ஆதி: 38:16 ( யூதா ) அந்தவழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடம் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள்.
தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்து தன்னை வேசியைப்போல அலங்கரித்து, முக்காடிட்டு, திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமர்ந்தாள் என்று பார்த்தோம். இந்த திம்னா என்ற ஊர் எபிரோனுக்கு தெற்காக ஏழு மைல் தூரத்தில் இருந்தது.
ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்கும் காலம் அது, ஆதலால் யூதா தன் சிநேகிதனுடன் சேர்ந்து தன் மந்தையை மயிர்கத்தரிப்பதர்காக திம்னாவுக்கு சென்றான். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதக் கடைசியில் நடக்கும் ஒரு சம்பவம் இந்த சம்பவத்துக்கு பெரிய மந்தைகளின் சொந்தக்காரரான பணக்காரர்கள் தங்கள் நண்பர்களுடன் செல்வது வழக்கம். யூதா அங்கு வருவது தாமாருக்குத் தெரிந்திருக்கும்!
யூதாவின் மனைவி சூவா இறந்து சில காலமே ஆகியிருந்தது. மனைவியில்லாத அவனுக்கு பெண் சுகம் தேவைப்பட்டது. அந்த காலத்தில், வேலை சம்பந்தமாக, சொந்த ஊரை விட்டு சென்றவர்கள் வேசியிடம் தங்கள் தேவையை நிவிர்த்தி செய்வது ஒன்றும் புதிதான காரியம் அல்ல என்று வேதாகம வல்லுனர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட செயல் இன்றைய சமுதாயத்தில் கூட புதிதான காரியம் அல்ல என்பது தான் வருந்தத்தக்க விஷயம்.
யூதா தன் இச்சையை பூர்த்தி செய்ய ஏதாவது ஒரு பெண் கிடைப்பாளா என்ற தேடினான் என்று பார்க்கிறோம். இன்றைய நமது சமுதாயத்தில், எத்தனை ஆண்கள் தாம் வேலை செய்யும் இடத்தில் தங்கள் ஆசையை நிறைவேற்ற யாராவது பெண்கள் கிடைப்பார்களா என்று தேடுகிறார்கள்! பெண்களும் கூட யாராவது ஆண் கிடைத்தால் அவனைக் கைக்குள் வைத்துக்கொண்டு, அவன் மூலம் தங்கள் காரியத்தை சாதிக்கலாம் என்று அலைவதில்லையா? இதனால் இன்று எத்தனை பேருடைய குடும்பங்கள், எத்தனை பேரின் வாழ்க்கை பாதிப்புள்ளாகியிருக்கிறது!
நம்மில் யாராவது இப்படி ஒரு பெண்ணினால் அல்லது ஒரு ஆணினால் அவர்களது சுயநலத்துக்காக உபயோகப்படுத்தப் பட்டிருப்போமோனால், இந்த வலியின் கொடுமை நமக்கு தெரியும்!
யூதாவுடைய காமம், அவன் கண்களை மூட, அவன் முக்காடிட்ட ஒரு கானானிய வேசியைப் பார்த்தானேயொழிய, தன் வீட்டில் மகளாய் வாழ்ந்த தன் மருமகளைக் காணவில்லை. முக்காடிட்டிருந்த தாமாரை அடையாளம் தெரியாமல் ஒரு வேசி என்று எண்ணினான். அவளுடைய வெளிப்புற அலங்காரம் அவனை வேசி என்று நம்ப வைத்தது.
தேவனுடைய பிள்ளைகளே, நாம் எத்தனை முறை யூதாவைப் போல நம் வாழ்வில் இப்படித் தவறான முடிவுகளை எடுத்திருக்கிறோம்? நான், எனக்கு, என்ற சுயநல ஆசைகள் நம் உள்ளத்தை நிரப்பும் போது, நம் கண்கள் மங்கிப் போகின்றன. நாம் யாரை ஏமாற்றி நம் தேவையை பூர்த்தி செய்யலாம் அல்லது காரியத்தை சாதிக்கலாம் என்று நினைப்போமே தவிர, அதனால் பாதிக்கப்பட போகிறவர்களைப் பற்றி சிறிது கூட நினைப்பதில்லை.
யூதா அவளை தன் இச்சைக்கு உபயோகப்படுத்த விரும்பினானே தவிர, அவளுக்கு கொடுக்க அவன் கரத்தில் ஒன்றுமே இல்லை. வெறும் கையுள்ளவனாய் இப்பொழுது என்னிடத்தில் சேரு, பின்னர் உனக்கு ஒரு வெள்ளாடுக்குட்டியைத் தருகிறேன் என்று கேவலமாக வெட்கமின்றி பேரம் பேசுவதைப் பார்க்கிறோம். என்ன வருத்தத்துக்குரிய காரியம்! நாம் மற்றவர்களை ‘சுயநலமாய் உபயோகப்படுத்தும்போது’ நம் தேவைகள் தான் நம் கண்ணில் படுகிறதே தவிர, மற்றவர்களுடைய மன வலியும், மன உளைச்சலும் நம் கண்ணில் படுவதேயில்லை!
பிலிப்: 2:3.4 ல் பவுல் கூறுகிறார், “ ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.”
நாம் ஒவ்வொருவரும் பிறரை மதிக்கவும், பிறரை நம்மைவிட மேன்மையானவர்களாக நடத்தவும் கற்றுக்கொண்டால் , இன்றைய சமுதாயத்தில் , தாமாரைப் போல ஒருவரும் , ஏமாற்றப்படுதல், உபயோகப்படுத்தபடுதல் , என்ற வேதனையையும், வலியையும் மறைத்து முக்காடிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை!
சுயநலமாய் வாழ்வது என்பது நாம் விரும்பிய விதமாய் வாழ்வது அல்ல!
மற்றவர்களை நாம் விரும்பிய விதமாய் உபயோகப்படுத்துவதுதான்!
இன்று உன்னுடைய சுயநலம் யாருடைய வாழ்க்கையையாவது பாதித்திருக்கிறதா? பாதித்துக்கொண்டிருக்கிறதா? கேவலமாய் சுயநலமாய் தவறான உறவுகளுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? இன்றே விட்டு விடு! இது வேதம் கொடுக்கும் எச்சரிக்கை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்