ஆதி : 5: 27 மெத்துசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்..
மெத்தூசலாவைப் பெற்ற பின் தன்னுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு ஏனோக்கை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட செய்தது என்று நேற்று பார்த்தோம்!
இன்று, மெத்தூசலாவின் பிறப்பை மற்றும் அல்ல, இறப்பையும் கவனியுங்கள். (ஆதி: 5:27 ). மெத்தூசலாவின் வயது 969 வருடம், அவன் 187 ம் வயதில் லாமேக்கைப் பெற்றான், லாமேக்கு 182 வயதில் நோவாவைப் பெற்றான், நோவா பிறக்கும் போது அவனுடைய தாத்தா மெத்தூசலாவுக்கு 369 வயது.
இப்பொழுது ஆதி: 7:6 ம் வசனம் பாருங்கள்! “ஜலப்பிரளயம் பூமியில் உன்டானபோது நோவா 600 வயதான போது, தாத்தா மெத்தூசலாவுக்கு 969 வயது. அந்த வயதில் தான் அவன் மரித்தான் என்று வேதம் சொல்கிறது. அப்படியானால் மெத்தூசலா மரித்த பின்பே தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்பினார் என்று தெரிகிறது.
நோவாவின் தகப்பனாகிய லாமேக்கு ஜலப்பிரளயத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பதாகத்தான் மரிக்கிறான். ( ஆதி: 5:30)
இதிலிருந்து நாம் அறியும் சத்தியம் என்ன? நோவாவினுடைய உத்தம வாழ்க்கைக்கு அவன் தாத்தா மெத்தூசலாவும், தகப்பன் லாமேக்கும் நிச்சயமாக காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பதுதான். மெத்தூசலா, தன தகப்பனாகிய ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்ததைப் பற்றியும், அவர் மரிக்காமல் தேவனோடு எடுத்துக் கொள்ளப்பட்டதைப் பற்றியும் ஒவ்வொரு நாழும் நினைவு கூர்ந்து, தன் பேரன் நோவாவிற்கு கூறியிருப்பான்!
ஆதி: 6:9 ல் வேதம் கூறுகிறது, “நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் “ என்று. நாம் கிறிஸ்த்துவுக்குள் ஜீவிக்கும்போது நம் பிள்ளைகள் அதைப் பின்பற்றி அவர்கள் வாழ்க்கையிலும் உத்தமமாய் ஜீவிப்பார்கள் என்பது நிச்சயமல்லவா? நோவா நீதிமானாய், உத்தமனாய் தேவனோடு உறவாடியதற்கு அவனுடைய் தகப்பனாகிய லாமேக்கும், அவனுடைய தாத்தாவாகிய மெத்துசலாவும் முக்கிய காரணமாயிருந்திருப்பார்கள்.
நோவா ஒரு சாதாரண மனிதன், நம்மைப் போன்றவன் தான் ஆனாலும் அவனுடைய தலைமுறையில் அவன் தலை சிறந்தவனாக இருந்தான்! பாவிகளின் மத்தியில் வாழ்ந்த நீதிமான்! பிலிப்பியர் 2:15 ல் பவுல் கூறியபடி “கோணலும் மாறுபாடான சந்ததியின் நடுவிலே, குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாய்……” வாழ்ந்தவன்! இன்று நம்மில் எத்தனைபேர் இந்தப் போராட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்னுடைய விசுவாச போராட்டத்தில் நான் தனித்திருக்கிறேன் என்று சொல்பவர் நம்மில் பலர் உண்டு அல்லவா? நமக்கு நோவாவின் வாழ்க்கையைப் போல ஒரு உதாரணம் எங்குமே கிடையாது! தனித்திருக்கும் நாம் தேவனோடு இணைந்து இருக்க வேண்டும்! நோவா தேவனோடு சஞ்சரித்தான் தேவன் அவன் சந்ததியை ஆசீர்வதித்தார்!
உலகத்தை அழிக்க முடிவு செய்த தேவன், இந்த அருமையான சந்ததியாருக்கு மனதிரங்கினார். முதிர்ந்த வயதில் இருந்த மெத்தூசலாவும், லாமேக்கும் மரிக்கும் வரை, தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்பவே இல்லை. எத்தனை கிருபையும் மகா தயவுமுள்ள தேவன் அவர்!