நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்;
எதற்கெடுத்தாலும் ஆள்க்காட்டி விரலை நீட்டி மற்றவர்கள்மேல் குற்றம் சாட்டுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?
ஏதேன் தோட்டத்தில் (ஆதி: 3) ஒருவர் மேல் ஒருவர் பழியை பந்து எறிந்து விளையாடுவது போலத் தூக்கி எறிந்து கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது. கர்த்தர் ஆதாமைக் கேள்வி கேட்டதும் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், ஏவாள் மீதுப் பழியைப் போடுகிறான். ஏவாள் , உடனேப் பழியை வஞ்சித்த சர்ப்பம் மீது எறிகிறாள். இந்த நூற்றாண்டில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி சண்டைகளை நாம் டிவியில் பார்ப்பது போல இருந்திருக்கும்.
நாம் படித்துக்கொண்டிருக்கிற யெப்தாவின் மகளின் சரிதையில், தகப்பனாகிய யெப்தா, தான் பேசிய பேச்சால் வந்த விளைவுக்கு தன் மகள் மீது பழியைப் போடுவதைப் பார்க்கிறோம். என்னை மிகவும் கலங்கப்பண்ணுகிறாய், என்னுடைய துக்கத்திற்கு, என்னுடைய வேதனைக்கு, பிரச்சனைகளுக்கு எல்லாம் நீதான் காரணம் என்கிறான். ஆனால் இத்தனைக்கும் காரணம் அவன் சற்றும் யோசியாமல் செய்த தேவையில்லாத ஒரு பொருத்தனைதான் என்பதை அவன் அறவே மறந்து போய்விட்டான்.
இன்று நாம் வாழும் உலகில், இந்தத் தவறுக்கு நான் தான் காரணம், இதற்குரியப் பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன் , இந்தத் தவறை திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லும் பெருந்தன்மையை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டாயிற்று.
செய்யும் தவறை ஏற்றுக்கொண்டு நம்மை நாம் ஒவ்வொருவரும் திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் நாம் வாழும் உலகம் எவ்வளவு வித்தியாசமாக மாறிவிடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
நான் யார் மீதாவது வீண்பழி என்னும் பந்தை எறிந்து காயப்படுத்தியிருக்கிறேனா என்று சிந்தித்தேன்.அதே சமயத்தில் மற்றவர்கள் என் மேல் வீண்பழி சுமத்தியபோது நான் எப்படி வேதனைப்பட்டேன் என்றும் சிந்தித்து பார்த்தேன். இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதாவ்து ஒரு வேளையில் யாரவது ஒருத்தரால் வீண் பழி சுமத்தப்படுவார்கள் என்பது உண்மை. ஆனால் இந்த உலகத்தில் யாருமே படாத அளவுக்கு கொடிய வேதனையை வீண்பழி சுமத்தப்பட்டதால் நானும் என் குடும்பமும் பட்டிருக்கிறோம்.
என்ன வேதனை! யெப்தா தான் செய்த குற்றத்துக்கு தானே பொறுப்பெடுத்துக்கொள்ளாமல், எதிரே வந்த தன் மகள்மீது ஆள்க்காட்டி விரலை நீட்டினான்.
இப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மையோடு நீ இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறாயா! நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்கிறாய்? சிந்தித்துப்பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்