ரூத்: 1: 6 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
ரூத்: 1: 7 தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “
ரூத்: 1: 8 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக.
ரூத்: 1: 9 கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து;
ரூத்: 1: 10 உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள்.
ரூத்: 1: 11 அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?
ரூத்: 1: 12 என் மக்களே திரும்பிப்போங்கள்;
இன்று நாம் நகோமியின் மருமகளாகிய ஒர்பாளைப் பற்றிப் படிக்கப் போகிறோம். ஒர்பாள் மோவாபிலிருந்த தன் குடும்பத்துக்கு திரும்பி சென்று விட்டதால் அவளை நாம் எப்பொழுதுமே உலகத்தைத் தெரிந்து கொண்ட ஒரு பெண்ணாகவே பார்க்கிறோம்.
பல வருடங்களாக நான் கூட ஒர்பாள் தவறான முடிவை எடுத்ததாகவும், ரூத் சரியான முடிவை எடுத்ததாகவுமே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த முறை ராஜாவின் மலர்களுக்காக நான் ரூத் புத்தகத்தை படித்த போதுதான் ஒர்பாளை நான் தவறாக நியாயம் தீர்த்து விட்டேனோ என்ற எண்ணம் வந்தது.
ஒர்பாள் மோவாபுக்குத் திரும்பிப் போக முடிவு எடுத்ததற்குக்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளவே நான் இன்று பல வசனங்களை குறிப்பிட்டுள்ளேன்.
முதலில் நகோமி மோவாபைவிட்டு யூதேயாவுக்கு செல்ல முடிவு செய்தவுடனே அவளுடைய இரண்டு மருமக்களும் அவளோடே எழுந்து புறப்பட்டனர் என்று பார்க்கிறோம். யாரும் அவர்கள் இருவரையும் மாமியாரோடு கூட செல்ல வேண்டும் என்றக் கட்டளையைப் போடவில்லை. அதுமட்டுமல்ல அவர்கள் இருவரும் சிறு பிள்ளைகளும் அல்ல. இருவரும் தானாகவே முடிவு எடுத்து மாமியாரைப் பின் தொடர்ந்தனர்.
இரண்டாவதாக நகோமி தன் மருமக்களைப் பார்த்து உறுதியானக் குரலில் நீங்கள் திரும்பி உங்கள் தாய்வீட்டுக்கு போங்கள் என்றுக் கூறுவதைப் பார்க்கிறோம். யோசித்து முடிவு செய்யுங்கள் என்றோ, நீங்கள் திரும்பிவிட்டால் நல்லது என்று நினைக்கிறேன் என்றோ அவள் சொல்லவில்லை. திட்டமாகத் திரும்பும்படிக் கட்டளைக் கொடுக்கிறாள்.
அதுமட்டுமல்ல நகோமி அவர்களை நோக்கி கர்த்தர் உங்களை சுகமாய் வாழ்ந்திருக்க செய்வாராக என்று ஆசீர்வதித்து திரும்பிப் போக சொல்வதையும் பார்க்கிறோம். நிறைந்த மனதுடன் நாம் நம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பது போல அவர்களை ஆசீர்வதித்து வழியனுப்புகிறாள்.
நான்காவதாக இதைக்கேட்ட ஒர்பாள் சந்தோஷத்தால் மகிழ்ந்து துள்ளி எழுந்து அம்மா வீட்டுக்கு புறப்பட்டு போகத் தயாராகவில்லை. அவளும், ரூத்தும் மனவேதனைத் தாங்காமல் சத்தமாய் அழுதனர் என்று பார்க்கிறோம்.
அப்படியாக அழுது புலம்பி, ஒருவரையொருவர் முத்தமிட்ட பின்னரும் அவர்கள் நகோமியைப் பிரிய மனதில்லை. ஒர்பாளும் ரூத்தைப் போலவே ஒரே மனதாக உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்பதைப் பார்க்கிறோம்.
கடைசியாக நகோமி அவர்களைப் பார்த்து நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ? என்பதைப் பார்க்கிறோம். அவள் ஒர்பாளும், ரூத்தும் சந்தோஷமாகத் திருமணம் செய்து வாழ வேண்டுமென்று மனதார விரும்பினாள். தனக்கு இன்னும் இரண்டு பிள்ளைகள் இருந்திருந்தால் அவர்களை ஒர்பாளுக்கும், ரூத்துக்கும்தான் மணம் முடித்துக் கொடுத்திருப்பாள். அவ்வளவு அருமையான பிள்ளைகள் அவளுடைய மருமக்கள் இருவரும்.
இதை வாசிக்கும்போது ஒர்பாளைப் பற்றி என்ன தோன்றுகிறது? அவள் ஒரு புறஜாதிப் பெண், தன் மாமியாரை விட்டு விட்டு உலகத்தை நோக்கி சென்றுவிட்டாள் என்றா தோன்றுகிறது? தன் மாமியாரை இவ்வளவுதூரம் நேசித்தவள், எல்லா இழப்புகளின் மத்தியிலும் தன் கணவனின் குடும்பத்துக்கு உறுதுணையாயிருந்தவள் ஒரு நொடியில் பொல்லாதவளாய் மாறிவிடுவாளா?
ஒர்பாளும் ரூத்தைப் போலவே தன்னுடைய வாழ்க்கையை நகோமியின் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்புவித்திருந்தாள் என்றுதான் தோன்றுகிறது. நகோமிதான் ஒரு நல்லத் தாயின் ஸ்தானத்தில் இருந்து ஒர்பாளைத் திருப்பி அனுப்புகிறாள் என்பதை நாம் மறந்து போக வேண்டாம்.
நாளைய தினத்தில் இந்தத் தோட்டத்துக்கு வாருங்கள்! தேவனாகிய கர்த்தர் ஒர்பாளுக்கு மோவாபிலே என்னத் திட்டத்தை வைத்திருந்திருப்பார் என்று சற்று சிந்திக்கலாம்!
ஒர்பாளை மோவாபிலும், ரூத்தை யூதேயாவிலும் வைத்து தம்முடைய சித்தத்தை நிறைவேற்றிய தேவன் இன்று உன்னை இந்தியாவிலோ, சவுதி அரேபியாவிலோ, கனடாவிலோ, அமெரிக்காவிலோ, மலேசியாவிலோ, ரஷ்யாவிலோ வைத்திருக்கலாம்! நாம் வாழும் இடத்திலே தேவனுடைய சித்தம் நிறைவேற வேண்டியதிருக்கிறது என்பதை மறந்து விடாதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்