ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.”
இந்த புதிய மாதத்தை காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! அவருடைய கரம் நம்மைத் தொடர்ந்து வழி நடத்துமாறு ஜெபிப்போம்!
வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை அழகிய வானவில் ஒன்று வானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலையைத் தொட்டதுபோல வந்தது.
முதல் முறையாக வானவில்லைப் பார்த்த என் கண்கள் மூடவே இல்லை. அம்மாவிடம் ஓடிப்போய் அது என்ன என்று கேட்டேன். அது கடவுள் மனுஷராகிய நம்மோடு செய்த உடன்படிக்கைக்கு அடையாளம் என்றார்கள். உடன்படிக்கை என்றால் எனக்கு சரியாகப் புரியாவிட்டாலும், கடவுள் பொய் சொல்லாதவர், அவர் சொன்னதெல்லாம் உண்மை , அவர் சொன்னதை செய்வார் என்பதற்கு அது அடையாளம் என்று புரிந்து கொண்டேன். இது என்னுடைய சிறுவயதிலே அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த பல காரியங்களில் ஒன்று. இது என் மனதில் அழியாமல் நிற்கும் பாடங்களில் ஒன்று.
இப்படிப்பட்ட வானவில் பாடம் போன்ற ஏதாவது ஒரு பாடம் உங்கள் உள்ளத்தில் அழியாமல் நிற்கிறதா? உலர்ந்த நிலத்தில் பாயும் நீரூற்று போல அது உலர்ந்த உள்ளத்தை மலரச் செய்கிறதா? அது உன்னை நேசித்த ஒருவர் உன்னை வளரச் செய்ய கற்றுக் கொடுத்த பாடமா? அந்தப் பாடம் உன்னை வாழ்வில் சரியான பாதைக்கு வழிநடத்தியதா? அப்படியானால் அதைக் கற்றுக் கொடுத்தவர் தான் என்னுடைய அம்மா போலவும், இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் வாசிக்கும் நகோமியைப் போலவும் நம்மை இந்தநிலைக்கு வரும்வரை வளர்த்தவர் அல்லவா?
என்னுடைய தோட்டத்தில் வேலை செய்யும் தோட்டக்காரர் செடிகளை பராமரிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் செடிகளை குழந்தைகள் என்று சுட்டிக்காட்டுவதைக் கேட்டிருக்கிறேன். அவைகளை உரம் போட்டு, கொத்தி விட்டு, எத்தனை பரிவோடு பராமரிக்க வேண்டியிருக்கிறது. செடிகளை வளர்க்கத் தேவைப்படும் இந்த பொறுமை, பராமரிப்பு, மிருதுத்தன்மை, இவற்றை நாம் நம்முடைய குடும்பத்தை வளர்ப்பதில், நம்முடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் போஷிப்பதில் காட்டுகிறோமா?
நகோமி என்ற தாய் தன்னுடைய குமாரர் இருவரும் மோவாவியப் பெண்களை மணந்த நாள் முதல், அவளுடைய மடியில் ரூத், போவாசுக்கு பெற்ற பேரக்குழந்தையை கிடத்தும் வரை தன்னுடைய குடும்பத்தினரை பொறுமையுடன் ஆவிக்குரிய வாழ்வில் பராமரித்து வந்ததால், அவள் குடும்பம் ஒரு அழகிய மலர் பூக்கும் தோட்டமாயிற்று.
நம்முடைய குடும்பத்தினரை நாம் ஆவிக்குரிய வாழ்வில் சரிவர போஷிக்கிறோமா? நாம் கற்றுக் கொடுத்த பாடம் நம் பிள்ளைகள் மனதில் தங்கியுள்ளனவா?
நம் பிள்ளைகளுக்கு கணக்கில் எண்ண சொல்லிக்கொடுக்கும் நாம் என்றுமே வாழ்வில் எண்ண வேண்டியவைகளைக் கற்றுக் கொடுக்கிறோமா?
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்