நீதி:12:19 சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்: பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
ஆபிராமும், சாராயும் தேவனால் அழைக்கப்பட்டார்கள், வழி நடத்தப்பட்டார்கள், ஆனால் போகும் வழியில், பஞ்சம் என்ற தடை வந்தவுடன் அவர்கள் வாழ்க்கை என்னும் பயணத்தை கானானை நோக்கி தொடராமல், எகிப்தை நோக்கி தொடர்ந்தனர்.
ஆபிராம் அழைக்கப் பட்டது கானானுக்குள் பிரவேசிக்கத்தான்! தங்களுக்கு இருந்த அத்தனை சொத்து சுகங்களை விட்டு விட்டுத்தான் அந்தக் குடும்பம் புறப்பட்டனர். பஞ்சம் வந்தவுடன் யார் அவர்களை வழி நடத்துகிறார் என்று மறந்தே போய்விட்டார்கள். தங்களுக்கு வந்தத் துன்பத்தை சமாளிக்கும் வழியை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு எகிப்தை நோக்கி வண்டியை திருப்பினர்.
எகிப்தில் இன்னொரு பிரச்சனை காத்திருந்தது. அவன் திருமணம் செய்திருப்பது ஒரு மகா அழகிய பெண்! ஆதலால் அவளைத் தன் சகோதரி என்ற அரை உண்மையை முழுதாக்கி சொல்கிறான். அங்கு ஆபிராம் தன் மனைவியின் அழகால் தனக்கு ஆபத்து என்று எண்ணி அவளை தன் சகோதரி என்று சொல்லபோய், அவள் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். சாராயை ஒரு கணம் நோக்கிய பார்வோன் இவள்தான் எனக்கு வேண்டும் என்று முடிவு செய்ய, பேராபத்தில் வீழ்ந்தான் ஆபிராம்!
பாவம் அந்தப் பார்வோன்! தன்னுடைய அந்தப்புரத்தில் இன்னொரு அழகியை சேர்த்துவிட்டோம் என்று கனவு கண்டு விட்டான்!
இந்த தம்பதியினர் தேவனை மறந்தாலும், தேவன் அவர்களைக் கைவிடவில்லை. தான் ஆபிராமோடு செய்த உடன்படிக்கையினிமித்தம் கர்த்தர் பார்வோனின் குடும்பத்தை மகா வாதைகளால் வாதித்தார். கர்த்தர் ஆபிராமை பூமியிலுள்ள வம்சங்களுக்கெல்லாம் ஆசிர்வாதமாயிருக்கும்படி அழைத்திருந்தார். ஆபிராம் சென்ற இடமெல்லாம் பலிபீடம் கட்டி தேவனை மகிமைப் படுத்தினான், ஆனால் இந்த எகிப்துக்கு வந்த போது அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவுமில்லை , தேவனுக்கு பலிபீடம் கட்டவும் இல்லை, தன்னை சுற்றி இருந்த பிரச்சனைகளிலிருந்து மீள தேவனை நாடவுமில்லை. அதனால் அவன் எகிப்து மக்களுக்கு ஆசீர்வாதமாக இராமல், பார்வோன் வீட்டாருக்கு சாபமாக மாறினான்.
ஆபிராம் தேவனை நோக்கத் தவறினாலும், தேவன் அவனை நோக்கினார், இந்த தம்பதியினரை, வந்த பேராபத்திலிருந்து காப்பாற்றினார். விசுவாசம் என்னும் பள்ளியில் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டவனாய் எகிப்தை விட்டு புறப்பட்டு கானானை நோக்கி சென்றான் ஆபிராம்.
அருமையான சகோதரிகளே நாம் நம் குடும்பத்தாருக்கும், நம்மை சுற்றியுள்ள சமுதாயத்துக்கும் ஆசீர்வாதமாக இருக்கிறோமா? அல்லது ஒரு சாபமாக இருக்கிறோமா? ஒரு சின்ன வெள்ளைப்பொய் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்! ஒருவேளை இன்று நீ பஞ்சத்தாலும், வாதையாலும் பயந்து திசை மாறி ஓடினாலும் கர்த்தர் உன்னோடிருந்து வழிநடத்தவில்லை என்று நினைத்து விடாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்