தனித்திருந்து எறேடுக்கும் ஜெபம்!
லூக்கா: 5:16 “அவரோ வனாந்தரத்தில் தனித்து போய் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்”
ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள்.
இன்றைய வேத வசனத்தில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் தனித்திருந்து ஜெபித்தார் என்று பார்க்கிறோம்.
கர்த்தராகிய இயேசு ஜனங்களுக்கு போதித்து, சுகமாக்கி, அநேக அற்புதங்களைச் செய்த போது, அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு திரளான ஜனங்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அப்படிப்பட்ட மிகவும் பரபரப்பான, ஓய்வில்லாத வேலைகளில் கூட அவர் தனித்து போய் ஜெபிக்க ஆரம்பித்து விடுவார்!
நாம் தனித்திருந்து ஜெபித்து எத்தனை நாட்களாயிற்று? எங்கே எனக்கு நேரம் இருக்கிறது என்பது தானே உங்கள் பதில். நாம் காலையில் எழுந்து வேதம் வாசித்து நம்முடைய தேவைகளுக்காக ஜெபிப்பதும், இரவு படுக்கும் முன் நம்முடைய குடும்பத்தோடு ஜெபிப்பதும் ஜெப வாழ்க்கைக்கு அடையாளமல்ல! அது ஒரு சாதாரண கிறிஸ்தவ வாழ்க்கை! ஆனால் தனித்திருந்து தேவனுடைய முகத்தை நாடி, அவரோடு பேசி, உறவாடி, அவருடைய சித்தத்தை அறிந்து நம்முடைய வாழ்க்கையை அவருடைய கரத்தில் ஒப்புவிக்கும் அனுபவம் எங்கே போயிற்று!
நம்முடைய எல்லா வேலைகளின் மத்தியிலும்,சற்று நேரம் தனித்திருந்து நம் தேவனோடு செலவிடுவோம்.அவரோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக மாறும்! வாருங்கள் ஜெபிப்போம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com