக்கிற அநேகக் குணநலன்கள் இருப்பதாக பார்க்கிறோம். அப்படியானானால் அவன் குடும்பம் எவ்வளவாக ஆசீர்வதிக்கப் பட்டிருந்திருக்கும் அல்லவா? இந்த குணநலன்கள் காலேபுக்கும் அவன் மகளுக்கும் இடையே ஒரு அருமையான உறவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
இதே குண நலன்களைக் கொண்ட நம் பரம பிதாவானவர், அவர் பிள்ளைகளாகிய நம்மோடும் கூட காலேபுக்கும் அக்சாளுக்கும் இருந்த உறவைப் போன்ற உறவை ஏற்படுத்தி கொள்ள ஆவலாயிருக்கிறார்.
இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் காலேபின் வீரத்துக்கு சாட்சியைப் பார்க்கிறோம். இராட்சதரான ஏனாக்கின் குமாரர் அத்தனை பேரும் காலேபினால் முறியடிக்கப் பட்டார்கள். காலேபின் மகள் அக்சாளுக்கு எத்தனை பெருமையாக இருந்திருக்கும்!
1971 ல் இந்தியா, பாகிஸ்தானுக்கு நடுவே நடந்த யுத்தத்தின்போது என்னுடைய அப்பா இந்திய ராணுவத்தில் இருந்தார்கள். அப்பொழுது நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். யுத்தத்துக்கு பிறகு, என்னுடைய அப்பாவுக்கு சென்னையில் எங்கு சென்றாலும் மரியாதை கிடைத்தது. அம்மாவுக்கும் எனக்கும் கூட அது மிகவும் பெருமையாக இருந்தது. அந்த வருடம் என்னுடைய பள்ளியின் சுதந்தர தின விழாவில், அப்பாவின் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு கட்டுரை எழுதி, எல்லா மாணவர் முன்பும் உரையாக்கமாக வாசிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
இஸ்ரவேல் மக்களை கானானுக்குள் நுழைய விடாமல் பயமுறுத்திய ஏனாக்கின் புத்திரரை காலேப் கானானிலிருந்தே துரத்தி விட்டது, அவனது மகள் அக்சாளுக்கு மிகவும் பெருமைக்குரிய காரியமாக இருந்தது மட்டுமல்ல, அவள் தன் தகப்பனாகிய காலேப் எதிரிகளை முறியடிக்க வல்லவர் என்றும் அறிந்தாள்.
தேவனுடைய பிள்ளைகளே, காலேப் எதிரிகளான இராட்சதர்களை இஸ்ரவேலை விட்டே ஓட ஓட விரட்டினது போல, நம் பரம தகப்பனும் நம் எதிரிகளை ஓட ஓட விரட்ட வல்லவர்! அல்லேலுயா! உனக்கு எதிராக ஒரு பக்கமாக வருபவர்கள் ஏழு பக்கமாக முறிந்தோடிப் போவார்கள் என்பது அவர் உனக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்! உனக்கு எதிராக அனுப்பப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்ற வாக்கையும் மறந்து போகாதே!
நம் எதிரிகளை முறியடிக்க நம் தேவன் வல்லவர் என்பதை உணர்ந்து, அவர் மார்பில் சார்ந்து இளைப்பாறு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்