ஆதி: 26 :27 “ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும் ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும், விவாகம் பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும், ரேபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.”
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்லுவார்கள் அல்லவா? அதற்கு சிறு பிராயத்தில் நாம் எப்படி வளர்க்கப்படுகிறோமோ அப்படித்தான் நாம் முதிர்வயதில் இருப்போம் என்றுதானே அர்த்தம்!
சிறுவயதில் சரியான பாதையில் நடத்தி, பிள்ளைகளை உருவாக்குவது ஒரு தாயின் கடமையல்லவா? பல ஆசிரியர்கள் ஒரு மனிதன் உருவாவதற்கு காரணமாயிருந்தாலும், எல்லாரையும் விட சிறந்த ஆசிரியர் நம் தாய் தான் என்பதை பலர் என்னோடு ஆமதிப்பீர்கள். அன்பு, அடக்கம், பாரம்பரியம், உபசரிப்பு, கர்த்தருக்கு பயப்படுதல், கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பது போல பல நல்ல பண்பாடுகளை நான் என் அம்மாவிடம்தான் கற்றுக்கொண்டேன்.
தாய்மாராகிய நாம் நம் பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்க்க கடமைப்பட்டிருக்கிறோம். இன்று நாம் அந்த கடமையில் தவறுவோமானால், நாளை நம் பிள்ளைகள் திசை மாறிப் போகும்போது கண்ணீர் சிந்துவதில் பிரயோஜனமென்ன?
அப்படித்தான் நடந்தது ஈசாக்கு, ரெபெக்காள் தம்பதியினருக்கு!
ஆபிரகாம் தன் குமாரனான ஈசாக்குக்கு ஏத்தியரும் பெலிஸ்தரும் வாழ்ந்த அந்த ஊரில் பெண் கொள்ள விரும்பாமல் தன்னுடைய வேலைக்காரனைத் தன் சொந்த ஊருக்கு அனுப்பியது ஞாபகம் உள்ளதா? ஆனால் இங்கு ஏசா அந்த ஊருக்குள் போய் ஒருத்தி அல்ல இரண்டு ஏத்தியப் பெண்களை மணக்கிறான்.
வேதத்தில் கூறப்பட்டுள்ளது போல ஏசா இரு பெண்களை தன் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக மணந்து, தன் தாய் தகப்பனுக்கு இத்தனை மன நோவு கொடுக்க காரணம் என்னவாயிருக்கும்? அவனுடைய வாழ்க்கை தேவனோடு ஒப்புரவாக இல்லை! அவன் தேவனைப் பற்றி சிந்தித்ததாகவேத் தெரியவில்லை! ஆபிரகாமுடைய பேரனான அவனுக்கு இப்படிப்பட்ட ஆவிக்குரிய தோல்வி எப்படி வந்திருக்கும்?
ரெபெக்காள் தன் உறவில், பாசத்தில் பட்சபாதம் காட்டி, யாக்கோபை அதிகமாக நேசித்து, ஏசாவை வெறுத்து, அன்பின் கூடாரமாக இருக்க வேண்டிய குடும்பத்தை இரண்டாக்கி கூறு போட்டதால் இருக்குமோ????
அவனுக்கு தாயின் பாசமும், பரிவும், அறிவுரையும் , ஜெபமும், சரிவர கிடைத்திருந்தால், அவன் அவர்களைப் புண் படுத்தும் இந்த செயலை செய்திருக்கமாட்டான் என்று நான் நினைக்கிறேன். தன் தாய் தன்னை நேசிக்கவில்லை என்ற எண்ணம் அவனைத் தனிமையில் தள்ளியதால் ஒருவேளை அவன் அந்த ஊர் பெண்கள் பின்னால் அலைந்து அவர்களை மணக்கும்படி செய்திருக்கலாம். இப்பொழுது மனநோவால் கண்ணீர் வடித்து என்ன பிரயோஜனம்?
ஒரு தாயால் பிள்ளைகளின் போக்கை நிச்சயமாக உணர முடியும். நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுக்க விரும்புகிறோம், நம் பிள்ளைகள் எல்லா கலைகளிலும் தேற வேண்டும் என்று பல நவீன பயிற்சிகளுக்கு அனுப்புகிறோம். எல்லாவித நவீனப் பொருட்களையும் வாங்கி அவர்களின் வாழ்க்கையை இலகுவாய், சிறப்பாய் அமைத்துக் கொடுக்கிறோம். ஆனால்!!!!!!!
ஆனால்!!! நம் பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறந்து வளர, நாம் என்ன முயற்சி செய்கிறோம்? பலவிதமான நண்பர்களோடு வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் நம் பிள்ளைகள், நம்மிடம் தானே ‘கர்த்தருக்கு பயப்படுதல்’ என்னும் அடிப்படைத் தத்துவத்தை கற்றுக்கொள்ள முடியும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்