ஆதி: 5:5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான்.
ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளைப் பார்த்தோம். ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதை அறிந்தோம்! அவர்கள் இருவரும் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர்!
அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட கால வாழ்க்கையில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியாமையால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பார்கள்! ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பார்கள் அல்லவா?
அதுமட்டுமல்ல! கர்த்தரோடு முகமுகமாய்ப் பேசி நட்பு கொண்டிருந்த நாட்களை நினைத்து ஏங்கியுமிருப்பார்கள்! எத்தனை ஆசீர்வாதமான நாட்கள் அவை! சர்வத்தையும் படைத்த தேவாதி தேவன் அவர்களோடு வந்து ஏதேன் தோட்டத்தில் கொண்ட நட்பு! தேவனை முகமுகமாய் தரிசித்த நாட்கள்! அந்த தெய்வீக பிரசன்னம்! அந்த சிலாக்கியம் கடந்து போய் விட்டதே என்றக் குமுறல்! மறுபடியும் தேவனின் முகத்தையும் அவர் பிரசன்னத்தையும் காண மாட்டோமா என்ற ஏக்கம்! ஐயோ! ஒரே ஒரு கண சோதனை அவர்களை எங்கேயோ தள்ளிவிட்டது! ஆண்டவரே என்னைக் கைவிட்டுவிட்டு விட வேண்டாம் என்று எத்தனை முறை கதறியிருப்பார்கள்!
அவர்களுடைய நீண்ட ஆயுசு நாட்கள் தேவ பிரசன்னம் இல்லாத வேதனையின் நாட்களாகின!
ஆனால் நாம் தேவன் அவர்களைக் கைவிடவில்லை. மனிதனுக்கு பாவத்திலிருந்து விமோசனமே இல்லை என்று சபிக்கவேவில்லை. தன்னுடைய சாயலாய் உருவாக்கப்பட்ட அவர்களைக் கர்த்தர் நேசித்தார்! அவர்களை பாவத்திலிருந்து விடுவிக்க ஒரு இரட்சகர் வருவார் என்ற நம்பிக்கையின் விதையை அவர்கள் மனதில் விதைத்தார்.
ஏறக்குறைய ஆயிரம் வருட ஆயிசு நாட்களில் எத்தனை முறை அவர்கள் ஏதேன் தோட்டம் அருகே சென்றிருப்பார்கள்? காவல் புரியும் கேருபின்களையும், சுடரொளி பட்டயத்தையும் கண்டு உள்ளம் வேதனையுற்றாலும் தேவன் கொடுத்த நம்பிக்கையின் ஒளி அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை கொடுத்திருக்கும் . அன்பின் தேவன் அவர்களை வெறுக்காமல் நேசித்ததினால் நாம் இன்று வரை அவர்களை நினைவுகூறும்படி செய்திருக்கிறார்.
எந்த சூழ்நிலையிலும் அவர்களைக் கைவிடாமல் நேசித்த நல்ல தேவன் இன்றும் நம்மோடு கூட இருக்கிறார். தேவனை விட்டு தூரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு விமோசனம் உண்டா என்று உன் உள்ளம் கதறுகிறதா? உன்னுடைய பாவமே உன்னைத் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து விலக்கியிருக்கலாம் ஆனால் தேவனாகிய கர்த்தர் உன்னை வெறுத்ததே இல்லை! அவரை விசுவாசி! உன் எதிர்காலம் ஒளிமயமாகும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்