நியா: 4:14 “அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; “
அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது ! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்!
பாராக்! எழுந்திரு! எழுந்திரு! என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன! எழுந்திரு! கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள்.
இதை வாசிக்கும் போது காலைதோறும் ‘ எழும்பு ! எழும்பு ! என்று உரத்த சத்தமாய் எழுப்பிய என் அம்மாவின் நினைவுதான் வந்தது. அதிகாலையில் தூங்குவது எனக்கு மிகவும் பிரியம். அம்மா வந்து எழுப்பும்வரை தான் தூக்கம் நீடிக்க முடியும். காலையில் எவ்வளவு வேலை இருக்கிறது, எழும்பு என்று எப்படியாவது எழும்ப வைத்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகருவார்கள்.
அப்படித்தான் தெபோராள் பாராக்கை எழுப்பியிருப்பாள். பரலோக தேவனின் தெய்வீக சித்தத்தை நிறைவேற்ற பாராக்கை அனுப்ப வேண்டிய அவசரம்!
எழுந்திரு என்ற வார்த்தைக்கு தாழ்விலிருந்து உயர எழும்பு என்ற அர்த்தமும் உண்டு. பூமியின் தாழ்விடங்களிலிருந்து உலகப்பிரகாரமான பிரச்சனைகளையே நோக்கிக்கொண்டிராமல், உயர மான உன்னத தேவனை நோக்கு என்று தெபோராள் இஸ்ரவேல் மக்களையும், பாராக்கையும், அழைக்கிறாள்!
பூமியின் தாழ்விலிருந்து உயர பரலோகத்தை நோக்கு! என்று கர்த்தர் இன்று உன்னையும் அழைக்கிறார்.
எழும்பு என்பதோடு தெபோராள் நிறுத்திக்கொள்ளவில்லை! கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்று பரலோக தேவனிடத்திலிருந்து ஒரு விசேஷமான செய்தியையும் கொடுத்தாள்.
கர்த்தர் உன் எதிரியை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே! ஒப்புக்கொடுக்கும் என்ற வார்த்தையைப் பாருங்கள்! எபிரேய மொழியில் அந்த வார்தைக்கு, விடுதலையைக் கொடுக்கும் என்ற அர்த்தமும் உண்டு! இன்று உனக்கு விடுதலையக் கொடுப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்!
உன் வாழ்வின் சிசெரா என்னும் எதிரி நோயாக இருப்பின் கர்த்தர் இன்று உனக்கு விடுதலையக் கொடுப்பேன் என்கிறார். உன் வாழ்வின் எதிரி திருமண பந்தத்தில் உள்ள பிரச்சனையாயிருப்பின் கர்த்தர் இன்றே உன் எதிரியிடமிருந்து உனக்கு விடுதலையைக் கொடுப்பேன் என்கிறார்.
பலவிதமான கஷ்டங்கள் என்னும் எதிரி நம்மை சூழும்போது , சிசெராவிடமிருந்து இஸ்ரவேலை விடுவித்த தேவன் இன்றும் வல்லவரா?என்ற எண்ணம் தான் எழுகிறது. ஆனால் நான் இன்று உங்களுக்கு சாட்சியாக எழுதுகிறேன், உங்கள் எதிரி யாராக இருப்பினும் சரி, அது நம்மை அச்சுறுத்தும் கொரொனா கிருமியோ, தீராத நோயோ அல்லது திருமண உறவோ அல்லது கடன் தொல்லையோ, அல்லது மாமியார் நாத்தனார் பிரச்சனைகளோ , அபாண்டமாய் சுமத்தப்பட்ட பழியோ எதுவானாலும் சரி, என்னுடைய தேவனாகிய கர்த்தரால் உனக்கு விடுதலையைக் கொடுக்க முடியும்.
இந்த வார்த்தைகளை திட்டமாக எழுதும் தகுதியை நான் பெற, கர்த்தர் என்னை கடுமையான அனுபவத்துக்குள் 2007 ம் ஆண்டு கொண்டு சென்றார். மலை போல எனக்கு எதிராக திரண்டு வந்த எதிரிகளை முறியடித்து என்னை விடுவித்தார்! இது என் சாட்சி! தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து இதை உன்னுடைய சாட்சியாக்கு.
“கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதியார்” என்று 11 பேதுரு 3:9 கூறுகிறது. தெபோராளுக்கு சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்று கர்த்தர் வாக்கு கொடுத்திருப்பாராயின், அந்த வாக்குத்தத்தம் உனக்கும் சொந்தம் ஏனெனில் அவர் வாக்கு மாறாதவர்! இது நம் பரம தகப்பனின் வாக்குத்தத்தம்! இன்று உனக்கு கர்த்தர் கொடுக்கும் விசேஷமான செய்தி அது!
இது உன்னுடைய நாள்! இயேசு கிறிஸ்து உன்னை விடுவிக்க வல்லவர்! உன் எதிரியை இன்று உன்னிடம் ஒப்புக்கொடுப்பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்