ஆதி: 37:3 “ இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்கு பிறந்ததினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்கு பலவருணமான அங்கியை செய்வித்தான்”
இந்தப் புதிய மாதத்தை நாம் காண உதவி செய்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த மாதம் நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும்படியாக ஜெபிப்போம்!
அப்பாவுக்கு தம்பியை தான் மிகவும் பிடிக்கும், அவனுக்கு தான் எல்லாம் செய்வார்கள், அம்மாவுக்கு அக்கா தான் உயிர், அவளுக்குத்தான் எல்லாம் கிடைக்கும், நான் என்றால் ஆகாது… என்றெல்லாம் பிள்ளைகள் குறை கூறுவதை கேட்கிறோம். இந்த பிள்ளைகள் தாய் தகப்பனை நேசித்தாலும், அந்த பாசத்தின் நுனியில் ஒரு சிறிய மனஸ்தாபம்.
இது நம் குடும்பங்களில் மாத்திரம் அல்ல, பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த யாக்கோபின் குடும்பத்திலும் நடந்தது. இதற்கு காரணம் உண்டு.
நாம் சற்று பின்னால் பார்ப்போம்! யாக்கோபுக்கு இரண்டு மனைவிகள், ராகேலும், லேயாளும். ராகேலுக்கு இரண்டு பிள்ளைகள் யோசேப்பும், பென்யமீன் இருவரும், லேயாளுக்கு ஆறு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண்பிள்ளை தீனாளும் இருந்தனர். அவனுடைய இரண்டு பணிப்பெண்கள் மூலம் அவனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
ஏசாவின் படை அவனுக்கு எதிராய் வருவதை அறிந்து அவன் தன் பணிபெண்களையும், அவர்கள் பிள்ளைகளையும், முன் வரிசையிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் அடுத்த வரிசையிலும், ராகேலையும் யோசேப்பையும் மிகுந்த பாதுகாப்பான வரிசையிலும் நிறுத்தினான் என்று பார்த்தோம். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் யோசேப்பின் இடத்தைத் தவிர என்னை எங்கு நிறுத்தியிருந்தாலும் என்னுடைய தகப்பனை மன்னித்திருக்கவே மாட்டேன்.
ராகேல் மரித்தாள். யாக்கோபு அவள் பிள்ளைகள் இருவரையும் அதிகமாக நேசித்தான். அவன் எல்லாரையும் விட யோசேப்பை மிக அதிகமாக நேசித்தான்.அவன் யாக்கோபின் முதிர்வாயதில் பிறந்தவன் என்று வேதம் சொல்கிறது. யோசேப்பு பிறந்தபோது யாக்கோபுக்கு 91 வயது. யோசேப்பின் பிறப்புக்குக்காக அவன் அதிகமாய் நேசித்த அவன் மனைவி ராகேலும் அவனும் எவ்வளவாய்க் காத்திருந்திருப்பார்கள். யோசேப்புக்கு பின்னால் அவர்களுக்கு பென்யமீன் பிறந்திருந்தாலும் அவர்கள் காத்திருந்து பெற்ற செல்வம் யோசேப்புதானே! அவன் மீதுதான் அலாதி அன்பு!
யோசேப்பு அவனுடைய தகப்பனின் செல்லக் குமாரன் தான் ஆனால் அவனுடைய சகோதரருக்கு செல்லத் தம்பி இல்லை!யாக்கோபு பல வருண அங்கியை செய்து யோசேப்பை உடுத்துவித்தது சகோதரருக்குள் பொறாமை என்ற புகையை ஊதி விட்டது போலாகிவிட்டது.
ஆதி:37:4 கூறுகிறது அவன் சகோதரர் அவனிடம் பட்சமாய் பேசுவதை கூட நிறுத்தி விட்டார்கள்.
இந்த சமயத்தில் தான் யோசேப்பு தான் கண்ட சொப்பனத்தில் எல்லாரும் தன்னை வணங்குவதை கண்டதாக பறை சாற்றுகிறான். இது புகைந்த நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல ஆயிற்று. அவன் சகோதரர் அவனைப் பகைத்தார்கள் என்று வேதம் சொல்கிறது.
யோசேப்புக்கு 17 வயதும், பென்யமீனுக்கு 4 வயதும் ஆகி இருந்தது. இந்த பின்னணியில், ஒருநாள் யாக்கோபு, யோசேப்பை அழைத்து சீகேமில் ( சமாரியா) ஆடுகளை மேய்க்க சென்ற உன் சகோதரரின் சுகத்தைக் கண்டு வா என்று அனுப்பினான். யோசேப்பு அவர்களை தோத்தானில் கண்டு பிடிக்கிறான்.
ஆதி:37:18 கூறுகிறது அவன் தூரத்தில் வரும்போதே அவன் சகோதர்கள் அவனைக் கண்டு அவனை கொலை செய்ய வகை தேடினார்கள் என்று.
ரூபன் அவனைத் தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்கள் திட்டத்தை மாற்றி அவனை ஒரு குழியில் தள்ளி விடும்படி கூறுகிறான், ஆனால் துஷ்ட குணம் உள்ள யூதா அவனை இஸ்மவேலருக்கு விற்று விட ஆலோசனைக் கொடுத்தான். தங்கள் காலில் குத்திய முள்ளை பிடுங்கி விடுவதாக நினைப்பு போலும்!
அவர்கள் யோசேப்பின் பல வருண அங்கியை எடுத்து ரத்தத்தில் தோய்த்து யாக்கோபுக்கு காட்டி துஷ்ட மிருகம் அவனை பட்சித்தது என்றார்கள். யாக்கோபை இது எவ்வளவாய் பாதிக்கும் என்ற அவர்கள் அப்பொழுது உணரவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் யாக்கோபு வேதனையில் துடித்த போது அவர்கள் குற்ற உணர்வு அவர்களை எப்படி வாட்டியிருக்கும்? இப்படிப் பட்ட பொறாமைக்கும், கொலை வெறிக்கும், வஞ்சனைக்கும் அவர்கள் எப்படி தள்ளப் பட்டார்கள்? சிறு வயதில் அவர்கள் மனதில் விதைக்கப்பட்ட விதை தானே?
யோசேப்பின் வாழ்வை அவர்கள் வேதனையில் ஆழ்த்தினாலும், தேவனாகிய கர்த்தர் அவன் வாழ்வின் முடிச்சுகளை எவ்வாறு நீக்கி அவன் மூலமாய் தன்னுடைய சித்தத்தை எவ்வாறு நிறைவேற்றினார் என்று பார்ப்போம். மனிதர் ஒன்று நினைக்கலாம் ஆனால் கர்த்தர் வேறொன்றையல்லவா நினைக்கிறார்! உன்னைகுறித்தும் கர்த்தராகிய தேவன் நினைத்திருப்பது உன்னை வாலாக்க அல்ல தலையாக்கவே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்