ஆதி:24:67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனையாக்கிக் கொண்டு அவளை நேசித்தான்.
நம்முடைய முற்பிதாக்களான ஆபிரகாம், சாரளுடைய காலம் வேகமாய்க் கடந்தது. ஆதியாகமம் 23 ம் அதிகாரத்தில் சாராள் 127 ம் வயதில் மரித்துப் போவதையும் அவளை அடக்கம் பண்ண ஆபிரகாம் ஒரு நிலத்தை வாங்குவதையும் பற்றிப் படிக்கிறோம்.
ஈசாக்கு வளர்ந்து திருமண வயதை அடைந்து விட்டான்! ஆதி 24 ம் அதிகாரம் நமக்கு ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில் ஒன்றிணைந்த அருமையான ஒரு சம்பவத்தை நமக்குக் கூறுகிறது.
இந்த இடத்தில் வேதம் நமக்கு கற்பிக்கிற மகா பெரிய சம்பவம், மணவாளனாகிய கிறிஸ்துவுடன், மணவாட்டியாகிய நாம் ( திருச்சபை) ஒன்றிணைக்கப்படுவது. இந்த திருமண சம்பவத்தை இன்று நாம் படிப்போம்.
முதலாவது ஆதி: 24:7 ல் , தந்தையாகிய ஆபிரகாம் தன் ஒரே குமாரனாகிய ஈசாக்குக்கு ஒரு மணவாட்டியை அளிக்க விரும்புகிறதைப் பார்க்கிறோம். இதைப் போலத்தான் பிதாவாகிய தேவன் தன் ஒரே பேரான குமாரானாகிய இயேசு கிறிஸ்துவுக்கு, திருச்சபையாகிய நம்மை பரிசாக அளிக்க விரும்பினார்.
எதனால் இந்த அன்பின் பரிசு?
முதலாவது ஈசாக்கு தன் தகப்பன் தன்னை ஜீவ பலியாகக் கொடுக்கப் போவதை உணர்ந்த பின்னரும், தன் தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தது போல, நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும், தன்னை மரணம் வரை ஒப்படைத்து தன் பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தார்.
இரண்டாவது ( ஆதி: 24:63) மணவாளனாகிய ஈசாக்கு, தனிமையில் தேவனைத் தேடி விட்டு, சாயங்கால நேரம் இருள் சூழும் வேளையில் வெளியிலிருந்து வரும் போது ரெபெக்காளைக் கண்டு அவளை நேசித்தான் என்று வேதம் கூறுகிறது. மணவாளனாகிய கிறிஸ்து இயேசுவும், இந்த உலகத்தை பாவம் என்ற இருள் சூழ்ந்திருக்கும் வேளையில் திருச்சபை என்கிற மணவாட்டியாகிய நம்மை அவருக்கு சொந்தமாக்கிக் கொள்வார். ஈசாக்கு ரெபெக்காளை ஏறிட்டு பார்த்ததும் நேசித்தது போல, நம் கிறிஸ்துவும் நாம் பாவிகளாய் இருக்கையிலேயே நம்மேல் அன்பு கூர்ந்தார் என்று வேதம் கூறுகிறது ( ரோமர் 5: 6-8 ).
மூன்றாவது மணவாட்டியாகிய ரெபெக்காள், ஈசாக்கை பற்றி கேள்விப்பட்டிருந்தாளே தவிர நேரில் கண்டதில்லை. ஆபிரகாமின் ஊழியக்காரன் மூலமாக ஈசாக்கைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் வாழ்க்கையை அவனுக்கு அர்ப்பணிக்க முன்வந்தாள் என்று பார்க்கிறோம். தேவன் அவளை முன் குறித்திருந்தாலும், அவள் ஈசாக்கோடு வாழ முடிவெடுத்ததினால்தான் இது சாத்தியமாயிற்று. அவள் ஆபிரகாமின் ஊழியக்காரன் மூலமாய் ஈசாக்கிடமிருந்து சில பரிசுகளைத்தான் பெற்றிருந்தாள், ஆனால் அவனுடைய மணவாட்டியானபோது ஈசாக்குக்குரிய அத்தனையும் அவளுக்கு சொந்தமாயின. நமக்கும் இன்று விசுவாசம் கேள்வியினால் ! விசுவாசிக்கும் நமக்கு இந்த உலகில் வாழும்போது சந்தோஷம், சமாதானம் என்ற பல பரிசுகள் கிடைக்கின்றன! கர்த்தரை முக முகமாய் தரிசிக்கும் அந்த நாளோ நாம் அவருடைய சுதந்தரராவோம் என்று பார்க்கிறோம்.
இது சாதாரணக் கதையல்ல! சத்தியம்! நீ கண்ணில் காணாத மணவாளனாகிய கிறிஸ்துவை விசுவாசித்து உன் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கும்போது, அவர் உன்னை நேசித்து, நித்தியமாய் தமக்கு சொந்தமாக்கிக் கொள்வார். இந்த மணவாளன், மணவாட்டியின் கதையை இன்று உனக்கு சொந்தமாக்கிக்கொள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்