ஆதி:19: 26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆனாள்.
லோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம்.
லோத்தின் குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர்! ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று.
தேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லா குடிகளையும், பயிரையும் அழித்துப் போட்டார் ( ஆதி: 19:25-26)
லோத்தின் மனைவியோ பின்னிட்டு பார்த்து உப்பு தூணானாள் என்று வேதம் சொல்கிறது. நாங்கள் இஸ்ரவேல் நாட்டுக்கு சென்றபோது லோத்தின் மனைவி என்று சொல்லப்படும் ஒரு பெண் போன்ற வடிவமைப்பைப் பார்த்தோம். அது உப்புத்தூண் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. ஒரு பெண் தலையின் மேல் ஏதோ சுமந்து கொண்டிருப்பது போன்ற வடிவமைப்பு அது. லோத்தின் மனைவி தண்ணீர் குடமொன்றை தலையில் தூக்கிக் கொண்டு சென்றிருப்பாள் என்று கூறப்படுகிறது!
Fevi Kwik என்ற பசை கொஞ்சம் தவறினால் நம் கை விரலை கூட இணைத்து விடும். லோத்தின் மனைவியை சோதோமின் ஆடம்பர வாழ்க்கை Fevi Kwik போட்டு ஒட்டியதை போல பிணைத்திருந்தது. சோதோமில் அவள் வீடு இருந்தது, அவர்கள் சம்பாதித்த சொத்து இருந்தது. தேவ தூதர்கள் அவள் கையை பிடித்து அவளை சோதோமுக்கு வெளியே கொண்டு வந்தபோது அவள் சரீரம் வந்ததே தவிர அவள் மனது அங்கேயே இருந்தது. அந்த ஊரில் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள் யாரோ ஒருவர் வந்து இந்த ஊர் அழியப்போகிறது எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப் போங்கள் என்றால் எப்படி வர முடியும்?
குஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு வீடுகளெல்லாம் அழிந்து போயின. அவர்களுக்கு உதவுமாறு நானும் என் கணவரும் சென்றிருந்தோம். விழுந்து நொறுங்கிப் போயிருந்த வீடுகளருகே குடிசைப் போட்டு கொண்டு, புழுதியாய் கிடக்கும் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மக்களின் அவல நிலை என் மனதை விட்டு நீங்கவில்லை!
சுனாமி என்கிற மாபெரும் கடலைலைக்கு தங்கள் வீடுகளைப் பலி கொடுத்து விட்டு அடுத்து செய்வதறியாது நின்ற பெண்களின் நிலையைப் பார்த்து பல இரவுகள் நான் தூக்கமின்றி இருந்திருக்கிறேன். சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வந்த வெள்ளம் எத்தனை குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்தது தெரியுமா? எத்தனையோ பேர் ஏக்கத்தால் உயிரிழந்தனர்.
லோத்தின் மனைவி தன் வீட்டையும், சொத்துகளையும் விட்டு மாத்திரம் அல்ல, அவளோடு இத்தனை வருடங்கள் வாழ்ந்த அத்தனை பேரையும் விட்டு வரவேண்டியதாயிருந்தது. அவளால் முடியவில்ல! பின்நோக்கி பார்த்து உப்புத் தூணானாள்!
லூக்கா 17:32 ல் நம்முடைய கர்த்தராகிய இயேசு “ லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். உங்களுடைய ஐஸ்வரியம் எங்கே இருக்கிறதோ அங்கேதானே உங்கள் உயிரும் இருக்கும்.
லோத்தின் மனைவி ஒரு தாய், தன் குடும்பத்தை, தன் வீட்டை நேசித்தவள். கிறிஸ்துவுக்கு மேலாக நீ யாரை நேசித்தாலும் சரி, அது ஒருவேளை உன் கணவராக இருக்கலாம், ஒருவேளை உன் பிள்ளைகளாக இருக்கலாம், பெற்றோராக இருக்கலாம், அல்லது உன் அன்பின் குடும்பமாக இருக்கலாம். இவை ஒருநாள் நீ பிரிய முடியாத சோதோமாக மாறிவிடும். ஜாக்கிரதை!
லோத்தின் மனைவியை நினைத்துக் கொள் ! காத்துக் கொள் உன் பரம அழைப்பை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்