ஆதி:32: 9-11 பின்பு யாக்கோபு, என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும், உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப் போ உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே , அடியேனுக்கு தேவன் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும்; அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.
நம்முடைய சிந்தனையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின் செல்வோம். யாக்கோபின் குடும்பத்தாரோடு கூட நாமும் ஒருநாள் பயணம் செல்வோம் வாருங்கள்!
யாக்கோபோடே கூட யாரெல்லாம் நடக்கிறார்கள் பாருங்கள்! அதோ யாக்கோபின் மனைவிமார் இருவர் லேயாளும், ராகேலும் தெரிகின்றனர். அதோ அங்கே ராகேலின் வேலைக்காரி பில்காளும், லேயாளின் வேலைக்காரி சில்பாளும் தெரிகின்றனர்! அவர்களுக்கு பின்னால் அவர்களின் பிள்ளைகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர்! ராகேலுக்கு அருகே நிற்பது யார்?? யோசேப்பு அல்லவா?
வேலைக்காரர்கள்! வேலைக்காரிகள்! கால்நடை மந்தை மந்தையாக, சாரை சாரையாக செல்கின்றன! இவர்களோடு யாக்கோபு ஆழ்ந்த சிந்தனையில் நடக்கிறான். முகத்தில் ஏதோ ஒரு பயம் தெரிகிறது!
கர்த்தர் அவன் கடந்த காலத்தை நினைவூட்டி, அவன் சகோதரனோடு முறித்த உறவை பழுது பார்க்கும்படியாகக் கட்டளையிட்டார், இதனால் வரும் விளைவு ஒருவேளை அவன் குடும்பத்தையே அழித்துவிடலாம். இதைப்பற்றி ஒன்றுமே அறியாதவர்களாய் நடந்து கொண்டிருந்த அவன் மனைவிமாரை அவன் கண்கள் நோக்கிய போது கண்களில் நீர் கசிந்தது.
ஒரு கணம் நில்லுங்கள்! எல்லாரும் சற்று நேரம் இளைப்பாருகிறார்கள்! யாக்கோபு மாத்திரம் ஒரு தனியிடம் நோக்கி சென்று முழங்காலிடுகிறான். அவன் உள்ளத்தின் வேதனையை வார்த்தைகளாக கொட்டுகிறான்! சற்று கவனியுங்கள்!
யாக்கோபு தேவனிடம் என்ன கூறுகிறான் என்று வேத வசனங்களில் பாருங்கள்!
- முதலாவது அவன், தேவனாகிய கர்த்தர் யார் என்பதை நினைவு கூர்ந்தான். அவர் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமானவர். ஒரு சிறு குழந்தை தன் தகப்பனிடம் வந்து அப்பா என்றழைப்பது போல யாக்கோபு தேவனை நெருங்கினான்.
- இரண்டாவது அவன் தேவனுடைய உடன்படிக்கையையும், அவர் தனக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தையும் நினைவு கூறுகிறான். தன்னை இருபது வருடங்கள் காத்து நடத்திய தேவன் இன்னமும் நடத்துவார் என்ற நிச்சயத்தொடு ஜெபிக்கிறான்.
- மூன்றாவது , யாக்கோபு தேவன் தன் மீது காட்டிய தயவையும், சத்தியத்தையும் நினைவு கூருகிறான். தயவும், சத்தியமும், நம் தேவனின் குணாதிசயங்கள் அல்லவா? அவர் கிருபையும், உண்மையுமானவர்.
- நான்காவது, தன் சகோதரன் ஏசாவின் கைக்குத் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் விடுவிக்கும்படி வேண்டுகிறான்.
மறுபடியும் சல சலவென்ற சத்தம், யாக்கோபின் குடும்பம் நடக்க ஆரம்பித்தனர். தேவனிடத்தில் தன் பாரங்களை இறக்கி விட்ட நிம்மதியோடு யாக்கோபு அமைதியாக, நிம்மதியாக நடக்கிறான்!
இந்த காலை வேளையில் என்ன பயத்தினால் நெருக்கப்படுகிறாய்? என்ன ஆபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாய்.ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் நம் தேவன்அல்லவா! பயப்படாதே!
யாக்கோபு ஜெபித்தது போல நாமும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூர்ந்து, அவர் வாக்குகளை நிறைவேற்ற வல்லவர், ஏனெனில் அவர் உண்மையும் சத்தியமுமானவர் என்ற விசுவாசத்தோடு ஜெபிப்போமானால், சங்கீதக்காரன் போல நான் அவரை விசுவாசத்ததினால் பயப்படேன் என்று நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர முடியும்.
யாக்கோபின் ஜெபம் இன்று நம் ஜெபமாகட்டும், யாக்கோபின் தேவன் நம்மோடிருக்கிறார்! வாழ்க்கையில் எப்படிப்பட்ட புயலை நீ கடந்து கொண்டிருந்தாலும் பயப்படாதே! மாலுமி இயேசு நம்மோடிருக்கிறார்! பத்திரமாய் கரை சேர்ப்பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்