ரூத்: 2: 13 ” அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்க வேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.”
இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன், இது ஒரு மனதைத் தொடும் வசனம் இதை எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வந்தது.
இஸ்ரவேலரில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த போவாஸிடம் ரூத் வந்தபோது, அவனுடைய தகுதிக்கும், மதிப்பும், முன்னால் தான் ஒன்றுமேயில்லை என்பதை உணர்ந்து,’ என் ஆண்டவனே உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்க வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
எத்தனை முறை நாமும் கர்த்தருடைய சமுகத்தில் வந்து கர்த்தாவே எனக்கு உம்முடைய கண்களில் தயை கிடைக்கவேண்டும் என்று கதறியிருக்கிறோம். அதைத்தொடர்ந்து அவள் போவாஸை நோக்கி, தன்னுடைய வேதனையிலும், தனிமையிலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்பதைப் பார்க்கிறோம்.
நாம் சற்று நேரம் இந்த ஆறுதல் என்ற வார்த்தையைப் பார்ப்போம். ஆறுதல் என்பதற்கு பெருமூச்சு என்று எபிரேய அகராதி கூறுகிறது. ரூத்தின் வாழ்க்கையில் அடித்த பெருங்காற்றின் வேதனையால் அவள் சுவாசம் பெருமூச்சாய் மாறியபோது, போவாஸ் அவளுடைய வாழ்க்கையில் வந்து ஆறுதல் என்ற சுவாசத்தை அவளுக்குள் ஊதுகிறான்.
அதுமட்டுமல்ல, ரூத் அவனைப் பார்த்து உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்கிறாள். பட்சமாய் என்பதற்கு எபிரேய மொழியில் சோர்ந்து போன அவளைத் தாங்கும் படியான வார்த்தைகளைக் கூறுதல் என்று அர்த்தமாம்.
எத்தனை அருமையான காரியம்! போவாஸுடைய கிருபையைப் பெறத் தகுதியே இல்லாத, மோவாபியப் பெண்ணான ரூத்தை, தன்னுடைய சுதந்தரத்துக்குள் அழைத்த போவாஸ், அவளைத் தன்னுடைய வயலின் நடுவே உள்ள அரிக்கட்டுகளில் கதிர் பொறுக்கும் சுதந்தரத்தைக் கொடுத்து, அவளுக்குத் தேவையான ஆறுதலையும் கொடுத்து, அவளோடே பட்சமான வார்த்தைகளையும் பேசினான். இந்த வசனத்தில் ரூத் கூறுவது போல, இத்தனைக் கிருபைகளை அவள் மேல் பொழிய, அவள் அவன் வேலைக்காரிகளில் ஒருத்திக்குக் கூட சமானமில்லை! அவள் அவனுடைய குடும்பத்தை சேர்ந்தவளும் அல்ல, வேலைக்காரிகளை சேர்ந்தவளும் அல்ல!
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இதையல்லவா நமக்கு செய்கிறார். தகுதியற்ற நம்மேல் அவருடைய கிருபைகளைப் பொழிந்து, நாம் சோர்ந்து போகும் வேளையில் நமக்கு ஆறுதல் என்ற உறுதியான சுவாசத்தை அளித்து, தம்முடைய மெல்லிய சத்தத்தால் , வேதத்தின் மூலமாக நம்முடன் பட்சமான வார்த்தைகளைப் பேசி நம்முடன் உறுதுணையாக நிற்கிறார்.
சோர்ந்து போயிருக்கிறாயா? கர்த்தராகிய இயேசு உனக்கு ஆறுதல் அளிப்பார்! அவருடைய சமுகத்துக்கு வந்து அவருடைய கிருபையைப் பெற்றுக் கொள்! இது தகுதியற்ற நமக்குக் கர்த்தர் அளிக்கும் மகா பெரிய ஈவு! அது மட்டும் அல்ல அவரால் உன்னுடன் பேச முடியும்! அவருடைய மெல்லிய சத்தத்தை உன்னால் கேட்க முடியும்! அவருடைய ஆறுதலின் கரம் உன்னை அணைப்பதை உன்னால் உணர முடியும்!
எத்தனை மகா பெரிய தயவு! எத்தனை மகா பெரியக் கிருபை!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்