ஆதி: 16:2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் …. என்றாள்.
மிகுந்த ஆஸ்தியோடு எகிப்தைவிட்டு புறப்பட்டு கானானை நோக்கி சென்றார்கள் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம்.
போகும் வழியில், எகிப்தின் சுகபோகத்தை அனுபவித்திருந்த, ஆபிராமின் சகோதரன் மகனாகிய லோத்து, எகிப்தை போல செழிப்பாயிருந்த சோதோமுக்கு அருகான சமபூமியை எடுத்துக் கொண்டான். பின்னர் லோத்து சோதோமுக்கு அருகாமையில் கூடாரம் போட்டான். அப்புறம் சோதோமிலேயே குடியேறிவிட்டான் என்று பார்க்கிறோம். எகிப்தின் சுகபோகமான வாழ்க்கையே லோத்து சோதோமை தெரிந்து கொண்டதின் காரணம்.
ஆபிராமும், சாராயும், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, எபிரோனிலிருக்கும் மம்ரே சமபூமியில் குடியிருந்தார்கள்.
ஆபிராம் ஆரானை விட்டு புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதாயிருந்தான். பத்து வருடங்கள் கழிந்து விட்டன! வாழ்க்கையில் பல முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். எண்பத்தைந்து வயது வரை ஆபிராமுக்கு பிள்ளையில்ல. ஆபிராமுக்கும், சாராய்க்கும் தேவன் ‘ உங்களை பெரிய ஜாதியாக்குவேன்’ என்று வாக்களித்திருந்தாலும், எப்பொழுது பிள்ளையை கொடுப்பேன் என்று சொல்லவில்லை.
சாராய் தன் சரீரம் குழந்தை பெரும் தன்மையை தாண்டி விட்டதை உணர்ந்தாள். தன் கணவனாகிய ஆபிராமுக்கு இன்னும் ஆண்மை குறையவில்லை. சாராயின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. அந்த நாட்களில். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாற்றுத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது வழக்கம். சாராய் , தன் வீட்டில் அடிமைப் பெண்ணாக வளர்ந்து வரும், எகிப்து தேசத்தில் பார்வோனால் பரிசாக அளிக்கப்பட்ட பெண்ணான, ஆகாரை நினைத்தாள். அவள் தீட்டிய திட்டம் என்ன? ஆகாரை தன் கணவனின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அனுப்பி, அதனால் அவள் குழந்தையுற்றால் அதை தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதுதான்.
ஆகா! என்ன ஆசை! என்ன திட்டம்!
இதை எப்படித் தன் கணவனிடம் கூறுகிறாள் பாருங்கள்! ஆதி : 16:2 ல்,“ நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்”என்று. தன்னுடைய ஆசையை நியாயப் படுத்த பழியைக் கர்த்தர் மீது சுமத்துகிறதைப் பாருங்கள்!
அருமையானவர்களே! எத்தனை முறை நம் வாழ்க்கையில் நாமே திட்டம் தீட்டி, தேவனுக்கு பிரியமில்லாத காரியத்தை செய்து விட்டு, நம்முடைய திட்டத்தை நியாயப்படுத்த தேவன் மீது பழி சுமத்துகிறோம். நாம் சோதனைகளில் விழுந்து போவதற்கு காரணம் நம் சுய இச்சையே என்று வேதம் கூறுகிறது. ஆனால் நாம் தேவனால் சோதிக்கப் படுகிறோம் என்றல்லவா கூறுகிறோம்!
சரி சரி! சாராய் சுயமாக தீட்டிய இந்த திட்டத்தை ஆபிராம் எதிர்த்தாரா? ஆதரித்தாரா?
நாளை பார்ப்போம் !
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்