ரூத்: 2: 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.
கடந்த வருடம் எங்களுக்கு மழைகாலமே இல்லாததுபோல சென்னையில் மழையே இல்லை. குளிர்ந்த காற்றையும், மழைத்தூரலையும் பார்க்க உள்ளமும், சரீரமும் ஏங்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட வறண்ட நேரத்தில் ஒருநாள் திடீரென்று கருமேகங்கள் கூடி , குளிர்ந்த காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தவுடன் எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்சி காணப்பட்டது. நான் சற்று நேரம் வாசலில் நின்று ,முதல் மழை பூமியில் விழும்போது எழும்பும் வாசனையை முகர்ந்து கொண்டிருந்தபோது,பரலோகப் பிதாவானவர் நம்மேல் எவ்வளவு அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்று என் உள்ளம் நன்றியால் நிறைந்தது.
பெத்லெகேமிலே அறுவடையின் காலம்! அறுப்பறுக்கும் வயலின் சொந்தக்காரனாகிய போவாஸ், அயல் நாட்டிலிருந்து வந்த விதவைப்பெண்ணாகிய ரூத்துக்கு அரிக்கட்டுகளின் நடுவே வந்து தன்னுடைய சுதந்தரத்தில் பங்கு பெறும் அதிகாரத்தைக் கொடுத்தது மட்டுமல்ல, மீதியான கதிர்களை அல்ல, தனக்கு சொந்தமான கதிர்களையும் தாராளமாக வழங்கினான் என்று பார்த்தோம்.
இதைத்தான் நம்முடைய பரலோகத்தகப்பன் நமக்கும் செய்கிறார் என்று பார்த்தோம். சுதந்தரவாளிகளல்லாத நம்மை தம்முடைய சுதந்தரவாளிகளாக்கி, தம்முடைய பொக்கிஷத்திலிருந்து நம்மை போஷித்து வழிநடத்துகிறார்.
கர்த்தர் நம்மீது இவ்வாறு அளவில்லா கிருபை காட்டும்போது நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதே இன்று நாம் ரூத்திடமிருந்து கற்றுக் கொள்ளும் பாடம். போவாஸ் தன்னிடம் காட்டிய இரக்கத்தைப் பார்த்த ரூத், அவள் உள்ளம் நன்றியால் நிறைந்தவளாய், அவன் முன்னால்
தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.
இத்தனை கிருபைகளை வழங்கும் நம் தேவன் நம்மிடம் ஏதாவது அதிகாரமாகக் கோரிக்கை செய்கிறாரா? ஒன்றுமேயில்லை! அவர் என்னிடம் விரும்புவதெல்லாம் என் இதயம் ஒன்றுதான்! நன்றியுள்ள இதயம்! ஏதோ பெரிதான காரியம் என் வாழ்க்கையில் நடக்கும் போது அல்லேலுயா, ஸ்தோத்திரம் என்று சொல்லும் இதயம் அல்ல! ஒவ்வொரு கணமும் நன்றியோடு அவரை ஸ்தோத்தரிக்கும் இதயம்!
என்னுடைய காலை நேரத்தில் வேலைகள் அதிகமாக இருக்கும்போது, என்மேல் அளவில்லா இரக்கமும் ,கிருபையும் காட்டுகிற என் தேவனாகிய கர்த்தருக்கு நன்றி சொல்லாமல் எத்தனையோ காலைப் பொழுதுகளை தவற விட்டிருக்கிறேன். என் வாழ்வில் அறுவடை காலத்தில் மட்டும் அல்ல, செழிப்பான காலத்தில் மட்டும் அல்ல, எந்தக்காலத்திலும் நன்றியால் நிறைந்த ஆவியை என் உள்ளத்தில் தாரும் என்று அடிக்கடி ஜெபிப்பேன்.
ரூத் , போவாஸின் காலடியில் முகங்குப்புற விழுந்து வணங்கி தன்னுடைய நன்றியறிதலைத் தெரிவித்தது போல நாமும் ஒவ்வொரு நொடியும் அவர் சமுகத்தில் வந்து நம் உள்ளத்தில் ஆழத்திலிருந்து நன்றி ஆண்டவரே என்று துதி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா!
நன்றியுள்ள இதயமே நம்முடைய கிறிஸ்தவ நற்குணத்தின் அடையாளம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்