ரூத்: 1 : 6 ” கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து”
நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்ல வல்லது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். விசேஷமாக நம் குடும்பத்தில் ஏற்படும் திடீர் குழப்பங்கள், திடீர் மரணம், திடீர் வியாதி போன்றவை கடலில் திடீரென்று ஏற்படும் புயலுக்கொத்தவை.
நகோமி பெத்லெகேமை விட்டு புறப்பட்டபோது தன் தாய்வீட்டாரையும், தன் நண்பர்களையும் இழந்தாள், அவள் வாழச்சென்ற அயல்நாட்டிலே தன் கணவனையும், தன் இரு குமாரரையும் இழந்தாள்.
நகோமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் புயலை நாம் சந்திக்க நேர்ந்தால், இந்த வாழ்க்கை வாழவே அருகதையற்றது என்றுதான் நாம் முடிவு செய்திருப்போம். ஒன்று பின் ஒன்றாக அவள் தனக்குண்டான எல்லாவற்றையும் இழந்தாள். முதலில் பஞ்சத்தில் அடிபட்ட வாழ்வில், பின்னர் எஞ்சியவைகளை வெட்டுக்கிளிகள் அரித்து தின்றதுபோல எல்லாமே போய்விட்டன!
நகோமியின் வாழ்க்கையைப் போல, நம்முடைய வாழ்க்கையிலும் திடீர் பஞ்சம், புயல் இவைகளை நாம் சந்திக்கிறோம். பல சவால்கள் புயலைப் போல வந்து நம்மை நிலைகுலையச் செய்கின்றன. அந்தப் பஞ்சத்தின் மத்தியில், புயலின் மத்தியில் நகோமியின் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களும் இருந்தன என்று நான் சொன்னால் அது உங்களை ஒருவேளை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.
நகோமிக்கு தேவன் நல்ல சுகபெலத்தைக் கொடுத்திருந்தார், அந்த அயல் நாட்டில் அவள் சுவாசிக்க காற்றும், போஷிக்க உணவும் கிடைத்தன. அவளை நேசித்த இரண்டு மருமகள்களைக் கர்த்தர் கொடுத்திருந்தார். அதுமட்டுமல்ல பெத்லெகேமில் பஞ்சம் முடிந்துவிட்டது என்று அவளுக்கு செய்தியனுப்பிய நல்ல குடும்பத்தாரும், நண்பர்களும் இருந்தனர்.
சில நேரங்களில் நாம் கடினமான பாதையில் செல்லும்போது நம் வாழ்வில் கொடுக்கப்பட்டிருக்கும் சில ஆசீர்வாதங்களை நாம் அலட்சியப்படுத்திவிட்டு பஞ்சத்தை மாத்திரம் தான் பார்க்கிறோம்! ஆனால் அந்தப் பஞ்சத்தின் மத்தியில் கர்த்தர் கிரியை செய்து கொண்டிருந்தார்!
மோவாபில் அவள் எல்லாவற்றையும் இழந்து நின்ற வேளையில் கர்த்தர் அவள் கனவில் கூட காணாத வாழ்க்கையை அவளுக்குக் கொடுக்க அவளை பெத்லெகேமுக்கு அழைத்தார். நகோமி செய்யவேண்டியதெல்லாம், மோவாபை விட்டு வெளியேறி பெத்லெகேமுக்குள் பிரவேசிக்க வேண்டியதுதான். அங்கே பஞ்சமும் பசியும் இல்லை! பெரிய பந்தி அவளுக்காக காத்திருந்தது!
பஞ்சத்துக்குள் சென்று கொண்டிருக்கிறாயா? உன்னை ஒரு பெரிய விருந்துக்கு கொண்டு செல்ல ஒருவேளைக் கர்த்தர் ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறாறோ என்னவோ, யாருக்குத் தெரியும்? கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு மாத்திரம் கீழ்ப்படி! அவர் உன்னைக் கரம்பிடித்து நடத்தி உனக்காக வைத்திருக்கிற பெரிய பந்திக்குள் அழைத்து செல்வார்!
நாளைக்கு நாம் பஞ்சத்தை விட்டு பந்திக்குள் நுழைய புறப்பட்ட நகோமியின் பிரயாணத்தைத் தொடர்வோம். இன்று நகோமியைப் போல பஞ்சத்துக்குள் வாழும் உங்களுக்கு, இந்த ஆறுதலான ஜெபத்தைக் கொடுக்க ஆசைப்படுகிறேன். உன்னோடு நடக்கும் தேவனாகிய கர்த்தரின் கரத்தைப் பற்றிக்கொள்!
கர்த்தாவே நீர் என் கரம் பிடித்து நடத்தும்
நான் செல்லும் பாதையை அறியேன்!
கர்த்தாவே நீர் யாவையும் அறிந்தவரானதால்
நான் உம் மார்பில் சார்ந்திருக்கிறேன்!
கர்த்தாவே பஞ்சமும், புயலும் என் வாழ்வில் குறுக்கிடும்போது
நான் பதறாமலிருக்க உம் கிருபையைத் தாரும்!
கர்த்தாவே நீர் ஆயத்தம்பண்ணின பந்தியில் நான் அமருகையில்
வெற்றி என் கண்களை மறைத்துவிடாமல் காத்துக்கொள்ளும்!
கர்த்தாவே நான் உம்மை அறியவும், உம்மை நேசிக்கவும்
உமக்காக மட்டும் ஜீவிக்கவும் எனக்கு கிருபை தாரும்!
இன்று பஞ்சம் இருந்தால் நாளை நிச்சயம் பந்தி உண்டு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்