ஆதி: 35:8 “ ரெபேக்காளின் தாதியாகிய தெபோராள் மரித்து, பெத்தேலுக்கு சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் பண்ணப் பட்டாள், அதற்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று.”
நாம் நேற்று யாக்கோபை விட்ட போது, அவன் தன் குமாரரிடம் இன் வாசனையை நீங்கள் இந்த இடத்தில் கெடுத்து விட்டீர்களே என்று புலம்பக் கூடிய அளவுக்கு, லேவியும், சிமியோனும் மூர்க்கமாய் நடந்தனர் என்று பார்த்தோம்.
ஆனால் ஆதி: 34 லிருந்து, 35 க்குள் போகும்போது, தேவனை விட்டு விலகி இருந்த இந்த குடும்பம் மறுபடியும், தேவனுடைய திட்டத்துக்குள் வருவதைப் பார்க்கிறோம். ஒரு வனாத்திரத்திலிருந்து, பாலைவனத்துக்குள் வருவது போன்ற அனுபவம்!
இந்த அதிகாரத்தில் கர்த்தர் என்கிற நாமம் பத்து தடவை இடம் பெற்றிருக்கிறது! இங்கு தேவன் தம்மை யாக்கோபுக்கு சர்வ வல்லமையுள்ள தேவனாக (EL SHADDAI)என்ற வல்லமையான நாமத்தோடு வெளிப்படுத்தினார்.
தேவன் யாக்கோபை நோக்கி, அங்கிருந்து புறப்பட்டு பெத்தேலுக்கு போகும்படி கட்டளையிடுகிறார். அங்குதானே கர்த்தர் முதன் முதலில் யாக்கோபுக்கு தரிசனமாகி, தன்னை ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும்’ என்று வெளிப்படுத்தினார் அல்லவா? அவனால் மறக்க முடியாத ஒரு இடம்! பெத்தேலுக்கு முப்பது மைல் அப்பால் இந்த குடும்பம் தங்கியதால் பல இன்னல்கள் பட்டன. இப்பொழுது கர்த்தர் அவர்களோடு தம்முடைய உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்ளும்படி பெத்தேலுக்கு எழுந்து செல்லச் சொல்கிறார்.
மறுபடியும் யாக்கோபு தன் குடும்பத்தின் தலைமையை எடுத்து, அவர்களை சுத்திகரிக்கச் சொல்லி, அவர்களிடமிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும் விலக்க சொல்கிறான். அவர்கள் அவன் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர். நம்முடைய விசுவாச பயணத்தில், நாம் பலமுறை தவறி இருந்தாலும், உண்மையாய் மனம் திருந்தி நம்மைப் பரிசுத்தம் பண்ணும்போது , தேவன் நம்மை பெத்தேலுக்கு வரும்படி அழைக்கிறார். நம்மோடு அவர் ஏற்படுத்தின உடன்படிக்கையைப் புதுப்பித்து மறுபடியும் நம்மை தன் நேசத்துக்குள் அணைக்க விரும்புகிறார்!
யாக்கோபு பெத்தேலில் ஒரு பலிபீடம் கட்டி, அவன் குடும்பம் முழுவதும், அங்கு தேவனை தொழுது கொண்டனர். இந்தக் குடும்பம் பெத்தேலில் தேவனை வழிபடும் போது ஒரு துக்கமான சம்பவம் நடை பெற்றது என்று நம்முடைய வேத பகுதி கூறுகிறது.
ரெபெக்காளின் தாதியாகிய தேபோராள் மரித்து போனாள், அவளை பெத்தேல் அருகே ஒரு கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணினார்கள், அந்த இடத்துக்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. அல்லோன்பாகூத் என்பதற்கு ‘அழுகையின் மரம்’ என்று அர்த்தமாம். அவர்கள் அந்த இடத்தில் அழுத அழுகை அந்த மரத்துக்கு அழுகையின் மரம் என்ற பேரைக் கொடுத்தது. அப்படியானால் யாக்கோபின் மொத்தக் குடும்பமே கண்ணீர் வடித்த இந்தப் பெண்மணி யார்?
ஆதியாகமத்தில் 5 பெண்களின் மரணம் எழுதப்பட்டு இருக்கிறது! சாராள், ரெபெக்காள், தெபோராள், ராகேல், லேயாள். ஆபிரகாமின் குடும்பத்தினரின் பட்டியலில் இடம்பெற்ற இந்த தெபோராள் யார்?
யார் இந்த தாதி??????? இவள் ரெபெக்காள் ஈசாக்கை மணக்கப் புறப்பட்டபோது, அவளோடு தன் தாயின் வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டப் பணிப்பெண்ணா? இவள் எப்படி , எப்பொழுது யாக்கோபிடம் வந்தாள்?
யாக்கோபின் குடும்பம் சீகேமில் கூடாரமிட்டுத் தங்கியிருந்த போது ஒருவேளை யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை பார்க்க எபிரோனுக்கு சென்றிருக்க வேண்டும். அங்கு அவன் தன் தாய் ரெபெக்காள் மரித்துவிட்ட செய்தியை கேட்டு விட்டு, அவள் தாதியை தன்னோடு அழைத்து வந்திருக்க வேண்டும். தன் தாயை மறுபடியும் காண முடியவில்லையே என்று அவன் ஏங்கி தவித்தபோது, இந்த வயதான தாதி, அவனை சிறுவயதில் வளர்த்தவள் அவனுக்கு தன் தாயைப் போன்ற உணர்வைக் கொடுத்திருப்பாள். அவளைக் கண்டது யாக்கோபுக்கு எத்தனை சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்? அவன் இழந்து போன தாயே கிடைத்தது போல இருந்திருக்கும்!
தெபோராள் 160 வயதில் மரித்திருக்கக் கூடும் என்கிறார்கள் வேதாகம வல்லுநர்கள். ஏனெனில் அவளை ரெபெக்காளின் தாதி என்று வேதம் சொல்கிறது. தாதி என்றால் அவளை வளர்க்கும்படி ஏற்படுத்தப்பட்ட பணிப்பெண். ஆகையால் இந்த தெபோராள் ரெபெக்காளை வளர்த்தது மட்டுமல்லாமல், அவல் ஈசாக்கை மணக்க வந்தபோது அவளோடு வந்தவள். ரெபெக்காளுக்கு 20 வருடங்கள் குழந்தை இல்லாதிருந்தது என்று நமக்குத் தெரியும். ஒரு தாயைப் போல ரெபெக்காளுக்கு ஆதரவாய் இருந்திருப்பாள் இந்தப் பெண்.
இப்பொழுது அவள் மரித்தபோது அந்த குடும்பம் மிகவும் துக்கித்ததைப் பார்க்கிறோம். யாக்கோபு தான் உயிராய் நேசித்த தாயோடு இருந்த கடைசி தொடர்பு அறுந்துவிட்டது. இது அவனுக்கு எவ்வளவு துக்கத்தைக் கொடுத்திருக்கும்? இவளுக்குக் கொடுக்கப்பட்ட அடக்கம் ஒரு ராஜ குலத்தாய்க்குக் கொடுக்கப்பட்டது போல இருந்தது. அப்படியானால் அந்த தெபோராளுக்கு அந்தக் குடும்பத்தினர் மத்தியில் எவ்வளவு மரியாதை இருந்திருக்கும்!
அருமையான தேவனுடைய பிள்ளைகளே! கர்த்தருடைய பார்வையில் பணக்காரரோ ஏழைகளோ, எஜமானரோ வேலைக்காரரோ யாராயிருப்பினும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை! ஒரு தாதியின் பெயரை தாம் தெரிந்து கொண்ட சந்ததியினரான சாராளோடு, ரெபெக்காளோடு, ராகேலோடு, லேயாளோடு இடம் பெற வைத்த தேவன் சற்றும் பாரபட்சம் இல்லாத அன்புடையவர் என்று தெரிகிறது! தாழ்மையிலுள்ளவர்களை அவர் நோக்கிப் பார்க்கிறார்! உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்றில்லை! தாழ்மையிலிருந்த இந்த அடிமையை நேசித்த தேவன் உன்னையும் நேசிக்கிறார்! ஆமென்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்