ரூத்: 1: 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்;
நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்து விட்டோம். இங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை.
ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் ஸ்பிரிங் சீசனில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும் வண்ணமயமான இலைகளுடன் கண்களைக் குளிரச் செய்தது. அதேவிதமாக ஒரு முறை குளிர் காலத்துக்கு முன் வரும் இலையுதிர் காலத்திலும் இருந்தேன். வண்ணமயமான இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு அதே மரங்கள் மொட்டையாக குச்சி குச்சியாக நின்றன. இவ்வளவு நாட்களும் நிறைவாகக் காணப்பட்டவை, இப்பொழுது வெறுமையாகக் காணப்பட்டன!
மரணத்தால் வரும் இழப்புகள், துக்கம், தனிமை போன்றவை, நாம் எதிர்பார்க்காத வேளையில், நம் உள்ளத்தில் கசப்பு என்னும் விதையை விதைத்து விடுகின்றன.
நகோமியும், ரூத்தும் பெத்லெகேம் நகரின் வாசலுக்கு வந்தவுடனே, உறவினர், நண்பர்கள் அனைவரும் வந்து அவர்களை வரவேற்க சூழ்ந்து கொண்டனர். தன்னை வரவேற்க வந்தவர்களிடம் நகோமி, நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன், கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார் என்று வறட்சியுடன் கூறுகிறாள். நம்மில் அநேகரைப் போல , தான் வெறுமையாய்த் திரும்பியதற்கு காரணம் கர்த்தர் தான் என்று அவள் பழியைக் கர்த்தர்மேல் போடுவதையும் பார்க்கிறோம்.
கர்த்தர் எலிமெலேக்கின் குடும்பத்தை மோவாபுக்கு செல்லும்படி ஒருநாளும் வழிநடத்தவே இல்லை. அவர்கள் சுயமாக எடுத்த முடிவே அது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. அதேமாதிரி, அவளுடைய கணவனின் மரணத்துக்கும், குமாரரின் மரணத்துக்கும் கர்த்தர் தான் காரணம் என்று ரூத்தின் புத்தகம் எங்குமே கூறவில்லை. அவளுடைய குமாரர் இருவரின் பெயர்களைக் கொண்டு, அவர்கள் நோயாளிகளாக, பெலவீனமுள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்றுதான் வேதாகம வல்லுநர்கள் கணிக்கிறார்கள். அப்படியிருக்கையில் இங்கே நகோமி தன்னுடைய கசப்பை கர்த்தர் மேல் காட்டுகிறாள்.
நாமும் கூட நம்முடைய வாழ்வில் இலையுதிர் காலத்தை கடந்து செல்லும்போது, தனிமை, வியாகுலம் நம்மை அணுகும்போது, செல்வ செழிப்போடு வாழ்ந்த நாட்கள் கடந்து போய் கடன் தொல்லைகள் நம்மை நெருக்கும்போது, கசப்பு என்ற நச்சு, சொட்டு சொட்டாக நம்முடைய வாழ்வில் இறங்குவதால் நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை அந்த நச்சு அழிக்க ஆரம்பிக்கிறது.
கசப்பு என்ற நச்சு நகோமியின் விசுவாசத்தை அரித்ததால், அவள் கர்த்தர் மேல் வைத்த விசுவாசம் குறைந்தவளாய் , நிறைவாய் சென்ற தான் வெறுமையாய்த் திரும்பியதாகக் குறை கூறினாலும், கர்த்தர் அவள் எதிர்பார்ப்புக்கும் மேலாக நிறைவானதை அவளுக்காக ஆயத்தம் பண்ணியிருந்தார்.
நகோமியைப் போல வெறுமையாக காணப்படுகிறாயா? தனிமை, வறுமை, வலி, வியாதி, வியாகுலம், கண்ணீர் இவையே வாழ்க்கையாகி விட்டதா? சோர்ந்து போகாதே! உன்னுடைய வெறுமையான வாழ்க்கையை கர்த்தர் நிரப்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
இன்று இலையுதிர் காலமாயிருக்கலாம்! ஆனால் நாளை உன் வாழ்க்கை மலரும்! இந்த நம்பிக்கையை கசப்பு என்ற நச்சு அழித்துவிட அனுமதிக்காதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்