ஆதி: 25: 20 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன!
சாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது.
ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஆபிரகாம் தம்பதியினர் தாங்களே இதற்கு விடை கண்டு பிடிக்க முயன்று தோல்வியுற்றனர் , ஆனால் ஈசாக்கு தம்பதியினரோ கர்த்தருக்கு காத்திருந்து விடை பெற்றனர். இதற்கு காரணமென்ன?
ஈசாக்கு தன் சிறுவயதில் தன் மாற்றுத்தாய் ஆகாரை அறிவான். ஆகார் மூலமாய் தன் தாய் அனுபவித்த நிந்தைகளும் வேதனைகளும் அவனுக்கு தெரியும். ஆகாரையும், இஸ்மவேலையும் வீட்டை விட்டு அனுப்பும் போது தன் தகப்பன் பட்ட வேதனைகளையும் அறிவான். இவைகள் எந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும் என்ற முதலாவது பாடத்தை அவனுக்கு புகட்டியிருந்தது.
அவன் இந்த நீண்ட காத்திருத்தலின் காலத்தில் தன் தேவைகளை தேவனிடத்தில் முறையிடுவதென்ற இரண்டாம் பாடத்தைக் கற்றுக் கொண்டான். பிள்ளை வேண்டுமென்ற ஆத்திரத்தில் இன்னொரு பெண்ணைத் தேடி ஓடாமல், கர்த்தருடைய சமூகத்துக்கு தன் தேவைகளோடு ஓடுகிறான்.
கர்த்தருக்கு காத்திருத்தல் என்பது நம்முடைய ஆசைகள் நிறைவேறவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அவருடைய சித்தம் நிறைவேறவேண்டும் என்று காத்திருத்தல் ஆகும்.
கர்த்தருடைய சித்தத்தின்படி ஜெபித்த ஜெபத்துக்கு பதிலே ரெபெக்காளின் கருவில் உருவாகிய இரட்டை பிள்ளைகள். இப்பொழுது ஈசாக்கின் வயது 60. அவனுக்கு 40 வயதில் திருமணமாயிற்று. இருபது வருடங்கள் கர்த்தருக்கு காத்திருந்தான் என்று வேதத்தில் பார்க்கிறோம்.
ஆதியாகமம் முழுவதும் தேவனுடைய மக்கள் பலர் தங்கள் ஜெபத்துக்கு பதிலுக்காக காத்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சற்று நினைவு படுத்திக் கொள்ளலாமா?
ஆபிரகாமும் சாராளும் 25 வருடங்கள் வாக்குத்தத்தின் பிள்ளைக்காக காத்திருந்தனர்.
ஈசாக்கும் ரெபெக்காளும் 20 வருடங்கள் தங்களுடைய பிளைக்காக காத்திருந்தனர்.
யாக்கோபு தான் நேசித்த பெண்ணை மணக்க 7 வருடங்கள் காத்திருந்தான்.
யோசேப்பு தன் குடும்பத்தொடு இணைக்கப் பட 25 வருடங்கள் காத்திருந்தான்.
நாம் சங்: 31: 15 ல் “ என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” என்று தாவீது எழுதுவதைப் பார்க்கிறோம். வாலிப வயதிலேயே சாமுவேலால் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது மலைகளிலும் கெபிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனாலும் தன்னுடைய காலம் என்னும் கடிகாரம் கர்த்தருடைய கரத்தில் இருப்பதை உணர்ந்தான். தன் வாழ்க்கையில் கடந்து போகிற ஓவ்வொரு மணிக்கும், நொடிக்கும் நிச்சயமாக ஒரு நோக்கமும் அர்த்தமும் உள்ளதை உணர்ந்து இதை எழுதுகிறான்.
நம்மில் எத்தனை பேர் இன்று நம்முடைய ஜெபத்துக்கு பதில் கிடைக்காமல் வேதனையில் இருக்கிறோம்? இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற வேதனை உங்கள் குரலில் தெரிகிறது. இன்றைய காலத்தில் நம்மில் 85% பேர் ஏதோ ஒரு மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டு இருக்கின்றனர். சிலருக்கு வேலையில் பிரச்சனை! சிலருக்கு பணப் பற்றாக்குறை, சிலருக்கு குடும்பத்தில் அன்பு இல்லை! சிலருக்கு பிள்ளைகளால் வேதனை! ஐயா எப்பொழுது தீரும் என் வேதனை என்று புலம்பும் அநேகர் நம்மில் உள்ளனர்.
தாவீதைப் போல நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் உள்ளது என்பதை உணர்ந்து காத்திருப்போம்.
என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது என்ற நிச்சயம் நமக்கு இருக்குமானால் நம்முடைய வாழ்வில் நாம் காத்திருத்தலின் நோக்கமும் நன்மைக்கே என்று தெரியும்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்