நியா: 8: 22 ” அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.”
என்னுடைய கல்லூரி நாட்களில், எனக்கு சரித்திர கதைப்புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் விசேஷமாக நம்மை ஆண்ட மன்னர்களின் கதைகள் மேல் தான் பிரியம். போரில் வெற்றி பெற்ற வீரர்கள் பிடிக்கும். கைகளில் செங்கோல் ஏந்திய மன்னர்கள் பிடிக்கும்.
நான் மட்டுமல்ல! நம்மில் அநேகர் இவ்விதமாக,வெற்றிவாகை சூடி, வல்லமையோடு ஆளத் திறமையுள்ளவர்களை வியப்போடு பார்க்கிறோம். சிலர் , இந்த மண்ணை ஆளத் திறமை உள்ளவர்களை வியப்போடு பார்ப்பது மட்டுமல்லாமல், கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுவதையும் பார்க்கிறோம்.
சிலர் அதையும் விட ஒரு படி அதிகமாய், அதிகாரமும், பதவியும் உள்ள தலைவர்களைப் பற்றி சிறிதே தெரிந்திருந்தாலும், அவர்களால் நமக்கு காரியம் ஆக வேண்டும் என்று அவர்கள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், பின்னாலேயே அலைவதையும் பார்க்கிறோம். தங்களை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தை இந்த தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஆட்டுக்குட்டி போல வாலாட்டிக் கொண்டு அலைகிறார்கள்!
நியாதிபதிகள் புத்தகத்தில், கிதியோனையும், அவன் மீதியானியரோடு செய்த யுத்தத்தையும் நாம் படிக்கும் போது, இப்படிப்பட்டவர்களைத் தான் பார்க்கிறோம்.
நாம் கடந்த வாரம் பார்த்தவிதமாக, கிதியோனின் குடும்பம் மீதியானியருக்கு பயந்து மலைகளிலும், கெபிகளிலும் வாழ்ந்தனர்.இஸ்ரவேல் மக்கள் யாரும் அவனிடம் போய் எங்களை மீதியானியருக்கு எதிரான யுத்தத்தில் நடத்தும் என்று கேட்கவில்லை. அவனுடைய பெற்றோரும் அவனிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவனே ஒரு தொடைநடுங்கியாக கோதுமையை ஆலை மறைவில் போரடித்துக் கொண்டிருந்தான். அவனில் பராக்கிரமத்தைப் பார்த்தவர் தேவனாகிய கர்த்தரே. அவன் கர்த்தராலே அழைக்கப்பட்டான். அவனுடைய அழைப்பு கர்த்தரிடமிருந்து வந்தது! மனிதரிடமிருந்து அல்ல!
கிதியோன் கர்த்தருடைய அழைப்புக்கு கீழ்ப்படிந்து, அதை மற்ற இஸ்ரவேலரோடு பகிர்ந்து கொண்டான். இஸ்ரவேலர் கிதியோனிடம் தலைவன் என்ற பதவி கொடுக்கப்பட்டதை அறிந்தவுடன், சற்றும் சிந்தியாமல் அவனைப் பின்பற்ற முன்வந்தனர்.
ஆனால் கர்த்தர் கிதியோனிடம் எனக்கு இவ்வளவுபேர் தேவையில்லை என்றார். இந்த ஜனங்களைப் பற்றி நன்கு அறிந்தவராயிற்றே! பெரிய கூட்டமாக யுத்தத்துக்கு போய்விட்டு, எங்களுடைய பெலத்தால் தான் மீதியானியரை முறியடித்தோம் என்று சொல்லிவிடுவார்கள் அல்லவா!
கிதியோன் முன் வைத்த சவாலைத் தாக்குபிடிக்க முடியாமல் வீட்டுக்கு சென்றவர்கள் போக கிதியோனிடம் மிஞ்ஞினவர்கள் 300 பேர் மட்டுமே! இதைத்தான் கர்த்தர் விரும்பினார்!
ஞாபகசக்தியில் பெலவீனமான நாம் நம்முடைய பெலத்தால் எல்லாவற்றையும் சாதிப்பதாகத்தான் நினைத்துக் கொள்கிறோம். நாமாகவே செய்ய முயன்ற காரியங்களில் நாம் தலைக்குப்புற விழுந்து தோல்வியை வாரிக்கொண்டது நமக்கு மறந்தே போய்விடுகிறது. ஆனால் தேவனாகிய கர்த்தர் அவ்வப்போது நம்மைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வழியை உபயோகப்படுத்தி சகாயம் செய்கிறார்.
கிதியோனின் 300 பேர் கொண்ட சேனை மீதியானியரை வெல்லுமானால், நிச்சயமாக அந்த வெற்றியைக் கொடுத்தது யார் என்று உலகத்துக்கே தெரியும். ஆனால் இஸ்ரவேல் மக்களோ அதை உணர்ந்ததாய்த் தெரியவில்லை.
என்ன நடந்தது பாருங்கள்! யுத்ததுக்கு பின்னர் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரைத் துதித்து கீர்த்தனம் பாடினார்கள் என்றா வேதம் சொல்லுகிறது? இல்லை! மீதியானியரை வென்ற பின்னர் ” இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.” (நியா:8:22)
எவ்வளவு சீக்கிரம் நாம் மனிதரை பின்பற்றுகிறோம் பாருங்கள்! சில நாட்கள் முன் வரை கிதியோன் மலைகள், கெபிகளில் தலைமறைவாய் வாழ்ந்தவன்! ஒரு தொடை நடுங்கி! இன்றோ மக்கள் அவனை ஒரு ஹீரோவாக்கி விட்டனர். தங்களை ஆளும் அதிகாரத்தை கிதியோனின் கரத்தில் ஒப்புவிக்க முன் வந்தனர்.
இன்று யாருடைய கரத்தில் நம்மை ஆளுகை செய்யும் அதிகாரத்தை ஒப்புவித்திருக்கிறோம்? தேவனுடைய கரத்திலிருந்து சகலத்தையும் பெற்றுக்கொள்ளும் நாம், தேவன் நம்மை ஆளுகை செய்ய ஒப்படைத்திருக்கிறோமா? கர்த்தருடைய வழிநடத்துதலை மறந்து, மனிதருக்கு மகிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா?
தேவனாகிய கர்த்தரை ஆண்டவரே என்று அழைக்கும் நாம் அவர் நம்மை ஆளுகை செய்ய இடம் கொடுக்க வேண்டும்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்