ஆதி: 38:6,7 “யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.”
நேற்று நாம் யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்று போட்டதைப் பற்றி பார்த்தோம். யோசேப்பின் வாழ்வை நாம் தொடரு முன் வேதத்தில் தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் (மத்: 1:3) இடம் பெற்ற இந்த பெண் யார்? இவள் கதை எதனால் வேதத்தில் இடம் பெற்றுள்ளது? நமக்கு என்ன போதிக்கிறது? என்று சில நாட்கள் தியானிப்போம்.
ஆதி: 49:10 யூதாவின் குலத்தில் சமாதானக் கர்த்தர் உதிப்பார் என்று கூறுகிறது. அதனால் யூதாவின் குடும்பத்தில் நடந்த எல்லா சம்பவங்களுமே ஆதியாகமத்தில் முக்கியமான இடம் பெற்றுள்ளன. ஆதி 37 ல் யோசேப்பு விற்கப் படுவதையும், 39 ல் அவனுடைய வாழ்க்கை போத்திபார் வீட்டில் தொடர்வதையும் படிக்கிறோம். ஆனால் இடையில் இந்த 38 ம் அதிகாரம், யூதா, தாமார் கதையை நமக்கு கூறாமல் இருக்குமானால், மத்தேயு இயேசுவின் வம்ச வரலாறு எழுதியதில் இடம் பெற்ற தாமார், பாரேஸ் இவர்கள் யாரென்று நமக்கு தெரியாமல் போயிருக்கும் அல்லவா!
சற்று நினைவு படுத்திப் பாருங்கள்! யாக்கோபின் புத்திரர், அவர்கள் சகோதரி தீனாளைக் கெடுத்த சீகேமை நடத்திய விதம் ஞாபகம் உள்ளதா?
தீனாளைத் திருமணம் செய்ய தயை செய்யுமாறு சீகேம் வேண்டி நிற்கையில், அவன் கானானியன் என்பதால், அவனையும், அவன் பட்டணத்தார் அனைவரையும் பட்டய கருக்கினால் வெட்டிக் கொலை பண்ணினார்கள். சில அதிகாரங்களே கடந்து வருகிறோம்! இங்கு யாக்கோபு லேயாள் தம்பதியினருக்கு பிறந்த நான்காவது புத்திரனாகிய யூதா ஒரு கானானியப் பெண்ணாகிய சூவாவை கண்டு, விவாகம் பண்ணி, அவளோடே சேர்ந்தான் என்று பார்க்கிறோம்.
ஒரு நிமிஷம்!!! இவனுக்கும், தீனாவை விரும்பிய சீகேமுக்கும் என்ன வித்தியாசம்? ஆபிரகாமும், ஈசாக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு கானானியரில் பெண் கொள்ளக் கூடாதென்று அக்கறை காட்டினர், ஏனெனில் உடன்படிக்கையின் பிள்ளைகளாகிய இவர்கள், கானானியருடைய விக்கிரகங்களுக்கும், விபசாரங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்பதால் தான்.ஆனால் யாக்கோபின் பிள்ளைகளிடம் அந்த ஒழுக்கம் காணப்படவில்லை! அவர்கள் தங்கள் தகப்பனாகிய ஆபிரகாமும், ஈசாக்கும் வெறுத்த பாவத்தை செய்தனர் என்று பார்க்கிறோம்.
யூதாவுக்கு மூன்று புத்திரர் பிறந்தனர். மூத்தவன் பேர் ஏர். அவனுக்குத் திருமண வயதான போது, யூதா அவனுக்குத் தாமார் என்ற பெயருள்ள கானா பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறான்.ஆதி 38:7 ல் வேதம் கூறுகிறது, கர்த்தர் ஏர் என்பவனை அழித்துபோட்டார் ஏனெனில் அவன் கர்த்தர் பார்வைக்குப் பொல்லாதவனாய் காணப் பட்டான் என்று. தேவனுடைய இந்த நியாயத்தீர்ப்பை பெறும் அளவுக்கு அவன் என்ன பாவம் செய்தான் என்று நமக்குத் தெரியாது! ஆனால் அவன் உயிர் வாழும் தகுதியை இழந்தான் என்று அறிகிறோம்.
தேவன் தம்முடைய கரத்தினால் அவனை அழிக்கும்படி வாழ்ந்த அவன் தன் மனைவியை எப்படி நடத்தியிருப்பான்? ஒரு கணம் சிந்தியுங்கள்! இதைப் பற்றி வேதம் நமக்குக் கூறாவிட்டாலும், கர்த்தர் இந்தப் பெண் தாமாரின் மேல் காட்டிய மிகுந்த கிருபைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா? இந்த பெண்ணை அவன் இரக்கமில்லாமல் நடத்தியதால் கர்த்தர் அவனை அழித்திருப்பாரோ?
ஏரை தேவன் அழித்த பின், யூதா தன் இரண்டாவது குமாரன் ஓனானை தாமாரின் மூலமாய் அவன் தமையனுக்கு சந்ததி உண்டாக்க சொல்கிறான். அவன் தாமாருக்கு ஒரு குழந்தையை கொடுக்க விரும்பாமல், அவளை பாலியலினால் அவமதிக்கிறான். தாமாருக்குக் குழந்தை பிறந்தால் அது தன்னுடைய அண்ணனுடைய சந்ததியாகத்தான் கருதப்படும் என்பது அவனுக்குத் தெரியும். அதை அவன் விரும்பவில்லை!அவனுடைய செயல் கர்த்தருடைய பார்வையில் பொல்லாததாயிருந்ததால் அவனையும் அழித்துபோட்டார் என்று வேதம் சொல்கிறது.
இப்பொழுது யூதாவுக்கு மிஞ்சியது ஒரே ஒரு குமாரன் சேலா என்பவன் தான். அவனும் அழிந்து விடுவானோ என்ற பயத்தில் யூதா, தாமாரை நோக்கி, சேலா பெரியவனாகும் வரைக்கும் உன் தகப்பன் வீட்டிலேயே கைம்பெண்ணாகத் தங்கியிரு என்று சொன்னான். இளம் வயதிலேயே ஒரு விதவையாக தாமார் தன்னுடைய தகப்பன் வீட்டுக்கு அனுப்பப்பட்டாள். முறைப்படி அவள் சேலாவை மணந்திருக்க வேண்டும். ( உபா:25:5-10) ஆனால் அவளுடைய உரிமை பறிக்கப்பட்டது.
சேலா பெரியவனான பின்பும், யூதா அவன் சொன்ன வார்த்தையைக் காப்பற்ற வில்லை. அவள் விதவையாக, பிள்ளையில்லாதவளாக, மரித்து, எல்லோராலும் மறக்கப் பட வேண்டும் என்பது அவன் எண்ணம். அப்படி நடந்ததா? தாமாரின் பெயர் இன்று இயேசு இரட்சகரின் வம்ச வரலாறில், வேதத்தில் அல்லவா இடம் பெற்றிருக்கிறது! எவ்வளவு பெரிய கிருபையை அவர் தாமார் மீது காட்டியிருக்கிறார். அதே சமயம் சற்றும் தேவ பயமில்லாமல் வாழ்ந்த யூதாவின் கோத்திரம் எவ்வாறு மேசியாவின் பிறப்புக்காகத் தெரிந்து கொள்ளப்பட்டது என்ற கேள்வி வரும்! கிருபை தான்! நாம் பாவிகளாயிருக்கையில் நம்மைத் தெரிந்து கொண்ட அதே கிருபைதான் அதற்கு பதில்!
ஒரு காரியத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன்! பெண்களுக்கு சரீரரீதியாகவோ, மனரீதியாகவோ இழைக்கப்படும் துன்பத்தைக் கர்த்தர் பார்க்கிறார். பெண்களே! இது உங்கள் மனதில் பதியட்டும்! இரக்கமுள்ள கர்த்தர், உன் உள்ளத்தை வார்த்தைகளால் குத்துகிறவனைப் பார்க்கிறார்! உன்னைக் காலால் உதைப்பவனைப் பார்க்கிறார்! உன்னை சரீரரீதியாய் வதைக்கிறவனைக் காண்கிறார்! இன்று ஒருவேளைத் தாமாரைப்போல உங்கள் உரிமைகள் பறிபோய் எல்லாவற்றையும் இழந்து நீங்கள் நிற்கலாம்! பயப்படாதீர்கள்! அவருடைய இரக்கம் உங்களை விட்டு விலகாது. தாமாரைக் கண்ட தேவன்உங்களையும் காண்கிறார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்