ஆதி: 6:18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நீயும் உன்னோடே கூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
எந்த ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் ( தாயோ அல்லது மனைவியோ ) உறுதுணையாக நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்பது நமக்கு நன்கு தெரிந்த உண்மை. அவர்களுடைய பெயர் வெளியே வருவதேயில்லை! அப்படிப்பட்ட பெயர் எழுதப்படாத ஒரு காவியத்தலைவி தான் நோவாவின் மனைவி!
ஒருநாள் தேவன் நோவாவை நோக்கி, 300 முழ நீழமும் , 50 முழ அகலமும் , 30 முழ உயரமும் உள்ள பேழையை ( நம்முடைய அடி அளவின் படி 450 அடி நீழம், 75 அடி அகலம் , 45 அடி உயரம்) செய்யும்படி கட்டளையிட்டார். தேவன் நோவாவுக்கு விசேஷமான கட்டளையைக் கொடுத்து, அவனோடு உடன்படிக்கையை ஏற்படுத்தினாலும், அந்த உடன்படிக்கையில் நோவாவின் மனைவியும், அவன் மூன்று மகன்களும் மருமகள்மாரும் இணைக்கப்பட்டனர். நீதிமானும் உத்தமனுமாயிருந்த தன்னுடைய கணவனின் தரிசனத்தை தன்னுடையதாக்கிக் கொண்டாள் அவன் மனைவி!
யூத மத ரபீமார்கள், நோவாவின் மனைவியை ஒரு குணசாலி யான, தைரியசாலியான பெண்ணாகக் கருதினர். இவ்வளவு பெரிய பேழையை கட்டி முடிக்கும் வரை, சகலவிதமான மாம்ச ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக பேழைக்குள் சேர்க்கும் வரை, நோவாவின் மனைவியின் உதவியில்லாமல் ஒரு மனிதனால் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிக்க முடியுமா? அவள் ஒரு மிகப்பெரிய விசுவாசியாகவும், தைரியசாலியாகவும், பொறுமைசாலியாகவும் இருந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று!
மணம் திருந்தாத மக்கள், நோவாவையும், அவன் மனைவி, பிள்ளைகளையும் எவ்வளவு ஏளனம் செய்திருப்பார்கள்? எவ்வளவு நிந்தித்திருப்பார்கள்? தேவன் மேல் உறுதியான விசுவாசத்தையும், தன கணவன் மேல் நம்பிக்கையும் கொண்டவளாய், நோவாவோடு அக்கிரமம் நிறைந்த மக்கள் மத்தியில் சாட்சியாய் ஜீவித்தாள் நோவாவின் மனைவி.
தேவன் தம்முடைய வல்லமையுள்ள புயத்தினால் சகலவித மிருகங்களும், பறவைகளும், பிராணிகளும் அவர்களிடத்தில் வரும்படி செய்தார். (ஆதி: 6:20) அவைகளை போஷிப்பதும், சுத்தம் செய்வதும், பேழை தயாரிக்க கணவனுக்கு உதவுவதுமாக ஒவ்வொரு நாளும் எவ்வளவு வேலை செய்திருப்பாள் நோவாவின் மனைவி! இரவில் படுக்க செல்லும்போது சரீரம் எவ்வளவாய் வலித்திருக்கும்?
வீட்டு வேலை செய்வதாலும், கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதாலும், ஆபீசுக்கு பஸ் பிடித்து ஓடுவதாலும் எத்தனை முறை மனது வெறுத்து இதுதான் வாழ்க்கையா என்று அழுதிருக்கிறோம்?
நோவாவின் மகா பெரிய வெற்றிக்கு பின்னால் உறுதுணையாக நின்ற நோவாவின் மனைவியின் பெயரை தேவனாகிய கர்த்தர் ஏன் வேதத்தில் இடம் பெற அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை! ஆனால் அவளை தேவன் தன் உடன்படிக்கையின் பங்காளியாக்கினார், அவளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளைப் பலுகிப் பெருகி பூமியை சுதந்தரிக்க செய்தார்.
நோவாவின் மனைவியைப் போல குணசாலியாக, விசுவாசியாக, தைரியசாலியாக, பொறுமைசாலியாக ஜீவிக்க தேவன் கிருபை தரும்படி ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்