ஆதி:31:13 நீ தூணுக்கு அபிஷேகஜ்செய்து , எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டு புறப்பட்டு உன் இனத்தாரிருக்கிற தேசத்துக்கு திரும்பிப் போஎன்றார் என்றான்.
பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், ஏமாற்றுக்காரனான லாபானுடைய ஆதிக்கத்துக்குக் கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். பதிநான்கு வருடங்கள் தன்னுடைய மனைவிமாருக்காக உழைத்தான். பின்னர் பிள்ளைகள் பிறந்தனர். ஆக மொத்தம் இருபது வருடங்கள் ஓடி விட்டன! தேவனாகிய கர்த்தர் யாக்கோபின் வாழ்வில் ஒரு பெரிய திட்டம் வைத்திருந்தார், அவனோ வஞ்சனையும், பொறாமையும், பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான். கர்த்தர் அவனைத் தான் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்கு திரும்பும்படி கட்டளையிடுகிறார்.
இப்பொழுது நாம் யாக்கோபுடன் சேர்ந்து கானானுக்கு பயணம் செய்வோம். அதற்கு முன், ஒரு நிமிடம்! நம்மை யாக்கோபின் இடத்தில் வைத்து பார்ப்போம்! யாக்கோபு என்ன எண்ணியிருப்பான் என்று நமக்கு சற்றுத் தெரியும்!
பதினான்கு வருடங்கள் பேராசைக்காரன் லாபானோடு பாடு பட்டிருக்கிறேன்! வீட்டிலும் மனைவிமாறோடு நிம்மதியில்லை, ஒருவருக்கொருவர் பொறாமையிலும், போட்டியிலும் மேலும் மேலும் பிரச்சனைகள் கொடுத்தனர். இப்பொழுது தான் கர்த்தர் கிருபையில் வீட்டில் சிறிது நிம்மதி. ராகேலுக்கு யோசேப்பு பிறந்த பின்னர் தான் சகோதரிகள் மத்தியில் சிறிது போட்டி குறைந்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தரிசனமாகி பழைய காலத்தை நினைவூட்டுகிறார். ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன்! அவர்களோடு இருந்தது போல என்னோடும் இருப்பாராம்! நல்லது…..ஆனால்…..என்னை வீட்டுக்கு திரும்பி போகச் சொல்கிறாரே! அங்கு நான் ஏசாவை ஏமாற்றி விட்டு, உயிருக்கு பயந்து தானே இங்கு ஓடி வந்தேன்! இப்பொழுது எப்படி அங்கு போவது? ஏசா என்னை ஏற்றுக் கொள்வானா? மன்னிப்பு கேட்டால் மன்னிப்பானா? அல்லது என் மனைவிகளை, பிள்ளைகளை அழித்துவிடுவானா?
யாக்கோபின் மனதில் ஒரே போராட்டம்! கானான் என்ற பெயர் அவனுக்கு இனிமையாக இருந்தாலும் இனந்தெரியாத ஒரு கலக்கமும் அவனைப் பற்றியது! கானானுக்கு செல்வதென்பது ஏசாவோடு ஒப்புரவு ஆகுதல் அல்லவா?முறிந்து போன உறவைப்புதுப்பிக்க முடியுமா? உடைந்து போன கண்ணாடியை ஒட்ட வைக்க முடியுமா?
நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட நிலையிருக்கிறோம்? கர்த்தர் நம் பாவங்களை மன்னித்திருக்கிறார், கர்த்தர் நம்மோடிருக்கிறார், நம்மை வழி நடத்துகிறார், நான் உன்னைக் கைவிடுவதில்லை என்று வாக்கு கொடுத்திருக்கிறார், ஏதோ நிம்மதியாய் ஒவ்வொரு நாளும் நாமுண்டு, நம் வாழ்க்கை உண்டு என்று இருக்கையில், கர்த்தர், நம்மைக் கடந்த காலத்தை திரும்பி பார்க்க சொல்லி, நாம் துரோகம் செய்த ஒருத்தரோடு, மன்னிப்பு கேட்டு ஒப்புரவு ஆக சொன்னால் என்ன சொல்வீர்கள்?
இருபது வருடங்களுக்கு முன்பு, யாக்கோபு ஏசாவுக்கு தப்பி ஓடி, லாபானிடம் சரணடைந்தான்! இப்பொழுது லாபானிடம் தப்பி ஏசாவை சந்திக்க வருகிறான்! நம் பாவம் நம்மைத் தொடர்ந்து படிக்கும் என்பதற்கு யாக்கோபு ஒரு சாட்சியல்லவா? யாக்கோபு தன் தகப்பனையும், சகோதரனையும் ஏமாற்றியதை கர்த்தர் மன்னித்திருக்கலாம், ஆனால், அவன் விதைத்த வினையின் பலனை அறுக்க வேண்டியிருந்தது.
யாக்கோபின் கடந்த காலம் கர்த்தருக்கு தெரியும். அவன், தான் கடந்த காலத்தில் செய்த ஒரு தவறோடு காலம் முழுவதும் கழிப்பது அவருக்கு பிரியமானதல்ல. அவன் சகோதரனோடு ஒப்புரவாகுதலே கர்த்தரின் விருப்பம். அவன் இந்தக் கடினமான பிரயாணத்தை தன் மனைவிமாரோடும், பிள்ளைகளோடும், எறேடுக்கும் போது கர்த்தர் ‘ நான் உன்னோடு இருப்பேன், உன்னைக் கைவிடேன்’ என்று அவனுக்கு வாக்களிக்கிறார். தேவனுடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்த யாக்கோபின் குடும்பத்தினர் மாபெரும் அற்புதத்தைத்தான் அனுபவித்தனர்.
இன்று உன் வாழ்வின் கடந்த காலம் என்ன? முறிந்துபோன உறவுகள் உண்டா? பல வருடங்கள் கழிந்து விட்டன! இனி நான் என்ன செய்யட்டும் என்று எண்ணாதே.கர்த்தர் உன்னோடு பேசி உன்னை வழிநடத்துவாரானால் யாக்கோபின் குடும்பத்தாரைப் போல விசுவாசத்தில் முந்னே செல். மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் தயாராக இரு! யாக்கோபின் தேவன் உன்னோடிருக்கும் அற்புதத்தை நீயும் அனுபவிப்பாய்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்