நியாதிபதிகள்: 13:8 ” அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி; ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்”.
எங்கள் வீட்டில் என் கணவர் ஒரு கடிகாரம் போல. விடியற்காலத்தில் , நான் வைத்த அலாரம் அடித்தவுடன் பக்கத்தில் தடவிப்பார்ப்பேன். வெறும் தலையணைதான் இருக்கும். அலாரம் அடிக்குமுன்னரே எழும்பி விடுவார்கள். நாங்கள் எங்காவது புறப்பட்டால் போதும், தான் அரை மணி நேரத்துக்கு முன்னரே தயாராகி விட்டு, நாங்கள் வீட்டை விட எத்தனை நிமிடங்கள் உள்ளது என்று நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பார்கள். காத்திருப்பதும், காலம் தாமதிப்பதும் பிடிக்காத ஒன்று.
நான் கூட பலநேரங்களில் காத்திருக்கப் பொறுமையில்லாமல் எரிச்சலடைவதுண்டு. யாராவது காலம் தாமதித்தால், காத்திருக்க வைத்தால் கோபம் தான் வரும். ஆனால் என்னுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது தேவனுடைய சமுகத்தில் பொறுமையாகக் காத்திருந்த நேரங்களில் தான் அதிகமான ஆசீர்வாதத்தைப் பெற முடிந்திருக்கிறது.
இங்கு மனோவாவையும் அவன் மனைவியையும் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப்பகுதியில், மனோவாவும் அவன் மனைவியும் தங்களுக்கு பிறக்கப்போகிற பிள்ளைக்காக காத்திருந்த நேரத்தை கற்றுக்கொள்ளும் நேரமாக மாற்றியதைப் பார்க்கிறோம்.
மலடியாயிருந்த மனோவாவின் மனைவியிடம் அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளையைப்பற்றி தேவனுடைய தூதனாவர் கூறியதை, அவள் உடனே போய்த் தன்னுடைய கணவனிடம் கூறுகிறாள். அதைக் கேட்டவுடன் மனோவா கர்த்தரை நோக்கி மறுபடியும் ஒருமுறை தேவனுடைய தூதனானவரை அனுப்பி பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். பிறக்கப்போகும் குழந்தைக்காக காத்திருக்கும் நேரத்தை கற்றுக்கொள்ளும் நேரமாக மாற்றியமைக்க விரும்பினான்.
நான் எத்தனையோ முறை கண்ணீரோடு என்னுடைய தேவைக்காக ஜெபித்திருக்கிறேன் . அந்த ஜெபத்துக்கு பதில் வரும் வரை காத்திருந்த காலம் எனக்கு எவ்வளவு கடுமையாக இருந்தது என்று அறிவேன். கர்த்தருடைய நேரம் வரும்வரை, அவருடைய திட்டம் என் வாழ்க்கையில் நிறைவேறும் வரை நான் காத்திருக்க வேண்டியதிருந்தது. ஆனால் என்னுடைய பாரத்தை அவரிடம் இறக்கிவிட்ட பின்னர் அவர் எத்தனை அருமையாக ஒவ்வொரு நாளும் என்னை வேதத்தின் மூலமாக வழிநடத்தினார் என்று சாட்சியாக சொல்ல முடியும்.
விசேஷமாக நான் காற்றையும், பூகம்பத்தையும், நெருப்பையும் கடந்த நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கிய தத்துவங்களை கற்றுக்கொடுத்தார்.
இன்று கொரானா தொற்று அதிகமாவதால் நாங்கள் வாழும் சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 85 நாட்கள் ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கியபின்னர் இந்த முழு ஊரடங்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் இந்த காத்திருப்பின் காலம் நிச்சயமாக கற்றுக்கொள்ளும் காலமாக மாற்ற கர்த்தர் எங்களுக்கு கிருபை தருவார் என்று நம்புகிறோம்.
மனோவாவையும் அவனுடைய கர்த்தருக்கு பயந்த மனைவியையும் போல நீங்களும் உங்கள் தேவையை கர்த்தர் சந்திக்கும்படி காத்திருக்கலாம். ஒருவேளை பல நாட்கள், பல மாதங்கள் காத்திருந்து உங்கள் விசுவாசம் நலிவடைந்து போயிருக்கலாம். காத்திருக்கும் காலம் மிகக் கடுமையாகக் காணப்படுகிறதா?
இன்று மனோவாவைப் போல நீங்கள் காத்திருக்கும் ஒவ்வொரு தருணத்தையும், கற்றுக் கொள்ளும் தருணமாய் மாற்றியமைக்க தேவனை நோக்கி ஜெபியுங்கள். தேவனாகிய கர்த்தருடைய வார்த்தை உங்களுக்கு கற்பிக்கும் காரியங்கள் உங்கள் வேதனையை மாற்றிப்போடும், காத்திருக்கும் வேளையை ஆசீர்வாதமாக மாற்றும்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்