ஆதி: 18:16 பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு சோதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
ஆபிரகாமை தேவன் அறிந்ததால் அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை வெளிப்படுத்தினார்! என்ன ஆச்சரியம்! கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடுதான் தம்முடைய இரகசியங்களை பகிர்ந்து கொள்வார்! . இவற்றை சோதோமின் மக்களுக்கும் தெரியப்படுத்தவில்லை, சோதோமில் வாழ்ந்த லோத்துவுக்கும் தெரியப்படுத்தவில்லை ஆனால் ஆபிரகாமோடே பகிர்ந்து கொள்கிறார்.
சோதோமைப் போல பாவத்தில் சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகத்தின் எதிர்காலத்தையும், விசுவாசிகளாகிய நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் யோவான் 15: 15 ல் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார் “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்று.
ஆம்! அருமையானவர்களே! விசுவாசிகளாகிய நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிநேகிதர் என்று அவர் கூறுகிறார்.
கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை வெளிப்படுத்திய போது ஆபிரகாம் தன் சகோதரன் மகனாகிய லோத்துவுக்காக வேண்டுதல் செய்கிறதைப் பார்க்கிறோம்.
இந்த இடத்தில் நாம் லோத்தின் வாழ்க்கையை சிறிது அலசிப்பார்ப்போம் வாருங்கள்!
லோத்து தன் இளம் பிராயத்தில் தகப்பனை இழந்தவன். ஆபிரகாமின் குடும்பம் கானானை நோக்கி புறப்பட்டபோது லோத்தும் பிரயாணப்படுவதைப் பார்க்கிறோம். அவன் ஏன் தன் சொந்த ஊரை விட்டு புறப்பட்டான்? தெரியாது. ஒருவேளை குழந்தையில்லாத ஆபிரகாமும், சாராளும் , அவனை தன் குழந்தை போல பாவித்திருக்கலாம்!
ஆபிரகாமும், சாராளும், கானானுக்கு செல்லாமல், எகிப்துவுக்கு சென்ற போது இளம் லோத்துவும் அவர்களோடு சென்றான். எகிப்தில் பார்வோன், ஆபிரகாமுக்கு ( சாராளுக்காக) வாரியிறைத்த பரிசுகள் லோத்தையும் பணக்காரனாக்கிற்று. ஆனால் அதே சொத்து ஆபிரகாமையும், லோத்துவையும் பிரிக்கவும் காரணமாயிற்று என்று ஆதி: 13:6 ல் பார்க்கிறோம். சொத்து மிகுதியால் ஆபிரகாம் ஒருபக்கமும், லோத்து மறுபக்கமும் பிரியவேண்டியதாயிற்று. லோத்து தன் கண்களை ஏறெடுத்து பார்த்து “ எகிப்து தேசத்தைப் போல இருந்த யோர்தானுக்கு அருகான சமபூமியில் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்” ( ஆதி: 13:10).
எகிப்து போல இருந்த சோதோமை தேர்ந்தெடுக்கும் வாஞ்சை லோத்துக்கும் அவன் மனைவிக்கும் எங்கிருந்து வந்தது? எகிப்தில் அவர்களுக்கு கிடைத்த ஆடம்பர வாழ்க்கையும் ஆஸ்தியும் தான்.
நீரில் மூழ்கி ஆழ்ந்த கப்பல் ஒன்றைக் கண்டு பிடித்தபோது ஒரு மனிதன் தங்கக் கட்டிகளை தன் உடம்பில் கட்டிக்கொண்டு அமர்ந்த வண்ணமாக மூழ்கியிருந்ததைக் கண்டனர். அவன் நீரில் மூழ்கிய போது தங்க கட்டிகள் அவன் மேல் விழுந்து அழுத்தியதா? அல்லது தங்கக் கட்டிகளை அவன் கட்டியிருந்ததால் ஆழ்ந்து போனானா? தெரியவில்லை! ஆனால் லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால் தான் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான், இது லோத்தும் அவன் மனைவியும் விரும்பி தெரிந்து கொண்ட வாழ்க்கை. இந்த வாழ்க்கைதான் அவனை அழிவை நோக்கி எடுத்து சென்றது.
நம் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ளும் ஆடம்பரமான பாதை, நாம் எடுக்கும் முடிவுகள், நாம் தெரிந்து கொள்ளும் தொழில் இவைகள் முதலில் சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால் அதுவே நம்மையும் நம் குடும்பத்தையும் அழிவின் பாதையில் நடத்திவிடும். இன்று யோசிக்காமல் முடிவெடுத்துவிட்டு நாளை கண்ணீர் சிந்தி பிரயோஜனமில்லை! சிந்தித்து செயல்படு!