பத்து வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் இந்த ராஜாவின் மலர்கள் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது தமிழில் டைப் பண்ண மிகவும் கஷ்டப்படுவேன். அதனால் நான் எழுதியது கூட சுருக்கமாகவே இருக்கும். அதனால் முதல் வருடம் எழுதிய பாகத்தை மறுபடியும் எழுதலாம் என்று நினைத்தேன். ஆதலால் சில மாதங்கள் ஆதியாகமத்திலிருந்து சென்ற பாதையைத் திரும்பிப் பார்க்கலாம்!
தேவனால் ஆண்களுக்கு துணையாக படைக்கப்பட்டவர்கள்தான் பெண்கள்! அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் அள்ளி வழங்கும் ஆற்றலோடு உருவாக்கப்பட்டவர்கள் எவ்வள்ளவு ஜாக்கிரதையுள்ளவர்களாய் தேவன் கொடுத்திருக்கிற தாலந்துகளை ஆக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும். அந்த சக்தியை அழிவிற்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இந்த வேதாகமப் பகுதியே பாடமாக அமைகிறது.
ஒரே ஒரு நிமிடம் ஏதேன் தோட்டத்துக்குள் வாருங்களேன்!
ஏவாள் தன கையில் ‘ புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதும்’ என்று எண்ணி ஒரு விருட்சத்தின் கனியை தானும் புசித்து, அதை தன் கையில் ஏந்தி ஆதாமை நோக்கி ‘ இங்கே வாருங்களேன்! இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க! என்ன ருசி! அப்பா, மூளையின் அணுக்களைத் தட்டி எழுப்பி விடுகிறது, தேவர்களைப் போல உணர்வு கொடுகிறது. ஆதாம் தயவு செய்து இந்த பழத்தை சாப்பிடுங்க! இதற்காக வருந்த மாட்டிங்க!’ என்று கூற, ஆதாமும் மறு பேச்சில்லாமல் அந்த கனியை அவளிடத்தில் வாங்கிப் புசிக்கிறான். தேவன் இதை புசிக்க வேண்டாமென்று கட்டளையிட்டரே என்ற சிறு எண்ணம் கூட அப்போது அவனுக்கு தோன்றவில்லை.
மனைவியைப் பிரியப்படுதியதால் பாவத்தில் விழுந்தான் ஆதாம். ஒரு வேளை அவன் மனதில் ‘ இவள் இந்த கனியை சாப்பிட்டுவிட்டதால் என்ன ஆகுமோ? என் அருமை மனைவியை நான் இழக்க வேண்டியதாகிவிடுமோ? இவள் இல்லாமல் நான் தனிமையாக எப்படி வாழ்வேன்? என்ன வந்தாலும் சரி, நானும் சாப்பிடுகிறேன்’ என்று எண்ணியிருக்கலாம்.
ஆதாமைப்போன்ற, பலவீனமான, தேவனுக்கு கீழ்ப்படியாத, முதுகெலும்பில்லாத ஆண்கள் பலர், அழகிய பெண்களின் தூண்டுதலுக்கு ஆளாகி, கண்மூடித்தனமாய் பாவத்தில் விழுகிறார்கள். கிறிஸ்துவுக்காக எதையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை!
பெண்களோ பெண்மை என்ற தூண்டுகோலைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானதை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்!
சகோதரிகளே சற்று கவனியுங்கள்! சிந்தியுங்கள்!
ஏவாளின் பெண்மை, ஆதாமை பாவத்துக்குள்ளாக்கியது!
தெலிலாளின் பெண்மை சிம்சோனை வீழ்த்தியது!
ஆனால் எஸ்தர் ராணியின் பெண்மையோ தேவனுடைய மக்களை அழிவிலிருந்து காத்தது.
சிந்தித்து பாருங்கள்! ஒவ்வொரு நொடியும் தேவனுடைய மகிமைக்காக வாழ முயற்சி செய்வோம்!
ஆண்டவரே! உமக்கு பிரியமில்லாத எண்ணங்கள், செயல்கள், எல்லாவற்றையும் என்னை விட்டு அகற்றும். உம்முடைய பரிசுத்த சித்தத்திற்கு கீழ்படிந்து வாழ எனக்கு உதவி செய்யும் என்று ஜெபித்து அர்ப்பணியுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்