நியாதிபதிகள் 11: 32 ” யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்”.
இன்றைக்கு உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கப்போகிறேன்! உண்மையாக மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! நீங்கள் வாழ்வின் உச்சியில் சுகமாய் வாழ்ந்த போது, எடுத்த ஏதோ ஒரு முடிவினால் , வெட்கப்பட்டு, தாழ்சியடைந்து, நாணிப்போனதுண்டா?
அப்படிப்பட்ட தவறு செய்திருப்பீர்களானால், இன்றைய வேதாகமப்பகுதி உங்களுக்குத்தான்!
நான் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ள பெயர்களை பார்க்கும்போது இந்தப்பெயர் இங்கு ஏன் இடம் பெற்றிருக்கிறது என்று படிக்க ஆரம்பிப்பேன். நியாதிபதிகள் 11 ல் வாசிக்கும் யெப்தாவின் கதையும், பெயரே இடம் பெறாத பெண்ணான யெப்தாவின் மகளின் கதை என்னை மிகவும் கவர்ந்தது.
நாம் முன்னமே பார்த்தவிதமாக, யெப்தா ஒர் பரஸ்திரீயின் மகனாக வாழ்ந்தவன். அவனுடைய கடந்தகாலத்தின் பாதிப்பு அவனை நிகழ் காலத்தில் எல்லாவற்றையும் கிராக்கி பண்ணுபவனாக உருவாக்கியிருந்ததது. தாழ்ந்த நிலையிலிருந்து மேலே வந்த போது தன்னூடைய வெற்றி அனைத்தும் கர்த்தரால் வந்தது என்று நினைத்து அவர் முன் பணியாமல், சுய பெலத்தை சார்ந்து, கர்த்தரின் வழிநடத்துதலை அலட்சியப்படுத்தினான்.
அம்மோன் புத்திரரை வெல்ல, தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பார்த்து , அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதை விட்டு விட்டு, யெப்தா கர்த்தரிடம் நீர் இதை செய்தால், நான் இதை செய்வேன் என்று.கிராக்கி பண்ணினான் .
நாம் மலையின் உச்சிக்கு ஏறினவுடனே, நம்முடைய கால்களை மலை உச்சியில் பதிக்க செய்தவரை மறந்து போவதில்லையா? ஆனால் ஒன்று தெரியுமா? நாம் மலை உச்சியில் நின்று கொண்டு, நம்மை இரட்சித்தவரை, வழி நடத்தியவரை மறந்து போய், நாம் சொந்தமாக முடிவு எடுக்கும் அதே நொடியில் நாம் பள்ளத்தாக்கை நோக்கி விரைகிறோம் என்பதை உணர்வதே இல்லை. யெப்தா அப்படித்தான் செய்தான்.
இன்றைய வேதாகமப் பகுதியில், கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார் என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள்! இது வாழ்நாளில் மறக்கவேக் கூடாத வாசகம்!
ஒருவேளை உங்களில் யாராவது கொடிய கடன் தொல்லையில் இருக்கலாம்! அல்லது பெரிய பிரச்சனையில் இருக்கலாம். இன்றைக்கு உங்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
கர்த்தர் அம்மோனியரை யெப்தாவின் கையில் ஒப்புக்கொடுத்து அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். ஏதோ மந்திரத்தால் வந்த வெற்றி அல்ல, யெப்தாவின் கடும் உழைப்பால் வந்த வெற்றிதான். அவன் யுத்தத்துக்கு ஆயத்தப்பட்டான், அம்மோன் புத்திரரை யுத்த களத்தில் சந்தித்தான், ஆனாலும் வெற்றி கர்த்தரால் வந்தது! கர்த்தர் உன் ஜெபத்தைக் கேட்பார், உனக்கும் வெற்றித் தருவார்! ஆனால் வெற்றிக் கிடைத்தவுடன், விடுதலைக் கிடைத்தவுடன் உன் இரட்சகரை மறந்துவிடாதே!
ஆண்டவரே! வாழ்க்கை என்னும் யுத்தத்தில்
என் தலைக்கவசமாயிரும்! என் பட்டயமாயிரும்!
என் பாதுகாப்பாயிரும்! என் பெலனாயிரும்!
என் அடைக்கலமாயிரும்! என் அரணாயிரும்!
நீர் என் பக்கம் இருந்தால் நான் ஒருபோதும் அஞ்சேன்!
என்று ஜெபிக்கிற நாம் , வெற்றி கையில் கிடைத்ததும் யெப்தாவைப் போல, வெற்றியைக் கொடுத்தவரை, இரட்சகரை மறந்து போய் விடக்கூடாது.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்