நியாதிபதிகள்:13:3,4 “கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.”
ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
மனோவாவின் மனைவி ஒரு உத்தமமானப் பெண். அவளுடையத் தலைமுறையினர் நாற்பது ஆண்டுகள் பெலிஸ்தருக்கு அடிமையாயிருந்தனர். நம்பிக்கையில்லாத தருணத்தில் ஒருநாள் கர்த்தருடைய தூதனானவர் இந்தப் பெண்ணுக்குத் தோன்றி மலடியாயிருந்த அவள் ஒரு பிள்ளை பெறுவாள், அவன் ஒரு விசேஷமான பிள்ளை, கர்த்தருக்கு நசரேயனாக அர்ப்பணிக்கப்பட வேண்டியவன், அவன் இஸ்ரவேலை இரட்சிப்பான் என்கிறார்.
எண்ணாகமம் 6வது அதிகாரத்தில், தேவனாகிய கர்த்தர் மோசேயிடத்தில் இந்த நசரேய விரதத்தைப்பற்றிக் கூறுகையில், புருஷனாகிலும், ஸ்திரீயாகிலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் என்று கூறுகிறார்.
மனோவாவின் மனைவி தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனே, முதலில் தானே அந்த விரதத்தை எடுக்க வேண்டியிருந்தது. தேவதூதனானவர் அவளிடம் திராட்சரசமும், மதுபானமும் குடியாமலும், தீட்டான எதையும் புசியாதபடியும் கட்டளையிட்டார் என்று பார்க்கிறோம்.முதலில் அவளையே கர்த்தருக்கு ஒப்புவிக்க வேண்டும்.
இன்றைய இருபத்தி ஓராம் நூற்றாண்டின் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, கர்ப்பிணித் தாய் சாப்பிடும் உணவு, குடிக்கும் பானம், வாழும் வாழ்க்கை இவை அத்தனையும் அவள் குழந்தையை பாதிக்கும் என்ற உண்மைத் தெரியும். வேதம் இன்றைய நூற்றாண்டில் நாமறிந்த உண்மைகளை அன்றே பிட்டு பிட்டு வைக்கிறது பாருங்கள்.
தன்னுடைய பிள்ளை , தேவனுடைய கட்டளையின்படி நசரேயனாக வளர வேண்டுமென்று விரும்பியத் தாய், அவன் தன் கர்ப்பத்தில் வளரும்போதே அந்த விரதத்தை மேற்கொள்ளுகிறதைப் பார்க்கிறோம்.
அருமையான சகோதரியே! நூலைப்போல சேலை, தாயைப்போலப் பிள்ளை என்பார்கள். இன்று உன் பிள்ளை பாவத்தில் சிக்கிவிடுவானோ என்று பயந்து யாரைப்பார்த்தாலும் அவனுக்காக ஜெபியுங்கள் என்கிறாயே, அவன் வளரும்போது உன் வாழ்க்கை கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்ததா?
மலடு என்ற வார்த்தைக்கு பயனற்ற கனிகொடாத தரிசு நிலம் என்ற அர்த்தம் இருந்ததைப் போல, கர்ப்பந்தரித்தல் என்ற வார்த்தைக்கு கனி கொடுத்தல் என்ற அர்த்தமும் உண்டு.
மனோவாவின் மனைவி தன்னை பரிசுத்தமாக்கி தேவனுக்கு அர்ப்பணித்த பின்னரே கர்த்தர் அவள் மூலமாக இந்த உலகத்துக்காகக் கொண்டிருந்த நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது. கர்த்தர் மோசேயிடம் எண்ணாகமத்தில் கூறியவிதமாக புருஷனானாலும் சரி, ஸ்திரீயானாலும் சரி, தேவனுக்காக நாம் கனி கொடுக்க வேண்டுமானால், நம்மை அவருக்கு பரிசுத்தமாக ஒப்புவிக்கவேண்டும்.
ஆம்! மனோவாவின் மனைவி தன் குழந்தையை மட்டும் எதிர்பார்க்கவில்லை, தேவனின் நோக்கம் தன் வாழ்வில் நிறைவேறுவதை எதிர்நோக்கி தன்னை பரிசுத்தமாக அவருக்கு ஒப்புவித்தாள்.
இன்று தேவனுக்காக நாம் கனி கொடுக்கவேண்டுமானால், அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேற வேண்டுமானால் நம்மை நாம் பரிசுத்தமாக அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நம் பிள்ளைகள் தேவனுக்கு தங்களை அர்ப்பணித்து வாழ வேண்டுமென்ற ஆசை நமக்கு இருக்குமானால், முதலில் நாம் நம்மை அவருக்கு பரிசுத்தமாக அர்ப்பணிக்க வேண்டும்.
நூலைப்போலத் தானே சேலை இருக்கும்?
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்