ஆதி 11:30 சாராய்க்கு பிள்ளையில்லை. மலடியாயிருந்தாள்
என் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் இல்லாத பல பெண்களின் மன வேதனையை கண்கூடாக கண்டிருக்கிறேன். நான் பார்த்து வளர்ந்த ஒரு இளம் பெண், திருமணமாகி பலமுறை கருவுற்றும் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு மனதுடைந்தேன். இது உலகம் முழுவதும் நடக்கும் ஒரு சம்பவம் தான் அல்லவா?
இன்று நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், ஏபேருடைய வம்சத்தில் வந்த ஆபிராம், சாராய் என்ற பெண்ணை மணக்கிறான் என்று பார்க்கிறோம். சாராயைப் பற்றி நாம் எதுவும் அறியுமுன், “ சாராய்க்கு பிள்ளையில்லை, அவள் மலடியாயிருந்தாள்” என்று வேதம் கூறுகிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு மனிதனுடைய வம்சத்தை விருத்தி செய்ய முடியாத மனைவி இருப்பதைவிட மரிப்பதே நலம் இன்று கருதினர்.
இங்கு சாராயை உலகம் மலடி என்றும், ஆபிராமின் மனைவி என்றும் அழைத்தது. ஆனால் நம் தேவன் அவளைத் தம் திட்டத்தில் உபயோகப்படுத்தப் போகும்ஒரு தனி பாத்திரமாகப் பார்த்தார்.
தேவன் அவளுக்கு கொடுத்த பெயரான ‘சாராள்’ என்பதற்கு ராஜகுமாரி என்று அர்த்தம். நம் தேவன் எவ்வளவு நல்லவர் என்று பாருங்கள்! உலகம் மலடியாகப் பார்த்து நகைத்த ஒரு பெண்ணை , தேவனாகிய கர்த்தர், தாவீது, சாலொமோன் போன்ற ராஜாக்கள் தோன்றிய ராஜகுலத்தின் தாயாகப் பார்த்தார். தேவன் அவள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நோக்கம் வைத்திருந்தார்.
நம்மில் எத்தனை பேர் சாராளைப் போல வாழ்க்கையில் எந்த வித முக்கியத்துவமும் இல்லாமல் ஒரு சாதாரணப் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நம்மை இந்த உலகம் மலடியாகப் பார்த்து ஏளனம் செய்யலாம், அல்லது ஒரு மனிதனின் சாதாரண மனைவியாகப் பார்க்கலாம்! என் வாழ்க்கையின் மூலம் தேவன் என்ன செய்ய முடியும் என்று நீ கூட நினைக்கலாம்.
தேவன் உன்னை ராஜகுலத்தின் தாயாக்குவார்! விசுவாசியுங்கள்! தேவனுடைய உன்னத சித்தத்திற்கு தாழ்த்தி நம்மை ஒப்புவிக்கும்போது தான், நம் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவன் கொண்டிருக்கும் சித்தம் வெளிப்படும். அவர் உன் வாழ்க்கையில் ஒரு சிறந்த நோக்கம் வைத்திருக்கிறார் என்பதை உணராமல் வாழ்க்கையை வீணாக்கிவிடாதே!
உலகத்தின் பார்வையில நீங்க மிகச் சிறுமையானவராக இருக்கலாம் ஆனால் தேவனுடைய பார்வையில் நீங்கள் மிகவும் விசேஷமானவர்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்