அப்போஸ்தலர்: 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.
தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததை கடந்த வா பார்த்தோம்!
பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள், தேவனோடு சஞ்சரித்தார்கள்.
நோவாவின் பேழையில் இருந்த எட்டு பெரும் ஜீவ பாதையை தெரிந்து கொண்டனர். இவர்கள் மூலமாய் மறுபடியும் உலகம் என்ற சக்கரம் சுழல ஆரம்பித்தது. இவர்கள் மூவரும் இந்த உலகில் வாழும் அத்தனை ஜாதியினருக்கும் அடி வேராவார்கள்.
நோவாவின் மூன்று குமாரரும் உலகில் இன்று வாழும் மக்களின் தகப்பன் ஆவர். அவர்களைப் பற்றி சற்று பார்ப்போம்!
நோவாவின் முதல் குமாரன் காம் என்பவன் எத்தியோப்பியர், எகிப்தியர், அரேபியர், பாலஸ்தீனியர, சூடான், லிபியா நாட்டினரின் தகப்பன்! (ஆதி: 10: 6 – 20)
நோவாவின் இரண்டாவது குமாரன், சேம் என்பவனுக்கு ஐந்து குமாரர் பிறந்தாலும் அவன் ஏபேருடைய சந்ததியாருக்கு தகப்பன் என்று விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏபேருடைய குடும்பத்தில் பிறந்தவன் தான் இஸ்ரவேலின் தகப்பனாகிய ஆபிரகாம். ( ஆதி: 10: 21 – 31)
நோவாவின் மூன்றாவது யாப்பேத் என்பவன் நம்மைப் போன்ற புற ஜாதியினரின் தகப்பன், ( ஆதி: 10: 2 – 5)
ஆகமொத்தம் யாப்பேத்திலிருந்து 14 சந்ததியாரும், காம் வழியில் 30 சந்ததியினரும், சேம் வழியில் 26 சந்ததியினரும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நோவா தன் குமாரரை வாழ்த்தும்போது யாப்பேத், சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான் என்று தீர்க்கதரிசனமாக கூறியது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. யாப்பேத்தின் பிள்ளைகளாகிய நாம், சேம்மின் வம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவின் நிழலில் அடைக்கலம் பெற்றிருக்கிறோம் அல்லவா?
வாருங்கள் நம்முடைய ஆதி திருச்சபையைப் பார்க்க!
அப்போ: 8:27 ல், எத்தியோப்பிய மந்திரி ( காமின் வம்சம்) விசுவாசியாகிறதையும்,
அப்போ: 9 ல், சவுல், ( சேமின் வம்சம்) விசுவாசியாகிறதையும்,
அப்போ: 10 ல், கொர்நேலியு ( யாப்பேத்தின் வம்சம்) விசுவாசியாகிறதையும் காண்கிறோம்.
நாம் வாழும் இந்த உலகத்தில் ஜாதி, மதம், நிறம் என்று எத்தனைப் பிரிவுகள் இருந்தாலும், நாம், கிறிஸ்துவுக்குள் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் (அப்போ:17:26) என்பதை மறக்கக்கூடாது. ஜாதி என்ற வெறி நமக்குள் இருக்கக்கூடாது. நம் வீட்டில் வேலை செய்பவர்களை, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கை தூக்கி விடும் உயர்ந்த மனப்பான்மை நமக்கு வேண்டும்.
இன்று சமுதாயத்தை விட்டுவிடுங்கள், நம்முடைய திருச்சபைக்குள் தான் எத்தனை ஜாதி பாகுபாடுகள். நம்முடைய பிள்ளைகள் திருமணத்தில் நாம் முதலில் பார்ப்பது ஜாதியல்லவா? இந்த மூடத்தனம் நம்மை விட்டு அகன்று போகவேண்டும். நாம் அனைவரும் ஒரே இரத்தத்தினாலே தோன்றினோம் என்ரு இன்றைய வேதாகப்பகுதி கூறுகிறது அல்லவா!
சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜாதி மத பேதமின்றி நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும். தேவனுடை பூர்வீக சித்தம் பூமியின் எல்லா ஜாதியினர் மத்தியிலும் நிறைவேற ஒவ்வொருநாளும் நாம் ஜெபிக்க வேண்டும்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்