ஆதி: 12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி : நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ
நேற்று நாம் ‘ஆபிராமின் மனைவியும், மலடியுமான’ என்று கருதப்பட்ட சாராயைப் பற்றிப் பார்த்தோம்.
சாராயின் தகப்பன் தேராகு திடிரென்று தன் குடும்பத்தாரோடு தாங்கள் வாழ்ந்த ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானான் என்கிற தேசத்துக்கு புறப்பட்டான். வேதத்தை கூர்ந்து படித்திருப்பேர்களானால், தேராகு சாராயின் தகப்பனா? அவன் ஆபிராமுக்கு தகப்பனல்லவா? என்று கேட்பீர்கள். ஆம்! அவன் ஆபிராமின் தகப்பனும் கூட! ( ஆதி:20:12) அவர்கள் இருவருக்கும் தாய் மாத்திரம் வேறு. ஆபிராம் காலத்தில் குடும்பத்துக்குள் மணம் செய்வது வழக்கம். அவர்களது சொத்து கைமாறாமல் காப்பது ஒரு நோக்கமாயிருந்திருக்கலாம். நம் நாட்டிலும் மன்னர் குடும்பங்களில் இந்த வழக்கம் இருந்ததாக சமீபத்தில் வாசித்தேன்.
தேராகுவின் குடும்பம் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டது ! எங்களுடைய வாழ்க்கையில் பலமுறை வேறு வேறு மாகாணங்களுக்கு மாறுதல் ஆகி சென்றிருக்கிறோம். வீட்டு சாமான்களை எடுத்து செல்வதும், பிள்ளைகளுக்கு பள்ளியில் அனுமதி வாங்குவதும், புது இடத்தில் தமிழ் அறியாத மக்கள் மத்தியில் வாழ்வதும் நிச்சயமாக இலகுவான வாழ்க்கை இல்லை. தேராகுவின் குடும்பம் ஆரான் மட்டும் வந்த போது அங்கே தங்கி விட்டார்கள். நீண்ட பயணம் இந்த குடும்பத்தை களைப்படைய செய்திருக்கலாம். அங்கு தேராகு மரித்துப் போனான் ( ஆதி 11:52). ஒருவேளை களைப்படைந்த இந்த குடும்பம் ஆரானிலேயே தங்கிவிட முடிவெடுத்திருப்பார்கள். அதனால்தான் கர்த்தர் அடுத்த வசனத்திலேயே ( ஆதி: 12:1) ஆபிராமை நோக்கி “ நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ” என்றார்.
மறுபடியும், இந்த குடும்பம் தாங்கள் சம்பாதித்த சம்பத்தையும், குடும்பத்தின் ஜனங்களையும் கூட்டிக் கொண்டு கானான் தேசத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
கர்த்தர் ஆபிராமுக்கு ஏன், எதற்கு என்று விளக்கவில்லை, ஆனால் அவனுக்கு ஒரு பூமியை, ஒரு தேசத்தை,ஒரு ஆசீர்வாதத்தை சொந்தமாக கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார்.
“ நான் காண்பிக்கும் தேசத்துக்கு போ ,
உன்னை பெரிய ஜாதியாக்குவேன் ,
உன்னை ஆசீர்வதிப்பேன்,
உன் பேரை பெருமைப் படுத்துவேன்,
உன்னை ஆசீர்வதிப்பவனை ஆசீர்வதிப்பேன்,
பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்று. ( ஆதி: 12: 1-3).
தேவனாகிய கர்த்தர் ஆபிராமுக்கு செய்வதாகக் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள்!
ஆபிராமும், சாராயும், கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தார்கள். அவர்களுடைய விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை சார்ந்ததாக இருந்தது! குழந்தை பாக்கியம் இல்லாத இந்த தம்பதியருக்கு கர்த்தர் கொடுத்த இந்த வாக்குதத்தம் ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனால் ஆபிராமும், சாராயும் விசுவாசத்தில் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் பூமியிலுள்ள எல்லா மக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒன்று. கர்த்தராகிய இயேசுவே , ஆபிராம் மூலமாக பூமியில் வாழும் நமக்கெல்லாம் தேவன் தந்தருளின ஆசீர்வாதம்!
ஆபிராம் 75 வயதாக இருந்தபோது அவர்கள் பிரயாணம் ஆரம்பமாயிற்று. இந்த முதிர்ந்த வயதில் ஆபிராம் கானானை கோகி செல்கிறான். மறுபடியும் நீண்ட பிரயாணம் மேற்கொள்வது இவர்களுக்கு கடினமாக தெரிந்திருக்காது, ஏனெனில் தேவனுடைய வழி நடத்துதலும், வாக்குத்தத்தமும் அவர்களுடன் துணை சென்றது!
கர்த்தருடைய வாக்குத்தத்தமும் வழிநடத்துதலும் இருக்குமாயின் எந்தக் கடின பாதையும் இலகுவாகும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்