வாதையை நிறுத்திய ஜெபம்!
2 சாமு: 24:25 “அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காக செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.”
ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், தாவீது செய்த ஜெபத்துக்கு தேவன் பதிலளித்து இஸ்ரவேலின் மேலிருந்த வாதையை நீக்கிப்போட்டார் என்று வாசிக்கிறோம்.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே இன்று நம்மை அச்சுறுத்தி , அநேக குடும்பங்களை கண்ணீரில் மிதக்க வைத்துக் கொண்டிருக்கும் கொரொனா என்னும் வாதை நம்முடைய தேசத்தையும், உலக நாடுகளை விட்டும் ஒழிந்து போக வேண்டுமென்று நாமும் தாவீதைப் போல தேவனுடைய சமுகத்தை நாடுவோம்.
தாவீது செலுத்திய சர்வாங்க தகன பலிகள் தேவனாகிய கர்த்தரின் கிரியைகள் நியாயமுள்ளவைகள் என்பதற்காகவும்,சமாதான பலிகள் அவருடைய கிருபைகளுக்காகவும் செலுத்தப் பட்டவை.
இன்று உலகத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த வாதையைப் பார்க்கும்போது தேவன் ஏன் இதை அனுமதித்தார் என்று சிலருக்கு எண்ணத் தோன்றும் ஆனால் அவருடைய கிரியைகள் நியாயமுள்ளவைகள் என்று விசுவாசிப்போம். அதுமட்டுமல்ல அவருடைய மகா பெரிய கிருபையினால் நம்மை இரட்சிக்கும்படியாய் அவருடைய சமுகத்தை நாடுவோம்.
நாம் ஒருமனதோடு ஜெபிக்கும்போது தேவனாகிய கர்த்தர் கொரோனா என்ற வாதையை நிச்சயமாக நிறுத்தி விடுவார். விசுவாசத்தோடு இன்று என்னோடு சேர்ந்து ஒருமணி நேரமாவது ஜெபியுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com