ஆதி: 19: 1 அந்த இரண்டு தூதரும்சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
இரக்கமும் கிருபையுமுள்ள தேவனாகிய கர்த்தர் நம்மை இந்தப் புதிய மாதத்தை காணச் செய்த தயவுக்காக அவரை ஸ்தோத்தரிப்போம். அவர் தமது கிருபையினால் இந்த மாதம் முழுவதும் நம்மோடிருந்து காத்து வழி நடத்தும்படியாய் ஒரு நிமிடம் நம்மைத் தாழ்த்தி அவரிடம் ஒப்புவிப்போம்!
லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால் தான் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான், என்று நேற்று பார்த்தோம்.
லோத்துவின் குடும்பம் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது சோதோமைப் பார்த்து ஏங்கியிருப்பார்கள். ஆதி : 13: 12 ல், சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான் என்று வாசிக்கிறோம். நாம் அடுத்த முறை லோத்துவை சந்திக்கும்போது அவன் சோதோமிலேயே வாசம் செய்தான். சோதோமின் வாசலில் அவன் உட்கார்ந்திருந்தான். அங்கேதான் அவனை இரண்டு தேவ தூதரும் சந்திக்கிறார்கள்.
லோத்துவின் குடும்பத்தார் பாவிகள் இல்லை ஆனால் பாவம் நிறைந்த சோதோமின் மேல் அவர்கள் கண் நோக்கமாயிருந்தது. ஒருவேளை, ஆரம்பத்தில், ஐயோ இப்படி நடக்கிறது, அப்படி நடக்கிறது என்று குடும்பத்தில் பேசியிருக்கலாம்! சில நாட்கள், மாதங்கள் சென்றபின், சோதோம் மக்களின் பாவம் லோத்துவின் குடும்பத்தாருக்கு ஒரு பாவமாகக் கூட கண்ணில் பட்டிருக்காது. அடிக்கடி போக்கு வரத்து வைத்திருப்பார்கள், தொழில் சம்பந்தமாகக் கூட சென்றிருக்கலாம். ஒருநாள் கூடாரத்தைக் கழற்றிவிட்டு சோதோமுக்குள் போய் வீடு எடுத்து குடியேறியிருப்பார்கள். ஆதி 19:1-6 வரை வாசிக்கும்போது லோத்து கூடாரத்தில் அல்ல, வீட்டில் குடியிருந்ததைப் பார்க்கிறோம். ஆபிரகாமும் சாராளும் கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த போது லோத்து ஆடம்பரமான வீட்டில் குடியேறிவிட்டான்.
ஆபிரகாமோடு தேவனால் வழி நடத்தப்பட்ட இந்த குடும்பம், சோதோமுக்குள் சென்றதின் காரணமென்ன? கடவுள் மீது ஒரு கண்ணும், உலகம் மீது ஒரு கண்ணும் வைத்ததுதான். உலக ஆசை ஒரு பக்கமாய் அவர்களை இழுத்துவிட்டது.
நம்மில் எத்தனை பேருக்கு சோதோம் போல உலக ஆசைகள் உண்டு. ஒருவன் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய இயலாது என்று நம் ஆண்டவராகிய கிறிஸ்து கூறியதற்கு உதாரணம் இந்த லோத்துவின் குடும்பத்தாரே! அவர்கள் எவ்வளவு தூரம் சோதோமோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள் தெரியுமா? சோதோமை அழிக்குமுன் தேவ தூதர்கள் அவர்கள் கைகளைப் பிடித்து வெளியே கொண்டு போய் விட வேண்டியதாயிருந்தது ( ஆதி 19: 16).
இன்று நம் வாழ்க்கையில் எவ்வித சோதோமோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம்? நம்மில் எத்தனை பேர் சோதோமுக்கு நேரே கூடாரமிட்டு கொண்டிருக்கிறோம்? நம்மில் எத்தனை பேர் சோதோமுக்குள்ளே வாசம் செய்து கொண்டிருக்கிறோம்? யாரும் ஒரேடியாக பாவத்தில் விழுவதில்லை, சிறிது, சிறிதாகத்தான் இழுக்கப்படுகிறோம். எத்தனை சிற்றின்பங்கள் இன்று நம்மைப் பின்னி பிணைந்து கொண்டிருக்கின்றன? சில சிற்றின்பங்கள் நமக்குப் பாவம் என்றே தோன்றுவதில்லை! ஏனெனில் அது அவ்வளவுதூரம் நமக்கு பழகி விட்டது!
இன்று நம்மை இழுத்துக் கொண்டிருக்கும்சிற்றின்பங்கள் என்ற சேற்றை உதறிவிட்டு அவருடைய பரிசுத்த சமூகத்துக்குள் வர தேவன் மட்டுமே நமக்கு உதவி செய்ய முடியும்! உன்னை பாவம் என்னும் சோதோமிலிருந்து வெளியே கொண்டு வரும்படியாக கர்த்தரை நோக்கி மன்றாடு! உன் பிள்ளைகள் சோதோமுக்குள்ளே உள்ளனரா? அவர்களுக்காக இன்று நீ முழங்கால் படியிட்டு ஜெபி! இரக்கமுள்ள தேவன் அழிவிலிருந்து இரட்சிப்பார்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்