ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ கட்டுரையைப் படித்த போது ஆச்சரியப்படக்கூடிய ஒரு உண்மையை அறிந்தேன். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில், இருதயத் துடிப்பானது நான்கே வாரங்களில் , அந்தக் குழந்தை யானது தன்னுடைய முதல் மூச்சு விடுமுன்னரே ,ஆரம்பித்து விடுகிறது என்பது தான் அது. இது கர்த்தர் ஒரு புதிய ஜீவனுக்கு அளிக்கும் துவக்கம்!
என்னுடைய அப்பாவை இருதயக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் வைத்திருந்த போது, அங்கே அவருடைய இருதயத் துடிப்பை மானிட்டர் பண்ணினர். அந்த எலக்ட்ரானிக் மானிட்டரில் வரிகள் மேலும் கீழும் ஓடிக்கொண்டிருந்தது. இருதயத்துடிப்பு நின்றுபோய் ஹார்ட் அட்டாக்குடன் வரும் நோயாளிகளுடைய மானிட்டரில் வரிகள் மேலும் கீழும் ஓடாமல் ஒரு சிறிய சமமான லைன் மாத்திரம் காணப்படும் என்று கேள்விப்பட்டேன். நம்முடைய ஒவ்வொரு இருதயத்துடிப்பும் கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் ஈவு!
நாம் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் தன் மருமகள் ரூத்துடன் பெத்லெகேமுக்குத் திரும்பியபோது நொறுங்கிப் போன இதயத்துடன், அவளை விசாரிக்க வந்த உறவினரிடம் என்னை நகோமி என்று அழைக்க வேண்டாம், மாரா என்று அழையுங்கள், கர்த்தர் என் வாழ்க்கையில் மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார் என்று கசப்புடன் பதில் கொடுத்ததைப் பார்த்தோம்.
நகோமி சுமந்து கொண்டிருக்கும் துன்பத்தை வெளிப்படுத்திய பின்னர் 1 ம் அதிகாரம் 22 ம் வசனத்தில் வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள் என்ற வரி காணப்படுகிறது.
இன்றிலிருந்து சில நாட்கள் நான் நம்முடைய தேவனாகியக் கர்த்தர் தம்மை நேசிக்கிற மக்களின் வாழ்க்கையிலிருந்த கசப்பு என்ற நச்சுத்தன்மை வாய்ந்த காடியை , தம்முடைய சுகமளிக்கும் கிருபையால் எவ்வாறு நீக்குகிறார் என்றுப் பார்க்கப்போகிறோம். தேவனாகியக் கர்த்தர் செய்யும் முதல் காரியம் நம் வாழ்க்கையில் துவக்கத்திலிருந்து ஆரம்பிப்பதுதான்!
அந்தத் துவக்கம் நம்முடைய ஜீவன் ஆரம்பிக்கும் இருதயத்தில்தான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இன்று உன்னுடைய இருதயத்தில் கசப்பு நிறைந்ததால் ஆவிக்குரிய ஹார்ட் அட்டாக் வந்த நிலையில், ஆவிக்குரிய வாழ்க்கை என்னும் மானிட்டரில் இருதயத்துடிப்பைக் காட்டும் வரிகள் மேலும் கீழும் ஓடாமல் சிறிய் சமமான வரியோடு காணப்படுகிறதா! கர்த்தர் உன்னுடைய வாழ்க்கையில் துவக்கத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறார்.
ஆண்டவரே உடைந்த நொறுங்கிய என்னுடைய இருதயத்தைப் புதுப்பியும் என்று நாம் ஜெபிக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிப்பார். எவ்வளவு நொறுங்கியிருந்தாலும் சரி, எவ்வளவு வெறுமையாக இருந்தாலும் சரி கர்த்தரால் உன் இருதயத்தைப் புதுப்பித்து புது ஜீவனை அளிக்க முடியும்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்