நம்முடைய குடும்பம், நம்மை சார்ந்த மக்கள் கிறிஸ்துவின் அன்பை ருசிக்க ஜெபம்!
அன்பின் சகோதர சகோதரிகளே சனிக்கிழமை தோறும் நாம் ஜெபத்தில் ஒன்று படுவோம்! போன சனிக்கிழமை நான் உபயோகிக்கும் இந்த இணைய தளம் wordpress ஒரு செய்தியை அனுப்பினார்கள். என்னவென்றால் traffic jam என்ற வார்த்தையில் என்றுமில்லாத அளவு அநேகர் அன்று செய்தியை வாசித்ததாக குறிப்பிட்டனர்!
இன்று அநேக உள்ளங்கள் ஜெபத்திற்காக ஏங்குவதை என்னால் உணர முடிந்தது! ஆதலால் நாம் தொடர்ந்து சில மாதங்கள் ஜெபிக்கலாம் என்று நினைக்கிறேன்!
உங்களுடைய ஜெபக்குறிப்புகளை, கிறிஸ்தவ அனுபவங்களை அனுப்புங்கள்! மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்!
எஸ்தர் 4:14 ல் மொர்தேகாய் எஸ்தருக்கு “ நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும், இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்கு தெரியும் என்று சொல்ல சொன்னான்” என்று பார்க்கிறோம்.
நாம் இன்று ஜெபிக்காமல் போவோமானாலும் தேவன் யாரையாவது உபயோகப்படுத்தி தம் சித்தத்தை நிறைவேற்றுவார். ஆனால் நாமும், நம் குடும்பத்தாரும் ஆசிர்வாதத்தை இழந்து போவோம் என்று வேதம் எச்சரிக்கிறது.
இந்த வாரம் நம்முடைய குடும்பத்துக்காக, உற்றார் உறவினருக்காக விசேஷமாய் ஜெபிப்போம். கிறிஸ்துவின் அன்பை இன்னும் அனுபவிக்காத கணவரை, மனைவியை, பிள்ளைகளை, உறவினரை தேவனுடைய சமுகத்தில் ஒப்படைத்து ஜெபிப்போம். தேவனாகிய கர்த்தர் நமக்கு வேண்டிய சகாயத்தையும், இரட்சிப்பையும் அனுப்புமாறு மன்றாடுவோம்.
தேவன் தாமே நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோய் மறைந்து போகும்படி ஜெபிப்போம். இம்மட்டும் காத்த நம்முடைய தேவனின் கரம் இன்னும் நம்மைக் காத்து அரவணைக்கும்!
ஜெபமே ஜெயம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
premac2c2gmail.com