ஆதி: 35:16 – 19 “ பின்பு பெத்தேலை விட்டு பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னுங்கொஞ்சம் தூரம் இருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று.
பிரசவிக்கும்போது அவளுக்கு கடும் வேதனையாயிருக்கையில் மருத்தவச்சி அவளைப் பார்த்து , பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றார். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள் . அவன் தகப்பனோ அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.”
நேற்று நாம் ரெபெக்காளின் தாதி மரித்து அடக்கம் பண்ணப் பட்டதைப் பற்றி பார்த்தோம். யாக்கோபுக்கு தாயைப் போல இருந்த அவளை இழந்த துக்கம் மாறும் முன் யாக்கோபை இன்னும் ஒரு பேரிடி தாக்கியது. சில மைல் தூரமே அந்த குடும்பம் சென்றிருக்கும், ராகேலுக்கு கடும் பிரசவவேதனை உண்டாயிற்று. மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில் அநேக பெண்கள் பிரசவ வேதனையில் புதிய ஜீவனை உலகத்துக்கு கொண்டுவந்து தங்கள் ஜீவனை விட்டனர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ராகேலுக்கு உண்டாயிற்று.
ராகேலுக்கு மரண வேதனை உண்டாகி அவள் மரிக்கும் தருவாயில் தன் மகனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்.
இதைப் படிக்கும் நாம் ஒவ்வொருவ்ரும் இந்த வேளையில், பிறக்கும் பொழுதே தாயை இழந்த குழந்தைகளை நினைக்கத் தவறக் கூடாது. தாயில்லாத குழந்தைகள் மேல் நாம் அன்பு காட்ட தவறாகக் கூடாது. பெற்ற தாயின் முகத்தை பார்க்காத குழந்தைகள் தாயன்புக்காக ஏங்க மாட்டார்களா? அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு உதவும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால் ஒரு தாயின் அன்பை சிறிதாவது அந்த குழந்தைக்கு கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்!
சரி! இப்பொழுது நம் பிரயாணத்துக்கு வருவோம்! நம்மில் பெரும்பாலோர் கர்த்தரை துதிப்பது எப்பொழுது தெரியுமா? வாழ்வின் சூழ்நிலை அமைதியாக, கஷ்டங்கள் இல்லாமல் இருக்கும்போதும், கடனில்லாமல் வாழும்போதும், நோயில்லாமல் சுகமாக வாழும்போதும், பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும்போதும், மரணம் என்ற வேதனை தொடாமல் இருக்கும்போதும் தான். அப்பொழுதுதான் என் தேவனை நான் நேசிக்கிறேன், ஸ்தோத்தரிகிறேன், மகிமைப்படுத்துகிறேன் , அவர் என்னை கரம் பிடித்து நடத்துகிறார் என்றெல்லாம் பேசுவோம்! ஆனால்!!!!! ஆனால் ஒருவேளை நம் குடும்பத்தில் ஒருத்தருக்கு திடீரென்று ஒரு நோய் தாக்கி விட்டால்… நாம் நேசிக்கிற ஒருவர் ஒரு விபத்தில் மரித்து விட்டால்…….நம் வியாபாரம் தோல்வியடைந்து பெருங்கடனில் விழுந்து விட்டால்……. அப்பொழுதும் நம் ஆண்டவர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவராக நம் வாழ்க்கையில் இருப்பாரா?
சிலக் கிறிஸ்தவ போதகர்கள் தங்களுடைய போதனையில், விசுவாசிக்கும் நமக்கு நோய் நொடிகள் வராது, கஷ்டங்கள் எல்லாம் ஓடிப்போகும், பணத்தேவைகள் எல்லாம் சந்திக்கப்படும் என்றல்லவா பிரசங்கிக்கிறார்கள்? அப்படிப்பார்த்தால் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையை விட்டுக்கொடுத்து, ஆப்பிரிக்க நாட்டுக்கு ஊழியராக சென்ற மருத்துவர் டேவிட் லிவிங்ஸ்டன் , தன் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் எத்தனை என்று தெரியுமா? அவர் விசுவாசி மட்டுமல்ல, தேவனுக்காக ஊழியம் செய்ய சென்றவர் தானே! அவருக்கு ஏன் அத்தனை கஷ்டங்கள்?
வேதத்தில் யோபு எத்தனை பாடுகள் பட்டான் என்று படிக்கிறோம். அத்தனை வேதனைகளின் மத்தியிலும் அவன் என்ன சொன்னான் பாருங்கள்! (யோபு: 13:15) “ அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்”என்று.
ராகேல் தன் மரண வேதனையில் தன் குழந்தையை பென்….ஓ ….னி …… பெனோனி என்று அழைத்தாள். அதற்கு ‘ என் வேதனையின் குமாரன்’ என்று அர்த்தமாம். ஆனால் தேவன் அவள் வேதனையைக் கண்நோக்கிப் பார்த்தார். அவள் குழந்தையின் பெயரை உடனே மாற்றி தன் ‘வலது கரத்தின் குமாரன்’ (மதிப்புக்குரியவன்) என்ற அர்த்தத்தில் பென்யமீன் என்று பெயரிட கர்த்தர் அங்கு யாக்கோபை வைத்திருந்தார்.
இன்று யாராவது இப்படிப்பட்ட மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வேதனையை, வலியை, துடிப்பைக் கர்த்தர் அறிவார். உங்கள் வேதனையின் முணங்கல் கர்த்தர் காதில் விழுகிறது.
ராகேலுடைய பிள்ளைகளை கர்த்தர் ஆசிர்வதித்தார். அவள் குமாரன் யோசேப்பு எகிப்து நாட்டில் இலட்சக்கணக்கான மக்களை பஞ்சத்திலிருந்து காத்த பெருந்தலைவன் ஆனான். அவள் குமாரன் பென்யமீனின் கோத்திரத்தில் வந்தவர் தான் அப்போஸ்தலனாகிய பவுல் அடியார். என்ன ஆசீர்வாதம் பாருங்கள்? புறஜாதியாராகிய நமக்கு சுவிசேஷத்தை கொடுத்த பவுல் தன்னை பென்யமீன் கோத்திரத்தான் என்று பிலிப்: 3:5 ல் கூறுகிறார்.
நம் வாழ்க்கையில் இன்று நடக்கும் பல வேதனையான காரியங்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாமல் நாம் திகைக்கலாம் ஆனால் அவற்றின் அர்த்தத்தை தெரிந்த தேவன் நம்மோடு இருக்கிறார், அவர் மேல் நம்பிக்கையாயிருப்போம்! பென்… ஓ…னி யை பென்யமீன் ஆக மாற்றி இந்த உலகையே ஆசீர்வதித்த தேவன் உன் வேதனையையும் ஆசீர்வாதமாக மாற்றுவர்! விசுவாசி!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்