ஆதி: 16:13 அப்பொழுது அவள்எ: ன்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
கர்த்தருக்கு கீழ்ப்படிந்து , அவருக்கு காத்திராமல், அவசரமாக எடுத்த முடிவால் தங்களுடைய உள்ளத்திலும், இல்லத்திலும் நிம்மதியை இழந்து தவித்தனர் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். இவர்கள் நிம்மதியிழக்கக் காரணமான ஆகாரைப் பற்றி சிறிது சிந்திப்போம் இன்று.
இந்த ஆகார் யார்?, இவள் பெயருக்கு அர்த்தம் என்ன? வேதம் அவளைப் பற்றி எதுவும் கூறவில்லை. அவள் ஒரு அடிமைப் பெண் என்றும், இஸ்மவேலின் தாய் என்றும் அறிவோம். இந்த ஆதி: 16 ம் அதிகாரம் எழுதப்படாதிருந்தால் ஆகாரைப் பற்றிய எந்த தகவலும் நமக்கு கிடைத்திருக்காது. அவள் ஆபிராமினால் ஒரு குழந்தைக்கு தாயான பின்பு, சாராயினால் கடினமாக நடத்தப்பட்டு, வீட்டை விட்டு ஓடிப் போனதோடு அவள் சரித்திரம் முடிந்திருக்கும்.
ஆபிராமும், சாராயும், பூமியிலுள்ள அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் படியாக தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள். ஆனால் அடிமைப் பெண்ணான ஆகாருக்கு ஆசீர்வாதமாக அமைய வில்லை.
அன்பானவர்களே! நாம் ஆலயங்களில் சாட்சி கொடுக்கிறோம், ஊழியம் செய்கிறோம், நம் சபையின் ஐக்கியங்களில் முதன்மையாக இருக்கிறோம், ஆனால் நம் வீட்டில் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று யோசித்து பாருங்கள்! நம் வாழ்க்கை நம் வீட்டில் வேலை செய்பர்வர்கள் முன்பு முதல் சாட்சியாக அமைய வேண்டும். பிரசங்கியார் D.L.Moody யிடம், ஒரு பெண்மணி வந்து, தன்னை ஆப்பிரிக்கா தேசத்தில் ஊழியம் செய்ய கர்த்தர் அழைப்பதாக சொன்னார். அதற்கு பிரசங்கியார் கூறினார், ‘ அம்மா நீ தூர தேசத்தில் விளக்கு ஸ்தம்பமாக இருக்க ஆசைப் படுகிறாய், முதலில் நீ வாழும் இடத்தில் ஒரு மெழுகு வர்த்தியாக பிரகாசி, பின்னர் கர்த்தர் உன்னை தூர தேசத்தில் விளக்கு ஸ்தம்பமாய் உபயோகப்படுத்துவார் என்றார்.
சாராய், ஆகாருக்கு முன் மெழுகு வர்த்தியாய் இல்லை, அதனால் ஆகார் அவளை விட்டு ஓடிப்போனாள். சாராயுடன் ஒரே வீட்டில் வாழ்வதை விட, குளிரும் பனியும் நிறைந்த இரவுகளும், வெயில் கடினமாக காயும் பகல்களும் உள்ள வனாந்திரமே நல்லது என்று கண்டாள் போதும் ஆகார்.
ஆகாரைப் போல கடினமான வனாந்திரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறாயா? பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலை, கணவனோடு முறிந்து போன உறவு, இவையால் ஐயோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என எண்ணத் தோன்றுகிறதா?
தேவன் ஆகாரைக் கண்டார். எங்கு தெரியுமா? அவள் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வனாந்திரத்தில்! ஆதி: 16:13 “ என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” என்றாள் ஆகார். உன்னைக் காண்கிற தேவனுடைய கண்கள் உன் மேல் நோக்கமாயிருக்கிறது. நம்முடைய வனாந்திரத்தில் நமக்கு பெலனும், ஆதரவும் அளிக்க அவர் நம்மைத் தொடர்ந்து வருகிறார்.
ஆபிராம், சாராய், ஆகார் என்பவர்களின் வாழ்க்கை எனக்கு 1 கொரி 13 ல் பவுல் , அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது என்று எழுதியதை நினைவூட்டியது.
இப்படிப்பட்ட அன்பையும் தயவையும் வெளிப்படுத்த கர்த்தர் அநேகத் தருணங்களைக் கொடுத்தார்.ஆபிராமும் சாராயும் பொறுமையோடு கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருந்தால் ஆகார் அவர்களுக்கு ஒரு மகளைப் போலவே இருந்திருப்பாள்.
ஆகார் கர்ப்பந்தரித்த போது சாராய் அவளிடம் அன்புடனும் பரிவுடனும் நடந்திருந்தால் ஒருவேளை அவளும் சாராயை வெறுத்திருக்க மாட்டாள்.
பொறுமையற்ற தன்மையை நாம் இந்த தம்பதியினரிடம் பார்க்கிறோம்.அவர்களுடைய இந்தப் பொறுமையற்ற செயலால் உலகமே இன்று பலவித இன்னல்களை அனுபவிக்கிறது.
கர்த்தர் அமைதலாயிருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள் என்று வாக்களித்த காரியத்தில் அவருக்கு முன்பதாக ஓடிக் கொண்டிருக்கிறாயா? அதன் விளைவுகள் கசப்பாக மாறிவிடும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்