ரூத்: 1: 14 ” ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள்.
என்னுடைய சிறியத் தோட்டத்தில் ஒரு மல்லிகைக் கொடி படர்ந்து உள்ளது. அதில் உள்ள இரண்டு வகை மல்லிகைக் கொடிகள் தானாகவே ஒன்றோடு ஒன்று சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வருகிறது. இப்பொழுது அந்தக் கொடியைப் பிரிக்கவே முடியாது என்பது போல உள்ளது. அதில் ஒன்று ரோஜாவைப்போல பூக்கும் பெரிய மல்லிகை வகை. எப்பொழுதாவது ஒரு பெரிய பூ தனியாகக் கண்ணில் படும்போதுதான் எது எந்தக் கொடி என்று தெரியும், மற்றபடி வித்தியாசமே தெரியாது.
இன்று பூத்துக் குலுங்கும் மல்லிகைக் கொடியை பார்த்த போது ரூத் நகோமியைப் பற்றிக் கொண்டாள் என்ற இன்றைய வேதாகம வசனம் தான் ஞாபகம் வந்தது. நான்கு முறை திரும்பிப் போகும்படி நகோமி கூறியபோதும், ரூத் அவளை விடாமல் பற்றிக்கொண்டாள் என்று பார்க்கிறோம்.
பற்றிக்கொள்ளுதல் என்ற வார்த்தைக்கு பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்து இருத்தல் என்று அர்த்தமாகும்.
முதன் முதலில் நகோமியின் மருமகளாக ஆரம்பித்த அவர்கள் உறவு நாளடைவில் பிரிக்க முடியாத உறவாக மாறியது. நகோமி ரூத்தை பார்த்து சொன்னாள், ‘ மகளே உனக்கு கொடுக்க என்னிடம் வேறு குமாரர் இல்லை என்று, ரூத்தோ அவளைப்பார்த்து ,’ நீங்களே என் தாய், தகப்பன், குடும்பம், என் எதிர்காலம் எல்லாம்’ என்று கூறினாள். இவ்வாறு அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்ட பந்தம் என்ற உறவு, வெளிப்படையாக பார்ப்பவர்கள் கூட ஆச்சரியப்படும் படியாக அவள் , நகோமியைப் பற்றிக்கொள்ளச் செய்தது.
நாம் எந்த உறவைப்பற்றிக் கொள்ளுகிறோமோ அது நம் வாழ்வை மாற்ற வல்லது. நாம் உலகத்தையும் அதின் இன்பங்களையும் பற்றிக்கொள்வோமானால் நாமே நினைத்தாலும் அதைவிட்டு நம்மைவிட்டு அந்த உறவைப் பிரிக்க முடியாதபடி நாம் அதை சார்ந்து விடுவோம்.
நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொள்ளும்போது நம்முடைய வாழ்வு, இரட்சிப்பு, சந்தோஷம் என்ற மாற்றம் பெறுகிறது. நம் வாழ்வில் வரும் இரட்சிப்பு , சந்தோஷம் இவை, நாம் பரிசுத்தமாய் காணப்படுவதால் வருவதல்ல, நாம் பரிசுத்தம் என்ற ஆடை அணிவதால் வருவதல்ல, பரிசுத்தர் போல நடந்து கொள்வதால் வருவதல்ல! நாம் ஒவ்வொருநாளும் சார்ந்து வாழும் கர்த்தரால் மட்டுமே இவை வரக்கூடும்.
இன்று நீ யாரைப் பற்றிக் கொண்டிருக்கிறாய்? நீ யாரைப் பற்றிக்கொண்டிருக்கிறாயோ அது உன் உள்ளான வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது?
நாங்கள் உம்முடைய முகத்தைக் காணும் நாள் மட்டும், எங்களுடைய வெளியான வாழ்க்கையில் மட்டும் அல்ல, உள்ளான வாழ்க்கையிலும் உம்மையே பற்றிக்கொள்ள பெலன் தாரும் என்று நாம் ஒவ்வொருநாளும் ஜெபிக்க வேண்டும்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்