ஆதி:25:1 “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்”
நான் தற்போது கர்த்தர் கொடுத்த அதிக நேரத்தைப்பயன்படுத்தி டாலஸ் தியாலாஜிக்கல் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆதியாகம புத்தகத்தைப் படிக்கும்போது அதின் பேராசிரியர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களில் விசுவாசத்தில் சிறந்தவர் யாராக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். வேதாகமத்தைப் படித்தால் எப்பொழுதும் எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்தில் சிறந்திருந்தவன் யோசேப்பே என்று கூற முடியும். ஆனால் ஆபிரகாம் அல்லவா விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப் பட்டார்!!!????
ஆபிரகாம் தன் முதிர் வயதில் கேத்தூராள் என்னும் பெண்ணை மணந்து அவள் மூலமாய் ஆறு குமாரர்களைப் பெற்றான் என்று இந்த வேத பகுதியில் பார்க்கிறோம். ஒருவேளை சாராளை இழந்த தனிமை அவனை இன்னொரு பெண்ணிடம் விரட்டியது போலும். தனிமையை போக்க தேவனைத் தேட வேண்டிய வயதில் பெண்ணைத் தேடினான் ஆபிரகாம்.
தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனைத் திரளான ஜனத்துக்கு தகப்பனாக்குவேன் என்றார். தன் மனைவியாகிய சாராளோடு விசுவாச வாழ்க்கையை ஆரம்பித்த ஆபிரகாம் செய்த தவறுகளில் ஒன்று கானானுக்கு போகாமல் எகிப்துக்கு போனதும், அடிமைப் பெண்ணான ஆகாரை மறுமனையாட்டி ஆக்கியதும் என்று ஏற்கனவே பார்தோம்.
இப்படி பலமுறை தவறுகள் செய்த ஆபிரகாமின் வாழ்க்கையின் வெற்றிச் சின்னம் தான் என்ன?
கர்த்தர் இந்த தம்பதியினருக்கு சிறிது சிறிதாக விசுவாச வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார். அவருடைய விசுவாசம் என்னும் பாடத்தின் உச்ச கட்டம் , கர்த்தர் ஆபிரகாமிடம் தன்னுடைய ஒரே குமாரனாகிய ஈசாக்கை பலியிட கேட்டது. பலியிட ஆட்டுக்குட்டி எங்கே அப்பா என்று கேட்ட ஈசாக்கிடம் அவர், ‘ பலியிட ஆட்டுக்குட்டியை கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்று கூறியது, இவற்றின் மூலம் விசுவாசம் என்னும் பரீட்சையில் ஆபிரகாம் தேர்வு பெற்றார். விசுவாசத்தின் தந்தை என்ற பெயர் ஆபிரகாமுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டார்.
சாரளும் மரிக்கும்போது ஈசாக்குக்கு ஒரு நல்ல தாயாக மரித்தாள் என்று காண்கிறோம்..அவள் பல தவறுகள் செய்திருந்தாலும் தேவன் அவளை ராஜ குமாரியாக பார்த்து ( ஆதி:17:15) அவளை விசுவாசத்தின் ராணியாக்கினார் ( எபி: 11:11). பரிசுத்த பேதுரு அவளை கிறிஸ்தவ பெண்களுக்கு ஒரு சாட்சியாகவும் ( II பேதுரு: 3: 1- 6), பரிசுத்த பவுல் அவளை கர்த்தருடைய கிருபை விசுவாசியின் வாழ்க்கையில் எப்படி வேலை செய்கிறது என்பதற்கும், உதாரணமாக்கினார் ( கலாத்தியர்: 4: 21-31).
ஆபிரகாம் மரிக்கும்போது தன் குடும்பத்தாருக்கு அநேக ஆஸ்தியையும், இந்த உலகத்தாருக்கு அநேக ஆசீர்வாதத்தையும் விட்டு சென்றார்.
பலமுறை தவறினாலும் ஆபிரகாம், இஸ்ரவேல் மக்களையும், கிறிஸ்து இயேசுவையும் இந்த உலகத்துக்கு பரிசாக அளித்த விசுவாசத்தின் தந்தையல்லவா? யாக்கோபு 2:23 அவன் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான் என்று வாசிக்கிறோமே! அவர் விசுவாச வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருந்த போதும் ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்துக் கீழ்ப்படிந்து நடந்ததாலே (எபி: 11:8) அவரும் ஆசிர்வதிக்கப்பட்டார், நமக்கும் ஆசீர்வாதமானானர்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்