நியாதிபதிகள்: 11:30,31 அப்பொழுது யெப்தா ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால் ,
நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது,என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச்சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
நீதிமொழிகளின் புத்தகத்தில் சாலொமோன் ராஜா மிகவும் ஞானமுள்ள ,” நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” (நீதி: 27:1) என்ற இந்த வார்த்தைகளை நமக்காகத்தான் கூறியிருப்பார் போலும் என்று , இதை வாசிக்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு. இதைவிட அதிகமான எச்சரிக்கை நமக்கு யாருமே கொடுக்கமுடியாது.
ஏனெனில் சில நேரங்களில் நாம் நிகழ் காலத்தில் சற்றும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகள் நம் எதிர் காலத்தையே அழித்து விடக்கூடுமல்லவா? நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து நாம் எப்படி பெருமை பாராட்ட முடியும்?
யெப்தா ஒர் பரஸ்திரீயின் மகனாக வாழ்ந்தவன். அவனுடைய கடந்தகாலத்தின் பாதிப்பு அவனை நிகழ் காலத்தில் எல்லாவற்றையும் கிராக்கி பண்ணுபவனாக உருவாக்கியிருந்ததது. நியாதிபதிகள் 11ம் அதிகாரம் முழுவதையும் படித்தபோது யெப்தா எல்லாவற்றிலும் கிராக்கி பண்ணுவதை கவனித்தேன். நீ இதை செய்தால் நான் இதை செய்வேன் என்ற கிராக்கி. அவன் தேவனாகிய கர்த்தரிடம் இந்த கிராக்கியைப் பண்ணியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அதற்கு அவசியமே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்னர் தான் எத்தனை அற்புதங்களைப் பார்த்தார்கள். கர்த்தருடைய வழிநடத்துதல் என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியும். அதுமட்டுமா அவர்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாததால் பலமுறை கானானியராலும், மீதியானியராலும் அடக்கி ஆளப்பட்ட சமயத்திலும், கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை அற்புதமாக விடுவித்தார். இப்பொழுது அம்மோன் புத்திரரை மாத்திரம் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கமாட்டாரா? கர்த்தர் அவர்களிடம் எதிர்பார்த்ததெல்லாம் அவர்களுடைய திடமான விசுவாசம் தானேத் தவிர இப்படிபட்ட பொருத்தனை அல்ல.
அம்மோன் புத்திரரை வெல்ல, தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பார்த்து , அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதை விட்டு விட்டு, யெப்தா கர்த்தரிடம் நீர் இதை செய்தால், நான் இதை செய்வான் என்று.கிராக்கி பண்ணினான் .
உண்மையில் சொல்லப்போனால் நான் கூட ஆண்டவரே இப்பொழுது நான் கேட்பதை எனக்கு செய்தால் எதிர்காலத்தில் நான் இதை உமக்கு செய்வேன் என்ற கிராக்கியை பலமுறை கர்த்தரிடம் செய்திருக்கிறேன், ஏன் நீங்களும் கூட செய்திருக்கலாம். இது ஒன்றும் நடக்காத புதிய காரியம் அல்ல.
இதைத்தான் யெப்தாவும் செய்தான். ஆண்டவரே நீர் இன்று அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால் ,நான் திரும்பி வரும்போது,என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது எதிரிகளுக்கு மேல் வெற்றி உண்டு என்று தேவனாகிய கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருந்த போது, அந்த வாக்கை விசுவாசிக்காமல், அவசரத்தில் செய்த இந்த பொருத்தனை தேவையில்லாத ஒன்று தான். கர்த்தர் அவனை வழிநடத்தும்படி காத்திராமல் தன்னுடைய வாழ்க்கையை அவன், தானே நடத்த விரும்பினான்.
எத்தனைமுறை நாமும் யெப்தாவைப் போல் நடந்து கொள்கிறோம்? நம்முடைய எதிர்காலத்தை நாமே திட்டமிட்டுக் கொண்டு, அதற்குத் தடையாயிருக்கும் கற்களை நாமே விலக்க முயற்சிக்கிறோம் அல்லவா?
உன்னுடைய எதிர்காலத்தைக் குறித்த திட்டத்தில், உன்னை வழிநடத்தி வரும் கர்த்தருக்கு இடம் உண்டா? அல்லது உன் திட்டத்தை தேவனிடம் கொடுத்து அதை நிறைவேற்றும்படி கிராக்கி பண்ணுகிறாயா?
இன்று இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்