நியாதிபதிகள்: 16:5 அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பல்ம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்;
ஏதேன் தோட்டத்தில் ஒருநாள் சர்ப்பமானவன் ஏவாளின் வருகைக்காகக் காத்துக்கொண்டேயிருந்தான். தனிமையில், தற்காப்பு இல்லாமல் வந்த ஏவாளின் பெலவீனத்தை தாக்கினான்! சர்ப்பம் தந்திரமாக வைத்த வலையில் விழுந்தாள் ஏவாள்.
1 பேதுரு 5: 8 ல் பேதுரு நம்மிடம் சாத்தான் எவனை விழுங்கலாமோவென்று கெர்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றித்திரிகிறான் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார்.
அன்று ஏதேனில் இரண்டு தேவனுடைய பிள்ளைகள் சர்ப்பத்தின் வஞ்சகமான வலையில் விழுந்த நாள் முதல், ஒவ்வொரு வினாடியும் சாத்தான் விரிக்கும் வலையில் விழும் விசுவாசிகள் அநேகர் உண்டு.
சோரேக் பள்ளத்தாக்குக்கு செல்வதில் உள்ள ஆபத்து என்ன என்று நன்கு அறிந்தும் சிம்சோன் சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த தெலீலாளுடன் தொடர்பு வைப்பதில் ஆபத்து ஒன்றும் இல்லை என்று எண்ணியது ஆச்சரியப்படக்கூடியது. எப்படி சிம்சோன் அங்கே உள்ள ஆபத்தை உணரவில்லை என்று என்னை சிந்திக்கத் தூண்டியது அவனுடைய அசட்டு செயல்!
சிம்சோன் மிகுந்த பெலசாலி என்பதில் சந்தேகமில்லை. சிங்கத்தின் வாயைக் கிழித்தான், தன்னை பெலிஸ்தர் கயிறுகளால் கட்டியபோது நூலை அறுப்பதுபோல அறுத்து விட்டான், கழுதையின் தாடை எலும்பால் ஆயிரம்பேரைக் கொன்றான். இப்படிப்பட்ட சாதனைகளை செய்தபோது எப்படியோ அவனுக்கு இந்த பலம் தனக்கு சொந்தமானது என்ற எண்ணம் வந்து விட்டது.தன்னுடைய தோள் பலத்தின்மீது அசையாத நம்பிக்கை வந்துவிட்டதால் யார் தன்னை எதிர்த்தாலும் வென்று விடலாம் என்று நினைத்தான். தெலீலாளை சுற்றியிருந்த ஆபத்தும் அவனுக்கு சிரிப்புகந்த காரியமாகவே தோன்றியது.
சரி சிம்சோனை ஆபத்துக்குள்ளாக்கிய இந்தப் பெண் யார்? சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்தவள்! திராட்சையின் பள்ளத்தாக்கோடு கர்த்தர் சிம்சோனுக்கு எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று கூறியிருந்தார். அங்கே திராட்சையின் மது மட்டுமல்ல தெலீலாள் என்ற மங்கையும் அங்கே வாழ்ந்ததால் தான் அந்த ஊரே வேண்டாம் என்று கர்த்தர் கட்டளை கொடுத்திருப்பார்.
நம்முடைய பெலவீனங்களை நம்மை விட அதிகமாக சாத்தான் அறிந்திருக்கிறான், எங்கே அடித்தால் நாம் விழுவோம் என்று அவனுக்கு நன்கு தெரியும் என்று நான் என்னுடைய வேதாகம வகுப்புகளில் அடிக்கடி கூறுவதுண்டு! சிம்சோனின் பெலவீனமே பெண்கள் தான். சோரேக்குக்கு போனால் தெலீலாளின் வலையில் விழுவான் என்று சாத்தானுக்குத் தெரியும்.
தெலிலாள் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன என்றுப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது! தாழ்ந்து நில்,வலுக்குறைவாகு,சோர்வடைந்த தோற்றம் , வீணாகுதல், இவைதான் அதன் அர்த்தம். தெலீலாள் என்ற பெயரே ஒரு தீர்க்கதரிசனமாக தோன்றுகிறது அல்லவா? சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த தெலிலாளுடன் நட்பு கொண்டால் சிம்சோன் வலுக்குறைந்து, சோர்வடைந்து, தாழ்ந்து போய், வீணாகிப் போய் விடுவான் என்று தேவனாகிய கர்த்தர் அறிந்து தான் அவன் அங்கே செல்லக் கூடாது என்றார்.
இன்று நம் வாழ்க்கையிலும் தெலீலாக்கள் உண்டு! தெலீலாள் என்பவள் ஒரு பெண் மட்டும் அல்ல! நம்மை வாழ்வில் சோர்வடைய, தாழ்வடைய, வலுக்குறைய செய்யும், நம்முடைய வாழ்க்கையை வீணாக்கும் எந்தக் காரியமும் தெலீலாள் தான்!
நீ இன்று தெலீலாளின் வலையில் சிக்காமலிருக்க வேண்டுமானால் நம் பரலோகத் தகப்பன் சோரேக் பள்ளத்தாக்குக்கு போக வேண்டாம் என்று கட்டளையிட்டதற்குக் கீழ்ப்படி! மதுவும், மங்கையும், பெலவீனப்படுத்தி நம்முடைய வாழ்க்கையை வீணாக்கும் எதையும் நாம் அணுகக்கூடாது என்று கர்த்தர் கட்டளையிடுகிறார்.
தெலீலாள் உன் வாழ்க்கைக்குள் நுழையும்போது உன்னால் இந்த பெலவீனம் என் வாழ்க்கையை வீணாக்கிவிடும் என்று உணர முடிகிறதா?
இன்று உன்னை பெலவீனப்படுத்தி, வலுக்குறைய செய்து, உன்னை வீணாக்கிக் கொண்டிருக்கும் தெலீலாள் உன் வாழ்க்கையில் எது என்று அறிவாயா?
தெலீலாள்கள் ஜாக்கிரதை!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்